ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“புகழ்பெற்ற மாயன், இன்கா போன்ற நாகரிகங்கள் அழிக்கப்பட்டது போல் - வல்லரசு இந்தியா கனவுக்காக தமிழினமும் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது!” - தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!


“புகழ்பெற்ற மாயன், இன்கா போன்ற நாகரிகங்கள் அழிக்கப்பட்டதுபோல் - வல்லரசு இந்தியா கனவுக்காக தமிழினமும் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது!”

தஞ்சை த.க.இ.பே. நூல் வெளியீட்டு விழாவில்.. தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், இயக்குநர் வ. கவுதமன் இயக்கிய “வேட்டி” குறும்படம் மற்றும் ஊடகவியலாளர் கு. இராமகிருட்டிணன் எழுதிய “மீத்தேன் எமன்” நூல் ஆகியவற்றின் வெளியீட்டு விழா, நேற்று (05.09.2015) சிறப்புற நடைபெற்றது.

தஞ்சை பெசண்ட் அரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, த.க.இ.பே. பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை தலைமை தாங்கினார். தஞ்கை த.க.இ.பே. அமைப்பாளர் புலவர் கோ. நாகேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறை மேனாள் தலைவர் முனைவர் மு. இராமசாமி, த.க.இ.பே. திருச்சி செயலாளர் பாவலர் நா. இராசாரகுநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவில், இயக்குநர் வ. கவுதமன், ஊடகவியலாளர் கு. இராமகிருட்டிணன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

“வேட்டி” குறும்படத்தையும், “மீத்தேன் எமன்” நூலையும் வெளியிட்டு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

"பதவி பணம் விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளைஞர்கள் தன்னலமற்று மக்கள் பணியாற்ற முன் வர வேண்டும் என்று நாம் சொல்லி வருகிறோம்.

இன்றைக்கு சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே அதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் ஆவார். அவருடைய பிறந்த நாளில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை இந்நிகழ்ச்சியை நடத்துவது பாராட்டுக்குரியது.

புகழ் பெற்ற கரிசல் எழுத்தாளர் கி. இராஜநாராயணன் அவர்களது “வேட்டி” புதினத்தை மிக நேர்த்தியான குறும்படமாக இயக்குநர் வ. கவுதமன் திறம்பட உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் வரும் சுதந்திரப் போராட்டத் தியாகி நமக்கு வ.உ.சி.யை நினைவுபடுத்துகிறார். மிகுந்த எதிர்பார்ப்போடு, பல போராளிகள் ஈகம் செய்து பெறப்பட்ட இந்திய சுதந்திரம் எவ்வளவு பெரிய ஏமாற்றத்தில் முடிந்தது என்பதை “வேட்டி” குறும்படம் மிக நேர்த்தியான கலைப் படைப்பாக வெளிப்படுத்துகிறது.

சுதந்திரப் போராட்டத்தை நாடு தழுவிய மக்கள் திரள் போராட்டமாக நடத்திய காந்தியடிகள், சுதந்திர விழாவில் பங்கு பெறாததே இதன் அழிவையும் இழிவையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. எந்தக் கனவோடு வ.உ.சி. அனைத்தையும் இழந்து அதைவிட, நன்றி பாராட்டாத உலகத்தில் – நம்பிக்கையோடு போராடி வீழ்ந்தாரோ, அந்தக் கனவுகள் இன்னும் கனவுகளாகவே இருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்றால் தமிழினம் தழைத்து வாழும் என்று நம்பிப் போராடிய சுதந்திரப் போராட்டத் தியாகியின் கண் முன்னாலே இதே இந்தியாவின் துணையோடு இன அழிப்புகளுக்கு ஆளானது துயரத்தோடு இக்குறும்படத்தில் பதிவாகியுள்ளது. சுதந்திரத்தின் அடையாளமாக, உரிமையின் குறியீடாக இருக்க வேண்டிய மூவர்ணக் கொடி பொறித்த போர் விமானங்களும், கப்பல் படையும் இணைந்து தமிழீழத்தில் இன அழிப்புப் போரை நடத்தின.

தியாகி எழுப்புகிற கேள்விக்கு விடையாக – உயர்த்திய மூவர்ணக் கொடியை - மீண்டும் தாழ்த்தும் குழந்தைகளின் செயல், தமிழர்களுக்கு கூர்மையான செய்தியை கலை நயத்தோடு எடுத்துக்காட்டுகிறது.

தலைசிறந்த மக்கள் ஓவியர் வீரசந்தனம் அவர்களின் தேர்ந்த நடிப்பாற்றல் இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது. அதைவிட இந்த ஆற்றலை அடையாளம் கண்டு, வெளிக் கொணர்ந்த இயக்குநர் கவுதமனின் திறன் பாராட்டுக்குரியது. 
இந்நிகழ்வில், தற்காலத் தமிழகம் சந்தித்து வரும் பேராபத்தான மீத்தேன் திட்டம் குறித்த “மீத்தேன் எமன்” நூலும் வெளியிடப்பட்டுள்ளது. மிகுந்த உழைப்பிற்கிடையே கள ஆய்வு நடத்தியும், அறிவியல் ஆய்வுகளை மேற்கோள் காட்டியும் இந்நூலை எழுதிய கு. இராமகிருட்டிணன் மற்றும் சமூகப் பொறுப்போடு இதனை வெளியிட்ட விகடன் பிரசுரம் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே “வளர்ச்சி” குறித்த இருவேறு கருத்துகள், சுதந்திரப் போராட்டத் தலைவர்களிடையே மோதிக் கொண்டுதான் இருந்தன.

சனாதனத்தோடு இணைந்திருந்த பெருங்குறை இருந்த போதும், காந்தியடிகள் முன்வைத்த இயற்கையோடு இயைந்த தொழில் வளர்ச்சி முறை, இன்றைக்குப் பெரிதும் பேசப்படுகிற வளங்குன்றா வளர்ச்சியை (Sustainable development) முன் வைத்தது. மாறாக, பண்டித நேருவும் வல்லபாய் பட்டேலும் முன்வைத்த பெரும் தொழிலக, பெருந்திட்ட வளர்ச்சி முறை, “வளர்ச்சி வாதமாக” (Growth) அமைந்தது.

பல நூறு ஏக்கர் பரப்பளவில் இருக்க முடியாத அளவு, இயற்கை வளங்களை உட்கொண்டு நிறுவப்பட்ட தொழிற்சாலைகளையும் பெரிய பெரிய அணைக் கட்டுகளும் “நவீன ஆலயங்கள்” என நேரு ஆராதித்தார். அதற்குப் பின்னால் வந்த தலைவர்கள் பலரும் வல்லரசுக் கனவை விதைத்தார்கள்.

இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் இந்தப் பாதையே பின்பற்றப்பட்டது.

ஆனால், வரம்பற்ற வளர்ச்சியை (Limitless growth) முன்வைத்த இந்த வளர்ச்சி வாதம் (Growth), இன்று உலகெங்கிலும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

வரம்பற்ற வளர்ச்சி என்பது மீட்க முடியாத இயற்கைப் பேரழிப்போடு இணைந்தே உருவாகிறது. இன்று வளர்ச்சியின் உந்து சக்திகளாக நிலக்கரி, பெட்ரோல், எரிவளி ஆகியவையே அமைந்துள்ளன. இது, வானத்தையும் பூமியையும் முற்றிலும் நஞ்சாக்கி, எதிர்காலம் பற்றிய நிச்சயமற்றத் தன்மையை விளைவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, இந்த வளர்ச்சி வாதம் இயற்கை வளங்களுக்காகவும், சந்தை பிடிப்பதற்காகவும் இணக்கமற்ற – இரக்கமற்ற போர்களுக்கு காரணமாக அமைகிறது. முதலாளியத்தின் பெயரால் நிகழ்ந்தாலும், சோசலிசத்தின் பெயரால் நிகழ்ந்தாலும் இந்த “வளர்ச்சி வாதம்” பேரழிவையே ஏற்படுத்தும்.

“மீத்தேன் எமன்” நூலில், தனியார் நிறுவனமான ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனமாக இருந்தாலும், பொதுத்துறையான ஓ.என்.ஜி.சி.யாக இருந்தாலும், ஒரே வகை அழிவைத்தான் ஏற்படுத்துகிறது என்பது தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிலத்திலிருந்து மீத்தேன் எடுக்கும் திட்டம் எப்படி செயலாகிறது என்பது பற்றிய விரிவான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிணற்றுக்கும் 75,000 லிட்டர் தண்ணீர் விதம் 2,000 கிணறுகளிலிருந்து 35 ஆண்டுகளுக்கு காவிரிப் படுகையில் நிலத்தடி நீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு, நிலக்கரிப் படிமங்களுக்கிடையே பதுங்கி இருக்கும் மீத்தேன் வெளிக் கொணரப்படுகிறது.

6,000 அடி வரை செங்குத்தாக குழாய்கள் பதிக்கப்பட்டு, அக்குழாய்களிலிருந்து 8 திசையிலும் கிடக்கை வசத்தில், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் வைக்கப்பட்டு, அதற்குள் ஒவ்வொரு முறையும் 5 கோடியே 66 இலட்சத்து 34,000 லிட்டர் தண்ணீரும், 144 டன் மணலும், 80 முதல் 300 டன் வரை டென்பீன் உள்ளிட்ட 665 வேதிப்பொருட்களின் கலவையும் உயர் அழுத்தத்தில் செலுத்தப்படும். இவ்வாறு ஆண்டுக்கு நான்கு முறை 2,000 கிணறுகளுக்கும் செய்யப்பட்டு நீரியல் விரிசல் ஏற்படுத்தப்படும்.

மீத்தேனை எடுத்த பிறகு வெளியேற்றப்படும் கொடிய நச்சுக் கரைசல், வாய்க்கால்களில் விடப்படும்; பெரிய பெரிய பள்ளங்களில் பல மாதங்கள் தேக்கி வைக்கப்படும்.

இவை அனைத்தும் சேர்ந்து காவிரிப்படுகையை மட்டுமல்ல, காவிரி நீரை நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும்.

குறைந்தது 4 கோடி பேர் தங்கள் தாயகத்தைவிட்டு, சில ஆண்டுகளில் அணி அணியாக வெளியேற வேண்டிய அவலம் நேரும்.

போரினால் புலம் பெயர்ந்தவர்கள்கூட, அமைதி திரும்பியவுடன் தங்கள் தாயகத்திற்குத் திரும்ப முடியும். ஆனால், மீத்தேன் திட்டத்தின் மூலமாக அழிவு ஏற்பட்ட பிறகு, புலம் பெயரும் தமிழ்நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் தாயகம் திரும்ப முடியாது.

அதுமட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களாக ஓங்கி உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலும், தாராசுரம் சிற்பங்களும், திருவாரூர் கல் தேரும், இன்ன சிலவும் சின்னாபின்னமாகும்.

தானும் அழிந்து, தனது வரலாற்றுச் சுவடும் அழிந்த இனமாக தமிழினம் பேரழிவுக்கு உள்ளாகும்.

இப்போது, கடந்த செப்டம்பர் 3ஆம் நாள் இந்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “வழமையான முறையில் பெட்ரோல், எரிவளி எடுப்பதற்கும், நிலக்கரி மீத்தேன் எடுப்பதற்கும் படிமப் பாறை எண்ணெய் – ஷேல் ஆயில் (Shale oil) மற்றும் பாறை எரிவளி (Shale methane) எடுப்பதற்கும் இனி, தனித்தனியாக அனுமதியோ உரிமமோ பெறத் தேவையில்லை. ஒரே, Hydro carbon உரிமத்தை வைத்துக் கொண்டு நிலத்துக்கு அடியிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்” என அறிவித்திருக்கிறார்.

இது கேள்விமுறையற்ற அழிப்புக்கு பச்சைக் கொடி காட்டுவதாகும். ஏனெனில், நிலக்கரி மீத்தேன் திட்டத்தைவிட, இன்னும் பேராபத்தானது ஷேல் எண்ணெய் மற்றும் ஷேல் மீத்தேன் எடுக்கும் திட்டங்களாகும். நிலத்துக்கு அடியில், இரண்டு கிலோ மீட்டர் வரையிலும் குழாய் பதித்து நீரியல் விரிசல் முறையில் வண்டல் படிமப் பாறைகளுக்கு இடையே உள்ள பெட்ரோலியத்தையும் மீத்தேனையும் எடுக்கும் கொடுமையானத் திட்டம்தான் ஷேல் திட்டமாகும்.

இயற்கை எரிவளி என்பது அடிப்படையில் மீத்தேன் வாயுவே ஆகும். ஷேல் எரிவாயு என அவர்கள் கூறுவது, ஷேல் மீத்தேன்தான்.

இதன்மூலம், எரி எண்ணெய் விலை குறையும் என்பது உண்மைதான் என்றாலும் இந்த “வளர்ச்சி வாதம்” தமிழ்நாட்டிற்கு பேரழிவையே உண்டாக்கும்.

உலக வரலாற்றில் மாயன், இன்கா, செவ்விந்தியர்கள், ஆப்ரிக்கர்கள் உள்ளிட்ட பழைய நாகரிகச் சமூகங்களை அழித்துதான் நவீன பளபளப்பான வெள்ளை நாகரிகங்கள் படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நவீன, வளர்ச்சியடைந்த, வல்லரசு இந்தியாவைப் படைப்பதற்காக தொன்மை நாகரிகமான தமிழர் நாகரிகமும் அதற்குரிய தமிழினமும் அழிக்கப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது.

இந்தப் பேரழிப்புத் திட்டங்களை, பேரழிப்பு பகை நடவடிக்கைகளை எதிர்த்து வளங்குன்றா வளர்ச்சி மற்றும் போரற்ற உலகம் படைக்க, வ.உ.சி. பிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளில் தமிழக இளையோர் உறுதியேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.


நிறைவில், திரு. மா. இராமதாசு நன்றி நவில்கிறார். நிகழ்வின் தொடக்கத்தில், “வேட்டி” குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் தஞ்சை இராம முர்த்தி, முனைவர் கி. அரங்கன், வெற்றித்தமிழர் பேரவை திரு. இரா. செழியன், பொறியாளர் ஜான் கென்னடி உள்ளிட்ட பல இன உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.