ஆகத்து 17 முதல் 19 வரை. . . சென்னை தலைமைச் செயலகத்திலும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திலும் மூன்று நாள் தொடர் மறியல் போராட்டம்! - .தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு!
பள்ளிக்கல்வியில் தமிழை நீக்கி ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசின் தமிழ்மொழிக்கு எதிரானப் போக்கைக் கண்டித்து...
ஆகத்து 17 முதல் 19 வரை. . . சென்னை தலைமைச் செயலகத்திலும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திலும் மூன்று நாள் தொடர் மறியல் போராட்டம்!
சென்னை சிறப்புக் கருத்தரங்கில்...தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு!
“அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தமிழக அரசின் சாதனையா? தமிழ் மக்களுக்கு சோத னையா?”என்ற தலைப்பில், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில், சென்னையில் 28.07.2015 செவ்வாய் மாலை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை தியாகராயர் நகர் செ.நெ. தெய்வநாயகம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, தமிழகத் தமிழாசிரியர் கூட்டமைப்பு மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி வரவேற்றார்.
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
கூட்டத்தின் தொடக்கத்தில், மாரடைப்பால் காலமான முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அனைவரும் எழுந்து நின்று அமைதி வணக்கம் செலுத்தினர்.
பின்னர், “ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பும் சமூகநீதி மறுப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றிய, மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்திதேவி அவர்கள், தமிழ்வழிக் கல்வி அழிக்கப்படுவது குறித்தும், கல்வியில் தனியார் மயத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.
“தமிழ்வழிக்கல்வியை வளர்க்க அரசு செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் பேசிய, மக்கள் கல்விக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் பிரபா. கல்விமணி அவர்கள், மேல்நிலைக் கல்வி முதலா மாண்டில், முதலாண்டு பாடம் நடத்தாமல், இரண்டா மாண்டுப் பாடங்கள் நடத்தியும், ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடங்களை நடத்தியும் தனியார் பள்ளிகள் நடத்தும் அட்டூழியங்கள் குறித்தும், தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு செய்ய வேண்டியவைகள் குறித்தும் குறிப்பிட்டார்.
நிறைவாக, “ஆங்கிலவழிப் பிரிவுத் திணிப்பும் அதன் பாதிப்பும்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றிய, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் திரு. பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள், இந்திய அரசு உலக வணிகக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவிப்பது குறித்தும், ஆங்கிலவழிப் பிரிவுகள் அதன் ஒரு பகுதியாக வருவது குறித்தும் கருத்துகளை முன் வைத்தார்.
கூட்டத்தில், தமிழ்வழிக் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கைக் கண்டித்து, ஆகத்து 17 முதல் 19 வரை, மூன்று நாட்கள் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்கள் இயக்கத்தினரும், ஒவ்வொரு நாளும் அணி அணியாகத் தொடர் மறியல் போராட்டம் நடத்துவர் என தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிவித்தார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைவரும் அரங்கம் அதிரக் கையொலி எழுப்பினர்.
பல்வேறு கருத்துகள் பகிரப்பட்ட பயிற்சிப்பட்டறையாக நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உறுப்பு வகிக்கும் தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திரு முருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் தியாகு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைமை நிலையச் செயலாளர் திரு. வினோத் குமார், உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் திரு. அன்றில் பா. இறையெழிலன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தமிழர் தேசிய முன்னணி தலைமை நிலையச் செயலாளர் திரு. முத்தமிழ்மணி, தந்தை பெரியார் தி.க. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் நாகராசன், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தென்மொழி ஆசிரியர் திரு. பூங்குன்றன், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் பொறுப்பாளர் தோழர் மா. சேகர், கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ மக்கள் விடுதலை) தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி, தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. கங்காதரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்
Leave a Comment