இலங்கை எதிர்கட்சித் தலைவராக சம்பந்தர் பொறுப்பேற்பது பன்னாட்டுப் புலனாய்வுக் கோரிக்கையைப் பாதிக்கும்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
இலங்கை எதிர்கட்சித் தலைவராக சம்பந்தர் பொறுப்பேற்பது பன்னாட்டுப் புலனாய்வுக் கோரிக்கையைப் பாதிக்கும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் திரு. இரா சம்பந்தர் அவர்களை எதிர்கட்சித் தலைவராக சிங்கள அரசு ஏற்றிருப்பது, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பன்னாட்டு புலனாய்வு பற்றிய தீர்மானத்தை மேலும் பாதிப்படைச் செய்யும்.
கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய பன்னாட்டுப் புலனாய்வு விசாரணையைக் கிடப்பில் போடுவது என்று ஏற்கெனவே அமெரிக்கா – இந்தியா – இலங்கை அரசுகள் முடிவெடுத்துவிட்டன. இலங்கை அரசு தானே விசாரித்துக் கொள்ளட்டும் என்றும் அவை முடிவு செய்துவிட்டன.
இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினத்தின் பிரதிநிதிகளாக உலகப் பார்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே கருதப்படுகின்றனர். அதன் தலைவர், இலங்கையில் சட்டப்படியான எதிர்கட்சித் தலைவராக ஏற்கபட்டிருக்கிறார் என்பது, உலகிற்கு - பழைய இராசபட்சே நிர்வாகம் போன்றதல்ல, சிறீசேனா - இரணில் விக்ரமசிங்கே நிர்வாகம் என்ற மாற்று செய்தியை வழங்கும். உண்மையில், தமிழின அழிப்பிலும் பன்னாட்டுப் புலன் விசாரணைக் கூடாது என்பதிலும் இராசபக்சே, சிறீசேனா, இரணில் விக்ரமிசிங்கே ஆகிய மூவருக்கும் எள்ளளவும் வேறுபாடு இல்லை.
இன அழிப்புக்கு உள்ளான தமிழர்களின் குரலுக்கு செவி கொடுத்து, நீதி வழங்கும் சனநாயகத்தன்மை கொண்ட நிர்வாகம் இலங்கையில் செயல்படுகின்றது என்று பன்னாட்டு அரங்கில் ஒரு தவறான படம் காட்டவே, சம்பந்தர் எதிர்கட்சித் தலைவரானது பயன்படுத்தப்படும்.
திரு. இரா. சம்பந்தன் அவர்கள் பன்னாட்டு விசாரணை கோருபவர் அல்லர். இந்திய இலங்கை அரசுகளோடு ஒத்துப் போகக் கூடியவர். எனவே, சம்பந்தர் முகத்தை வெளிநாடுகளுக்குக் காட்டி பன்னாட்டுப் புலனாய்வு விசாரணையிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பதுதான் இலங்கை அரசின் உத்தி.
இந்த நிலையில், வடக்கு மாநில முதலமைச்சர் திரு. விக்னேசுவரன் அவர்கள், அவர்களுடைய அவையில் பன்னாட்டு விசாரணை வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பாராட்டத்தக்கது.
இலங்கையில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க, பன்னாட்டு புலனாய்வு கோரியும், அமெரிக்காவின் சதிச் செயலைக் கண்டித்தும் தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்கள் நடத்தும் போராட்டத்திற்கு, பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவே சம்பந்தர் அவர்களை எதிர்கட்சித் தலைவராக அமர்த்தியிருக்கிறார்கள். இது அனைத்தும் தெரிந்தே, திரு. சம்பந்தர் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த சிக்கல்களையெல்லாம் புரிந்து கொண்டு, இந்த சதித் திட்டங்களையெல்லாம் முறியடிக்கக்கூடிய வகையில், தமிழ்நாட்டில் நாம் நடத்தும் பன்னாட்டுப் புலனாய்வுக்கானக் கோரிக்கை இயக்கங்கள் கூர்மையாகவும் வலிமையாகவும் நடைபெற வேண்டும்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
Leave a Comment