ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவல்துறையினரின் தடை உடைத்து.... திருச்சி மாநகரில்... த.தே.பே. நடத்திய... “தமிழ்த் தேச சூழலியல் மாநாடு”



தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், திருச்சி மாவட்டம் - திருவெறும்பூரில் கடந்த 06.05.15 அன்று நடைபெறவிருந்த "தமிழ்த் தேச சூழலியல் மாநாடு"க்கு, கடைசி நேரத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு, மாநாட்டிற்கு அனுமதி பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (29.08.15), “தமிழ்த் தேச சூழலியல் மாநாடு”, ஏற்கெனவே தீர்மானித்த அதே திருச்சி - திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில், சிறப்புற நடைபெற்றது.

காவிரி ஆற்றை மறித்து கர்நாடகம் கட்டும் மேக்கேத்தாட்டு அணைத் திட்டம், மீத்தேன், ஷெல், கெய்ல், நியூட்ரினோ, அணு உலைகள் என இந்திய அரசால் அடுத்தடுத்துத் தமிழினத்தின் மீது திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களிலிருந்து நம்மையும் நமது எதிர்காலத் தலைமுறையையும் காக்க என்ன செய்ய வேண்டும் என விவாதிக்கும் வகையில், இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாட்டிற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் நா. இராசாரகுநாதன் தலைமையேற்றார். தோழர் இரெ.சு. மணி, பொறியாளர் சு. செயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் தொடக்கத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, தமிழ்த் தேசிய உறுதிமொழி கூறினார்.

புதுக்கோட்டைத் தோழர்களின் எழுச்சிப் பறை இசையுடன் மாநாடு தொடங்கியது. தோழர் மு. தியாகராசன் வரவேற்புரையாற்ற, த.தே.பே. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினார். பொறியாளர் ப. மாதேவன், தோழர் குழ.பா. ஸ்டாலின் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா.சின்னத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் கோ. சுந்தரராசன் ஆகியோர் சூழலியல் உரைவீச்சு நிகழ்த்தினர்.

நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், எழுச்சிமிகு நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-

1. இந்திய அரசமைப்புச் சட்ட விதி 355-ஐ பயன்படுத்தி, மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்தை இந்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். 

2.    மீத்தேன் திட்டத்தை இந்திய அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

3. அணுஉலைப் பூங்காத் திட்டத்தைக் கைவிட வேண்டும், தமிழகத்தை கதிரியக்க அபத்தில் சிக்க வைக்கும் நியூட்ரினோ திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

4. பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்காக தமிழ்நாடடு நீர்வளம் கொள்ளை போவதை அனுமதிக்கக் கூடாது.

5.  திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து மறுசுழற்சி முறையில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.

6. தமிழனத்தின் உயிர்ம நேயத்திற்கு சான்றாக விளங்கும் சல்லிக்கட்டு மீதானத் தடையை நீக்க வேண்டும்.

7. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்த்தல் - இயற்கையை அழிக்கிற நுகர்வு பழக்கத்திலிருந்து விடுபடுதல் என இயற்கைப் பாதைக்கு நம் வாழ்வியலை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். 

தீர்மானங்களை, பேரியக்கத்தின் முன்னணித் தோழர்கள் ஆ.தேவதாசு, வே.க. இலட்சுமணன், சி. ஆரோக்கியசாமி, வே.பூ. இராமதாசு, கே. இனியன், சோ. வேங்கையரசன், கோகுலகிருட்டிணன், கருப்பசாமி ஆகியோர் முன்மொழிய, பலத்த கரவொலிகளுக்கிடையே அவை நிறைவேற்றப்பட்டன.

தோழர் முவ. இரத்தினம் நன்றி கூறினார்.

மாநாட்டில், திரளான உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.