ஐ.சி.எப். தென் மண்டல பொது மேலாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம்!
ஐ.சி.எப். தென் மண்டல பொது மேலாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம்!
தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை மறுக்கும் ஐ.சி.எப். தென் மண்டல தொடர்வண்டி பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், இன்று (02.07.2015) காலை சென்னையில் நடைபெற்றது.
இந்தியத் தொடர்வண்டித் துறை, தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்வண்டிப் பெட்டிகளை உற்பத்தி செய்யும் இந்திய அரசின் நிறுவனமான ஐ.சி.எப்.-பிலும் இது தொடர்கிறது.
தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு இடங்களைத் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள அயல் இனத்தாரை வெளியேற்ற வேண்டுமென்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கோரி வருகிறது.
கடந்த, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்வண்டித்துறை பணிக்கானத் (ஆர்.ஆர்.சி.) தேர்வில் தமிழ் மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு, வடநாட்டவர்கள் மிகை எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டனர். தமிழகத்தில் பயிற்சிப்பணி (அப்ரன்டீஸ்) முடித்த மாணவர்களைப் புறக்கணித்து விட்டு, வடநாட்டவர்களை பணியில் அமர்த்தி வருகின்றனர்.
மண்டல மேலாளர் அதிகாரத்தின்கீழ் பயிற்சிப்பணி முடித்த மாணவர்களை பணியில் அமர்த்தலாம் என பாஸ்ட் ட்ராக் கமிட்டி அறிக்கை கூறியிருந்த போதிலும், “பொதுத்தேர்வு” என்ற நடத்துகிறோம் என்ற பெயரில், வடநாட்டவர்களை வேண்டுமென்றே பணியமர்த்துகிறது, ஐ.சி.எப். நிர்வாகம்.
எனவே, அநீதியான - இந்தத் தேர்வு முறையை இரத்து செய்ய வேண்டும் என்றும், அப்பணியிடங்களை பயிற்சிப்பணி முடித்த தமிழ்நாட்டு மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.சி.எப். மற்றும் தென் மண்டல தொடர்வண்டித் துறையில் பயிற்சிப்பணி முடித்த மாணவர்களுக்கு வேலை வழங்கும் வரை ஆர்.ஆர்.சி. தேர்வை நடத்தக் கூடாது என்று கோரியும், இன்று (02.07.2015) காலை 11 மணியளவில், சென்னை ஐ.சி.எப்.லுள்ள, தென் மண்டல இரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
"வேலை கொடு வேலை கொடு! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை கொடு", "புறக்கணிக்காதே புறக்கணிக்காதே தமிழர்களைப் புறக்கணிக்காதே" என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களுடன் ஐ.சி.எப் பேருந்து நிலையத்திலிருந்து, ஐ.சி.எப். தென் மண்டல தொடர்வண்டி பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.
தமிழர் எழுச்சி இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்கள் பங்கேற்றன.
தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலர் தோழர் வேலுமணி போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்புரைச் செயலாளர் தோழர், கார்வேந்தன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் தோழர் குடந்தை அரசன், த.பெ.தி.க. திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் நாகராசன், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, தி.வி.க. தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தோழர்களும், திரளான பயிற்சிப்பணி முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு கைதாயினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தோழர் இரமேசு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.
Leave a Comment