தமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்..!
தமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்..!
1965 மொழிப் போரின் 50 ஆம் ஆண்டு நினைவாக தமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி...தி.பி. 2046 ஆனி 25 - 10.7.2015 வெள்ளி அன்று சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்..!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
தமிழ் மொழி காக்க - இந்தித் திணிப்பைத் தடுக்க 1965இல் தமிழகம் தழுவி வெடித்த மொழிப்போர் நிகழ்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தித் திணிப்பை எதிர்க்கும் முதல்போர் 1938இல் தொடங்கியது.
அயல்மொழி ஆதிக்கத்தைத் தடுக்கத் தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க்காப்பு முயற்சிகள் தொடங்கின. தொல்காப்பியரே, வடமொழி எழுத்துகளை அப்படியே தமிழில் எழுதக்கூடாது என்றார்.
மறைமலை அடிகள் 1916 இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம், சமற்கிருதத் திணிப்பைத் தடுக்கவும் மற்ற அயல் மொழிகளின் நுழைவைத் தடுக்கவும் நிறுவப்பட்டதுதான்.
அதுவரை கருத்தியல் போராகவும் அடையாளப் போராட்டங்களாகவும் நடந்து வந்த தமிழ்மொழி காக்கும் நடவடிக்கைகள் 1965இல் மக்கள் போராக வெடித்தது. 1965 சனவரி 25 தொடங்கி மார்ச்சு 15 வரை 50 நாள் மாணவர்களும் மக்களும் சேர்ந்து நடத்திய தமிழ்த் தேசியப் போர் அது. இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி மாணவர்களையும் மக்களையும் சுட்டுக் கொன்றது. 300 பேர்க்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். பத்துப் பேர் வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தனர்.
1965 சனவரி 26 முதல் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் இந்திய அரசு அலுவலகங்களில் நிறுவனங்களில் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்ற அரசமைப்புச் சட்ட விதியை (343) எதிர்த்துதான் 1965 மொழிப்போர் வெடித்தது.
தாய்மொழி காக்க இவ்வளவு பெரிய மக்கள் போர் வேறு எந்த நாட்டில் நடந்தது? தாய்மொழி காக்க இத்தனை பேர் உயிரிழந்த ஈகம் வேறு எங்கும் நடைபெறவில்லை.
இத்தனைக்கும் பிறகு தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன?
தமிழக அரசுப்பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் 1ஆம் வகுப்பு முதல் ஆங்கிலம் பயிற்று மொழியாக (மீடியமாக) இருக்கிறது. அதுபோல் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய மொழிப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுவண் அரசின் ஏற்பிசைவு பெற்ற சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகளில் தமிழ் ஒரு மொழிப்பாடமாக இருக்க வேண்டியதில்லை. அவற்றில் இந்தி கட்டாய மொழிப்பாடம்! தமிழகக் கல்வியில் தமிழக அரசு ஆங்கிலத்தைத் திணிக்கிறது, இந்திய அரசு இந்தியைத் திணிக்கிறது.
கல்வி வணிகர்கள் தமிழைப் புறந்தள்ளி, ஆங்கிலம், இந்தி இரண்டையும் காட்டி, சதைக் கவர்ச்சி வணிகம் போல், மொழிக் கவர்ச்சி வணிகம் செய்கின்றனர்.
1938 மொழிப்போர் ஈகம், 1965 மொழிப்போர் ஈகம் ஆகியவற்றைச் சொல்லி வளர்ந்து ஆட்சியைப் பிடித்த தி.மு.க. , அதிலிருந்து பிரிந்த அதிமுக ஆகிய திராவிடக் கட்சி ஆட்சிகள் ஆங்கிலத் திணிப்பைத் தீவிரப்படுத்தின. இந்தித் திணிப்பை எதிர்க்கவில்லை!
முற்போக்கு இயக்கம், பகுத்தறிவு இயக்கம், தமிழ்காக்கும் இயக்கம் என்று நம்பி தமிழ்மக்கள் ஏற்றுக் கொண்ட திராவிட இயக்கம் ஆங்கில ஆதிக்கத்திற்கும் இந்தித் திணிப்புக்கும் கதவு திறந்துவிடும் கங்காணியாக மாறிய பின் மக்கள் மனத்தில் குழப்பம் ஏற்பட்டது.
ஆங்கிலம் கற்றால்தான், இந்தி கற்றால்தான் நம் பிள்ளைகளுக்கு எதிர்காலம் உண்டு!. தமிழை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழ் மக்கள் குழம்பினர்! ஆங்கிலத்தை மொழிப்பாடமாகக் கற்றால் மட்டும் போதாது. அறிவியல், வரலாறு உள்ளிட்ட அனைத்தையும் ஆங்கில மொழியிலேயே கற்க வேண்டும் என்று 24 மணி நேர எச்சரிக்கை உணர்விற்கு மக்கள் மாறினர்.
பெற்ற பிள்ளைகள் தங்களை அம்மா என்றோ, அப்பா என்றோ அழைத்தாலும் ஆங்கில அறிவு குறைந்து விடும் என்று அச்சப்பட்டு, மம்மி, டாடி என்று அழைக்கும்படிக் கட்டாயப்படுத்தினர்.
ஆங்கில வழிப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தனர். அங்கு மாணவர்கள் தமிழில் பேசினால் தண்டத் தொகை கட்டவேண்டும்.! பள்ளி கல்லூரி, வளாகத்தில் தமிழில் பேசினால் தண்டத் தொகை ( fine ) வசூலிக்கும் இந்தக் குற்றச் செயலின் மீது தி.மு.க. ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தாய் மொழி வழிக் கல்விதான் மாணவர்களின் அறிவை மேலும் மேலும் கூர்மைப்படுத்தும் என்பதான் உலகம் முழுவதும் உள்ள கல்வி உளவியல் அறிஞர்களின் கருத்து. வளர்ச்சியடைந்த வளர்ச்சி அடையாத அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் அனைத்திலும் தாய் மொழி வழிக் கல்விதான் இருக்கிறது.
இந்திய அரசு தன்னை ஏகாதிபத்திய அரசாகவும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களைக் காலனிகளாகவும்தான் கருதுகிறது. எனவே ஏகாதிபத்திய மொழியான இந்தியைத் திணிக்கிறது. தி.மு.க, அதிமுக தலைமைகளோ தமிழினத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளி திராவிட இனத்தை முதன்மைப்படுத்தின. அதனால் அவற்றிற்குத் தமிழைக் காக்கும் அக்கறையில்லை. தமிழ் வழிக் கல்வி பயில்வோர்க்குரிய வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஏற்பாடுகளை அவை செய்யவில்லை.
இன, மொழிக் காவலற்ற தமிழகக் கங்காணி அரசியலைப் புரிந்து கொண்ட இந்திய அரசு, தான் இயற்றிய சட்டங்களுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தனது நிறுவனங்களில் இந்தியையும் ஆங்கிலத்தையும் திணிக்கிறது.
மாநிலங்களில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் செயல்பட வேண்டிய அலுவல் மொழிச் சட்டம் 1963 இல் இயற்றப்பட்டது. அதில் 1976 இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த 1976 திருத்தச் சட்டத்தின்படி அந்த அலுவல் மொழிச் சட்டம் (ஒன்றியப் பணிகளுக்கானது) தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது. அலுவல் மொழிச் சட்டம் (ஒன்றியப் பணிகளுக்கானது) - 1976 - The official Languages (Use for Official purposes of the Union 1976 - விதி 1இன் படி மாநிலங்களில் உள்ள இந்திய அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்ற சட்டம் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது. ( They shall extend to the whole of India, except the State of Tamil Nadu).
1965 லும் அதன் பிறகும் தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டங்களின் விளைவாக இத்திருத்தம் தமிழ்நாட்டிற்கு விதி விலக்குக் கொடுத்துள்ளது. அந்தச் சட்டத்தின் படி தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். ஆனால் அங்கெல்லாம் தமிழ் அலுவல் மொழியாக இல்லை. இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே அலுவல் மொழியாக உள்ளன.
இந்திய அரசு ஒரு பக்கம் சட்டத்தைப் போட்டு விட்டு, மறுபக்கம் தமிழ் நாட்டை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் சட்டவிரோதமாக ஆங்கிலமும் இந்தியும் அலுவல் மொழியாக இருப்ப்தைத் தடுத்துத் தட்டிக் கேட்க - தமிழை அங்கெல்லாம் அலுவல் மொழியாக்கிடத் தமிழக ஆட்சியும் அரசியல் கட்சிகளும் முன்வரவில்லை.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் சென்னை உட்படப் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விண்ணப்பம் கொடுத்தது. அவ்விண்ணப்பத்துடன் மேற்படி ஒன்றிய அலுவல் மொழிச் சட்டத்திருத்தம் 1976 நகலையும் இணைத்து வழங்கியது. இவ்விண்ணப்பம் கொடுத்த இரண்டு மாதங்களில் தமிழை அலுவல் மொழி ஆக்கிடுமாறு வேண்டுகோளும் அதில் வைக்கப்பட்டது.
அப்போது (பிப்ரவரியில்) இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கவும் கண்காணிக்கவுமான நாடாளுமன்றக் குழுவினர் தஞ்சாவூர் வந்திருந்தனர். அக்குழுத் தலைவரிடம் மேற்கண்ட நமது விண்ணப்ப மடலைக் கொடுத்து நம் தோழர்கள் விளக்கினர்.
ஆனால் இதுவரை, இத்திசையில் எந்த நடவடிக்கையும் அந்த அலுவலகங்களின் அதிகாரிகள் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில்,
1. தமிழ் மொழி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும். தங்கள் தலைமையகத்துக்கு அனுப்பும் அறிக்கைகளை ஆங்கிலத்தில் அனுப்பிக் கொள்ளட்டும்.
2. எடுத்துக்காட்டாகத் தொடர் வண்டித் துறை (ரயில்வே) யில் பயணச்சீட்டு, முன்பதிவு விண்ணப்பங்கள் ஆகியவற்றில் முதல் இடத்தில் தமிழில் மட்டுமே விவரங்கள் இருக்க வேண்டும். பயணச்சீட்டு பதிவுப்பட்டியல் வெளியிடும்போது அதில் கட்டாயம் தமிழில் பயணி பெயர் படுக்கைஎண், பெட்டி எண் போன்றவை இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள எந்தத் தொடர்வண்டித்துறை அதிகாரிக்கும் தமிழில் கடிதம் கொடுக்கவும் தமிழில் பதில்பெறவும் ஆன நடைமுறை உடனடியாக வேண்டும்.
தொடர்வண்டித் துறை அலுவலகங்களுக்குள் எழுதப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். இந்தி, ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தக் கூடாது.
அஞ்சல் துறை எனில், அலுவலக்கப் பெயர்ப்பலகைகள் ஒவ்வொரு பிரிவின் பெயர்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். பணவிடைப் (மணி ஆர்டர்) பதிவும் அனுப்பும் படிவமும் தமிழில் இருக்க வேண்டும். கொடுக்கும் ரசீதுகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். தற்போது ஆங்கிலத்தில் உள்ளது. சேமிப்புக் கணக்கு உட்பட அனைத்துக் கணக்குகளும் தமிழில் இருக்க வேண்டும். அலுவலகத்திற்குள் எழுதப்படும் கணக்குகள் அறிக்கைகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.
இதே போல் தமிழ்நாட்டில் உள்ள வருமானவரி, உற்பத்தி வரி, சுங்கவரி அலுவலகங்கள், இராணுவத் தொழிற்சாலைகள், பிஎச்இஎல், நெய்வேலி தொழிலகங்கள், தலைமைக் கணக்காயர் அலுவலகங்கள், வாழ்நாள் ஈட்டுறுதி (LIC), பொது ஈட்டுறுதி(GIC), அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், முதலிய அனைத்திலும் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.
1965 மொழிப்போரில் ஈடுபட்டு உயிர்நீத்த தமிழர்களும் சிறைசென்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களும், வீதிகளில் திரண்டு போராடிய பல இலட்சோப லட்சம் தமிழர்களும் ஆண்களும் பெண்களும் மேற்கண்ட கோரிக்கைகளை நெஞ்சில் நிறுத்தித்தான் போராடினார்கள்.
மொழிப் போர் 50 ஆண்டு நிறைவு நினைவுக் காலத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மூன்று இடங்களில் தி.பி. 2046 ஆனி 25 10.7.2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளது.
1. சென்னை - நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம்
2. திருச்சி - தலைமை அஞ்சலகம்
3. தருமபுரி - தொலைத் தொடர்பு அலுவலகம் (பி.எஸ்.என்.எல்)
தமிழ்த் தேசியப் பேரியக்கம் - ஒரு தனிப்பட்ட கட்சி அல்ல. தமிழ் மக்களின் அமைப்பு வடிவம்! தேர்தலில் போட்டியிடாது; மக்களுக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாது. பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களின் பாசறை!
எனவே தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழ் மொழியைப் பொது மொழியாகக் கொண்டுள்ள எல்லோரும் வாருங்கள் இப்போராட்டத்திற்கு!
தமிழ் மொழி காக்கத் தம்முயிர் ஈந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்த இதைவிடச் சிறந்த வடிவம் வேறொன்றுமில்லை!
இது முதல் களம்! அடுத்தடுத்த களங்களையும் அமைப்போம்!
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment