ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வினாவும் விளக்கமும் - 19.06.2015



நடுவண் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மனித நேயஅடிப்படையில் லலித் மோடி தன் மனைவியின் சிகிச்சைக்கு துணையாக போர்த்துகல் செல்ல பிரித்தானிய அரசு விசா வழங்க வேண்டுமென்று பரிந்துரை செய்ததை, ஊழலுக்கு துணை போனதாக சொல்ல முடியுமா?

லலித் மோடி என்பவர் 1700 கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி, சூதாட்டம், தில்லுமுல்லு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளைக் கொண்ட 16 வழக்குகளில் இந்தியாவில் விசாரிக்கப்பட வேண்டிய நபர். அவர் இவ்வழக்குகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பின், பிணையில் வெளியில் வந்தவர், சட்ட விரோதமாக இலண்டனுக்கு ஒடி விட்டார்.

ஊழல் மட்டுமின்றி சூதாட்டம் உள்ளிட்ட மிக மோசமான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள லலித் மோடி, நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டு இந்தியாவை விட்டே ஓடி விட்டார். இந்திய அரசு லலித் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் மோடிக்கு விசா வழங்க பிரித்தானிய அரசுக்கு தனது பதவியை வைத்து பரிந்துரை செய்திருப்பது, அக்குற்றச்செயல்களில் சுஷ்மா சுவராஜூம் பங்கு கொண்டதாகும். இந்திய அரசுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள லலித் மோடி கொடுத்த ஒரு நேர்காணலில், சுஷ்மா சுவராஜ் குடும்பத்திற்கும் தனக்குமான நீண்டகால நெருக்கத்தையும் உறவுகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

சுஷ்மா சுவராஜ் கணவர், தனக்கு 22 ஆண்டுகளாக சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார் என்றும், சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக தனது மோசடிசூதாட்ட வழக்குகளுக்கு வழக்கறிஞராக இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார் லலித் மோடி.

இதிலிருந்தே, லலித் மோடியை அவரது குற்றச் செயல்களிலிருந்து தண்டனை கிடைக்காமல் காப்பாற்ற சுஷ்மா சுவராஜ் குடும்பம், அரும்பாடுபட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது.

சுஷ்மா சுவராஜ் கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர்களை 16,000 கோடி ரூபாய் சுரங்க ஊழல்களிலிருந்து பாதுகாக்க கடும் முயற்சி எடுத்துக் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்குக் கைமாறாக, சுஷ்மா சுவராஜை பிரதமர் வேட்பாளராகக் கொண்டுவர ரெட்டி சகோதரர்கள் பா...வுக்குள் முயற்சி எடுத்ததும் தெரியும்.

சுஷ்மாவைப் போலவே, ராஜஸ்தானத்தின் பா... முதலமைச்சர் வசுந்தரா ராஜேயும், லலித் மோடியின் ஊழலை ஆதரித்து வந்தவர்தான் என்று தெரிகிறது. வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் சிங் நிறுவனத்திற்கு, லலித் மோடியின் ஊழல் பணம் கைமாறியிருப்பதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுது, வசுந்தரா ராஜே வெளிநாட்டிலிருக்கும் தனக்கு என்னென்ன வகைகளில் உதவினார் என்பதை லலித் மோடியே அந்த நேர்காணலில் கூறிவிட்டார்.

ஆன்மிக ஒழுக்கம் - அறநெறிகள் ஆகியவற்றில் மிகவும் குறைபாடு கொண்டவர்களை பெரும்பாலும் தலைவர்களாகக் கொண்ட கட்சிதான் பா... ஆன்மிகம் என்பது, அவர்களுடைய வாக்கு வேட்டைக்கு ஒரு கருவியே தவிர, அதிலும் அவர்கள் முழு நம்பிக்கையுடையவர்கள் அல்ல. ஏற்கெனவே, பா...வில் பலர் இவ்வாறு பல ஊழல்களை செய்திருக்கிறார்கள்.

லலித் மோடி .பி.எல். நடத்திக் கொண்டு, சூதாட்டச் சக்கரவர்த்தியாக விளங்கிய காலத்தில் குசராத்தின் கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்தவர் நரேந்திர மோடி. அப்பொழுது, இருவரும் கூடிக் குலாவிக் கொண்டவர்கள். எனவே, நரேந்திர மோடி என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

அரசியல் நெறிகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில், உடனடியாக சுஷ்மா சுவராஜூம் வசுந்தரா ராஜேவும் முறையே வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்தும், முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலக வேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும்.

மருத்துவ உதவி செய்வது குறித்த மனித நேயம் பேசுவோர், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுடைய தாயார் பார்வதியம்மாள், மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்ட போது, விமானத்திலிருந்து கீழே இறக்காமல் திருப்பி அனுப்பினார்கள். இது குறித்து, அன்று யாரும் பேசவில்லை.

பா...வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் நெருக்கடி நிலைப் பிரகடனம் வரக்கூடிய அபாயமிருக்கிறது என்று கூறியிருக்கிறார். உண்மையில் அப்படிப்பட்ட அபாயம் இருக்கிறதா?

எல்லா சனநாயக அமைப்புகளையும் காவு கொடுத்துவிட்டு, ஒற்றை அதிகார மையத்தை உருவாக்கி வருகிறார் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி. எல்லாம் தலைமை அமைச்சர் அலுவலகத்தில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிலையை செயல்படுத்திவிட்டார். நடுவண் அமைச்சர்கள் பொம்மைகளாகிவிட்டார்கள்.

நரேந்திர மோடி, அருண் ஜேட்லி, அமித் ஷா ஆகியோர் அடங்கிய ஒற்றை மையம் மட்டுமே அதிகாரத்தோடு செயல்படுகிறது. தலைமை அமைச்சரானபின், நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த போது, நாடாளுமன்றம் ஒரு கோயில் என்றார்.

அப்போதே நாம், நமது இதழான தமிழர் கண்ணோட்டத்தில், “நாடாளுமன்றம் ஒரு கோயில், அதில் ஒற்றை தெய்வம் நரேந்திர மோடிஎன்பதுதான் இதன் பொருள் என்று எழுதினோம்.

நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு, அடுத்தடுத்து மூன்று முறை நிலப்பறிப்புச் சட்டத்தை குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கை செய்து, செயல்படுத்தி வருகிறார்.

பாரதிய சனதாக் கட்சியின் உயர்மட்டக் குழுக்கள்கூடி அரசின் கொள்கைகளை வகுப்பதில்லை. நரேந்திர மோடி குழாம் வகுப்பதுதான் அரசின் கொள்கை என்றாகிவிட்டது.

மாநில உரிமைகளை மிக வேகமாகப் பறித்து வருகிறார். எஞ்சியுள்ள மாநில வரி விதிப்பு உரிமைகளைப் பறிக்க சரக்கு சேவை வரிச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

எனவே, இந்தப் போக்கில் போனால் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கக்கூடிய பேச்சுரிமை, எழுத்துரிமை, அமைப்புகள் நடத்தும் உரிமை ஆகியவற்றை தடுத்து நிறுத்தி, நீதித்துறையின் தன்னாட்சியையும் தடுத்து அரசுக்குக் கீழ்ப்படியச் செய்து, நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தாமல் தள்ளி வைத்து 1975 – சூன் 25இல், அன்றையத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி பிரகடனம் செய்த நெருக்கடி நிலை, நரேந்திர மோடியாலும் கொண்டுவரப் படலாம் என்று அத்வானி ஐயப்படுவதில் பொருள் இருக்கிறது.

ஆனால், நாம் இன்னொரு வகையாகப் பார்க்கிறோம்.

ஒற்றை மைய அதிகாரத்தின் கனம் தாங்காமல், நரேந்திர மோடியின் தலைமை தானே உடைந்து சிதறுவது முந்தி நடக்குமா, அல்லது நரேந்திர மோடி அவசர நெருக்கடி நிலைப் பிரகடனம் முந்திக் கொள்ளுமா என்பதுதான் இப்பொழுது ஆய்வு செய்ய வேண்டிய பொருள்!




No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.