காவிரிச் சிக்கல் குறித்து தமிழ் இந்து வெளியிட்டுள்ள செய்தி கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு துணை செய்வதாக உள்ளது! - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
காவிரிச் சிக்கல் குறித்து தமிழ் இந்து வெளியிட்டுள்ள செய்தி கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு துணை செய்வதாக உள்ளது!
தமிழ் இந்து நாளேட்டுக்கு... தமிழக உழவர் முன்னணி ஆலோசகர்
தோழர் கி. வெங்கட்ராமன் கடிதம்!
செய்தியாளர் இரா. வினோத் (தமிழ் இந்து – 05.09.2015) கூறுவது காவிரிச் சிக்கலில், கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு துணை செய்வதாக உள்ளது.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், கர்நாடகத்தின் அணைகள் நிரம்பி வழிந்தால்தான் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியும் என்பதை கட்டுரையாளர் வலியுறுத்துகிறார்.
கட்டுரையாளரே எடுத்துக்காட்டுவது போல், கிருஷ்ணராஜ சாகரில் 130 அடிக்கு மேல் (ஏறத்தாழ 88 விழுக்கா), தண்ணீர் இருக்கிறது. ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய காவிரி அணைகளிலும் இதே நிலைதான்.
காவிரி இறுதித் தீர்ப்பின்படி, சூன் மாதம் 10 டி.எம்.சி., சூலை மாதம் 34 டி.எம்.சி., ஆகத்து மாதம் 50 டி.எம்.சி., ஆக மொத்தம் இதுவரை 94 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். வழிந்துவந்த தண்ணீரை விட்டுவிட்டு இப்போது, அணை நிரம்பினால்தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என அடாவடி செய்கிறது கர்நாடகம்.
மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கர்நாடகமும் கட்டுரையாளரும் கூறுவது போல், வறட்சி ஏதுமில்லை. இந்திய அரசின் கால நிலை ஆய்வு நிறுவன அறிக்கைப்படி, தலைக்காவிரி புறப்படும் இடமான குடகு மாவட்டத்தில் 2015 சூன் தொடங்கி, செப்டம்பர் 2 முடிய இயல்பான (நார்மல்) மழைப் பொழிந்துள்ளது. மாண்டியா – மைசூர் ஆகிய மாவட்டங்களில், இயல்பைவிட அதிக மழை (எக்சஸ்) பொழிந்துள்ளது. காவிரிக்குத் தொடர்பில்லாத வேறு மாவட்டங்களில் மழை அளவு குறைந்திருக்கக் கூடும். இதைக் காரணம்காட்டி, தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர்ப் பங்கை மறுப்பது நீதிக்கு புறம்பானது. தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது.
நீதியை வலியுறுத்த வேண்டிய தி இந்து கட்டுரை, ஒருதலைச் சார்பாக - நீதிக்குப் புறம்பாகப் பேசுவது வேதனையளிக்கிறது.
தமிழ் இந்து நாளேட்டுக்கு மேற்கண்டவாறு, தோழர் கி. வெங்கட்ராமன் மறுப்புக் கடிதம் எழுதியுள்ளார்.
Leave a Comment