நியூட்ரினோ ஆய்வகம் குறித்த அப்துல் கலாம் கட்டுரை அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது! - தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
நியூட்ரினோ ஆய்வகம் குறித்த அப்துல் கலாம் கட்டுரை அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது!
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்பு கட்டுரை
நியூட்ரினோ குறித்து முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - ஸ்ரீஜன் பால் சிங் ஆகிய அறிவாளர்கள், தமிழ் இந்து, 17.06.2015 நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நிறுவப்படவுள்ள இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட நியூட்ரினோ ஆய்வகம்(INO) குறித்து, மக்கள் எழுப்பும் கவலைகள் குறித்தோ, நியூட்ரினோ ஆய்வு குறித்து அறிவியலாளர்கள் எழுப்பும் வினாக்கள் குறித்தோ விவாதிக்காத கட்டுரையாக இது அமைந்துள்ளது.
யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய உயிர் பன்மய மலையாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், 7இலட்சத்து 50,000 கன அடிப் பாறைகளை பெயர்த்து குகை ஏற்படுத்தி அதில்தான் நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ளது. இது, சுற்றுச்சூழலிலும் உயிர் பன்மயத்தின் மீதும் ஏற்படுத்தவுள்ள தாக்கம் பற்றி இந்திய அரசுத் தரப்பிலேயே நிறைவளிக்கக்கூடிய விளக்கம் தரவில்லை.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய அரசு அமர்த்திய சலீம் அலி நிறுவனம், இது பற்றி ஆய்வு செய்ய தரச்சான்று (Accredited) பெற்ற நிறுவனமல்ல. அந்நிறுவனம்கூட, நுட்பமான உயிர்மச் சூழல் உள்ள தேனி மாவட்ட மலைகளில் தொடர் வெடிப்பு நடத்துவதால் ஏற்படப் போகும் தாக்கம் குறித்து, எந்தவித ஆய்வும் செய்யவில்லை என அறிவித்திருக்கிறது.
தீர்க்கமுடியாத சூழலியல் சேதத்தையும் வாழ்வாதார அழிப்பையும் ஏற்படுத்தக்கூடிய இச்சிக்கல் குறித்து, அறிவாளர் அப்துல் கலாம் விடையளிக்காதது வியப்பளிக்கிறது.
இத்தொடர் வெடிப்புகள் நீரியல் நடுக்கத்தை ஏற்படுத்தவல்லது என அறிவியலாளர்கள் எழும்பும் கவலை குறித்து, அப்துல் கலாம் கண்டு கொள்ளவே இல்லை.
இயற்கை நியூட்ரினோவும் நியூட்ரினோ கற்றைகளும் ஒரே தன்மையானது என்பது, புனல் மின்சாரத்தைவிட அனல் மின்சாரம் அதிக அதிர்வுதரும் என்பது போன்ற பிதற்றல்தான் என அப்துல் கலாம் கடிந்து கொள்கிறார்.
ஆனால், இதுகுறித்து புகழ்பெற்ற அறிவியலாளர்கள் முன்வைத்துள்ள ஆய்வு அறிக்கைகளை அவர் கருதிப் பார்ப்பதாகவேத் தெரியவில்லை.
நியூட்ரினோ தொழிற்சாலைகளில் உருவாக்கப்ட்டு அனுப்பப்படும் நியூட்ரினோ கற்றைகள் கதிரியக்கத்தை விளைவிக்கக்கூடியவை என பல ஆய்வாளர்கள் எடுத்துக் கூறியாளர்கள்.
எடுத்துக்காட்டாக, நியூட்ரினோ ஆய்வுலகில் மீண்டும், மீண்டும் மேற்கோள் காட்டப்படும் தலைசிறந்த அறிவியலாளர் ஜெ.ஜெ.பெவலக்கா(J.J. Bevelacqua)வின், Muon Colliders and Neutrino Effective Doses (20.12.2012) ஆய்வறிக்கை, இது குறித்து குறிப்பிடுகிறது.
மிகை உயர் ஆற்றல் உள்ள காஸ்மிக் நியூட்ரினோக்களால் உருவாகும் கதிரியக்கங்கள் குறித்து எச்சரிக்கும் ஓர் ஆய்வறிக்கை மிகமுக்கியமானது. (Chia – Yu Hu et al – Near field effects of Cherenkov Radiation Induced by Ultra High Energy Cosmic Neutrinos – Astroparticle Physics – 35; p 421 – 434, 2012)
50 Gev ஆற்றல் உள்ள மியுவான் நியூட்ரினோ கற்றைகள் புழங்குகின்றன என்றால் அங்கு 15mSvஅளவுக்கு கதிரியக்கம் ஏற்படும் என்றுஇன்னொரு ஆய்வறிக்கை கூறுகிறது. (Neutrino Radiation Hazard at a planned CERN Neutrino Factory – The Macro Silari and Helmat vincke – Technical note, 09.01.2002) இங்கு குறிப்பிடப்படும் Sv என்பது சீவர்ட் (Sievert) என்ற கதிரியக்க அளவைக் குறிக்கும்.
அணு ஆயுதங்கள் இருக்குமிடம் கண்டறிந்து உருக்கி அழிக்கவல்ல எதிர் ஆயுதமாக நியூட்ரினோ குண்டுகள் பயன்படும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.
நியூட்ரினோ கற்றைகளை எதிரி நாட்டு அணு ஆயுதங்களை அழிப்பதற்கான எதிர் ஆயுதமாகவும்,பயன்படுத்தலாம் என முதன்முதலில்அறிவித்தர் ஜப்பானிய அறிவியலாளரான ஹிரோடக்கா சுகவரா, இது குறித்து Hirotaka Sugawara et al – Destruction of Nuclear Bombs Using Ultra High Energy Neutrino Beam, June 2003 என்ற ஆய்வை முன்வைத்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அண்மையில் ஆல்பி ரட் டோனி என்ற அறிவியலாளர் அணு ஆயுதத்திற்கு எதிரான அதைவிட வலுவான ஆயுதமாகநியூட்ரினோ ஆயுதத்தை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என அறிக்கை அளித்தார்;. (Neutrino Counter Nuclear Weapon Alfred Tony, 26 June 2013) .
இது உடனடியாக இயலாவிட்டாலும், கோட்பாட்டளவில் சாத்தியப்படக் கூடியதே என்பதை இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
அறிவியல் உலகம் அச்சத்தோடு கூறிவரும் இந்த செய்தியை, அலட்சியப்படுத்திவிட்டு போகிற போக்கில், நியூட்ரானுக்கும் நியூட்ரினோவுக்கும் வேறுபாடு தெரியாதவர்களின் கருத்துக் குழப்பல் இது என அப்துல் கலாம் கூறுவது, நடக்கும் விவாதத்தின் தரத்திற்கு பொருத்தமாக இல்லை.
ஒருவேளை, நியூட்ரினோவையும் நியுட்ரானையும் ஒன்றுபோல் யாராவது பேசிக் கொண்டால், அவர்களுக்கு விளக்கமளிக்க பள்ளி ஆசிரியர்களே போதுமானவர்கள். அப்துல் கலாம் தரத்திலுள்ள அறிவாளர்கள் இதற்குத் தேவையில்லை.
விண்வெளியில் வின்மீன்கள் – கோள்கள் போன்றவற்றிக்கு இடையே இருப்புது ஒன்றுமற்ற வெற்றிடமல்ல. மாறாக அங்கு நிலவுவது ஆற்றல் புலம் Enegy Field என அறிவியல் உலகம் அறிவித்திருக்கிறது. ஹிக்ஸ் போசான் (Higgs Boson), நியூட்ரினோ போன்ற அணு உள் துகள்கள் இப்புலங்களை தாங்கி நிற்பவை என்றும் அறியப்பட்டுள்ளது.
எனவேதான், போசான் மற்றும் நியுட்ரினோ குறித்த ஆய்வு அந்த ஆய்வின் போக்கிலேயே கருந்துளை உள்ளிட்ட பேரழிவை ஏற்படுத்தி விடும் என்று புகழ் பெற்ற இயற்பிளலானர் ஸ்டீபன் ஹாக்கினஸ் கூறுகிறார்.
இது போன்ற அறிவார்ந்த, ஆய்வுவழிப்பட்ட விவாதங்களில் ஈடுபடாத, வினாக்களுக்கு விளக்கமளிக்காத ஒரு கட்டுரையை அறிவாளர் அப்துல் கலாமிடமிருந்து நாம் எதிபுர்பார்க்கவே இல்லை.
(கட்டுரையாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்)
Leave a Comment