“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்! தோழர் பெ. மணியரசன்.
“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
அன்புமிக்க தோழர் திருமாவேலன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் சிறப்பான இதழியல் பணிகளைப் பார்த்தும் எழுத்துகளைப் படித்தும் மகிழ்ச்சி கொள்பவர்களில் நானும் ஒருவன்.
“பெரியோர்களே, தாய்மார்களே” என்ற தங்களது கட்டுரைத் தொடர் ஜூனியர் விகடனில் “வணக்கம்” போட்டு முடித்ததைக் கண்டு – ஏன் அதற்குள் முடித்து வீட்டார் என்ற உணர்வும் என் மனத்தில் தோன்றியது. அந்தத் தொடர் கட்டுரைகள் அனைத்தையும் நான் படிக்கவில்லை என்றாலும் பல கட்டுரைகளைப் படித்துள்ளேன்.
பரந்துபட்ட மக்கள் வெளிக்கு வராத பல நாயகர்களை, பல வரலாற்று நிகழ்வுகளை அக்கட்டுரைத் தொடர் வழியாக மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்தீர்கள். ஜி. சுப்பிரமணிய அய்யர், ஓ.பி. இராமசாமி ரெட்டியார், மறைமலை அடிகளார் எனப் பலரைக் குறிப்பிடலாம்.
உங்களுக்கு இந்த திறந்த மடலை எழுத எனக்குத் தூண்டுகோலாக அமைந்த கட்டுரை திராவிடச் சாதனைகள் குறித்து, “பெரியோர்களே, தாய்மார்களே” தொடரில், 87-ஆவது கட்டுரையாகத் தாங்கள் எழுதியுள்ள கட்டுரைதான்! (ஜீ.வி., 11.05.2016).
நான் குறிப்பிடும் உங்களது கட்டுரையில் உள்ள குறைபாடு, வரலாற்றை ஒற்றை முகம் கொண்டதாகப் பார்க்கும் பார்வைதான்!
இந்தியத் துணைக் கண்டத்தின் நவீன கால வரலாற்றைக் காங்கிரசுடனும் காந்தியுடனும் மட்டும் காட்டிய இந்தியத்தேசியவாதிகள் போல், நவீனகாலத் தமிழ்நாட்டின் வரலாற்றைத் திராவிடம் – பெரியார் என்ற ஒருமுகப் பார்வையுடன் காட்டியுள்ளீர்கள்.
சங்க காலத்தில் தமிழ்ப் பேரரசு உருவாகவில்லை என்கிறீர்கள். இரண்டாயிம் ஆண்டுகளுக்கு முன் தேசிய இன அடிப்படையிலோ அல்லது மொழி அடிப்படையிலோ உலகில் எந்த இனத்திலும், எந்த மொழியிலும் அரசு உருவாகவில்லை.
தமிழ் மாநிலத்திற்குத் “தமிழ்நாடு” என்ற பெயரை திராவிட இயக்கம்தான் சூட்டியது என்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் சங்க காலத்தில் பல அரசுகள் தமிழ் மண்ணில் இருந்த போதும் தமிழகம், தமிழ்நாடு என்ற தாயகப் பெயர்கள் அப்போதே தமிழர்களால் சூட்டப்பட்டன.
“வையக வரப்பில் தமிழகம் கேட்ப” – புறநானுறு-168.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகத்தெல்லாம்” – பரிபாடல்.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய” – சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்).
பிரித்தானிய அரசு தனது நிர்வாக வசதிக்கேற்ப பல்வேறு மொழி பேசும் மக்களின் தாயகப் பகுதிகளை ஒரே மாகாணமாக இணைத்தது.
சென்னை மாகாணம் அப்படித்தான் உருவாக்கப்பட்டது. காந்தி காங்கிரசில் முதன்மை பெற்ற பின் மொழிவாரி மாநிலக் காங்கிரசுக் கமிட்டிகளை உருவாக்கச் சொன்னார். 1920களில் அப்படி உருவானதுதான் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி. திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள் அன்று காங்கிரசின் பொறுப்புகளில் இருந்ததால், சென்னை மாகாண பிரதேச காங்கிரசுக் கமிட்டிக்கு ”தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி” என்று பெயர் சூட்டப்பட்டது. இன்றும் அதே பெயர் நிலைத்துள்ளது.
மற்ற மாநிலக் கமிட்டிகளின் பெயரில் “பிரதேசம்” என்பது இருக்கும். தமிழ்நாட்டில் அது இல்லை.
விடுதலை பெற்ற இந்தியாவில் புதிய மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் பெயர் சென்னை மாகாணமாகவே நீடித்தது. காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பெரியவர் சங்கரலிங்கனார், தமிழ்நாடு என்று பெயர் மாற்றிட வலியுறுத்தி 1956இல் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் 76 நாட்கள் நடத்தி உயிரீகம் செய்தார். பெரியாரால் ”பச்சைத்தமிழர்” என்று பாராட்டப்பெற்ற காமராசர்தாம் அப்போது முதலமைச்சர்!
ஆட்சியாளர்கள் சென்னை மாநிலம் என்று பெயர் (dejure) வைத்திருந்தாலும், மக்கள் தங்கள் வழக்கில் (defacto) தமிழ்நாடு என்றே காலம் காலமாக அழைத்து வந்தனர். “தமிழ் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது” திராவிடமே என்று தாங்கள் கூறுவதில் மேற்கண்ட வரலாற்று உண்மைகளைத் தாங்கள் கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை தோழரே!
நடைமுறையில் தமிழ்நாடு என்ற வழக்கத்தில் இருந்த பெயரை, 1969-இல் முதலமைச்சர் அண்ணா சட்டப்படியானதாக்கினார். அண்ணாவுக்கு நன்றி சொல்வோம்.
அதேவேளை, தமிழர் – தமிழ்நாடு பெயர்களை மறைத்து, திராவிடர் – திராவிடநாடு என்று திரிபுப் பெயர்களைப் பரப்பி மக்களைக் குழப்பியவர்களும் திராவிட இயக்கத் தலைவர்களே!
சங்கத் தமிழ் இலக்கியங்களில், காப்பிய இலக்கியங்களில், பக்தி இலக்கியங்களில், ஏன் 18ஆம் நூற்றாண்டு வரை, எந்தத் தமிழ் இலக்கியத்திலும் இடம் பெறாத – செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றவற்றிலும் இடம் பெறாத – ஆரியர்களால் சமற்கிருதத்தில் மட்டுமே கையாளப்பட்ட திராவிட மொழி, திராவிட தேசம் என்ற கொச்சைச் சொற்களைத் தமிழர்களிடம் திணித்தவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களே!
ஆரியத்தின் அச்சொற்களிலிருந்து “திராவிடர்” என்ற ஓர் இனத்தைத் திரிபாக முதலில் கற்பனை செய்தவர் கால்டுவெல்! அவருக்குப் பின் அந்த ஆரியத் திரிபுப் பெயரை உச்சி மோந்து தமிழர்களிடம் திணித்து, தமிழர் – தமிழ்நாடு என்றுள்ள நம் இனத்தின் இயற்கைப் பெயர்களைப் பின்னுக்குத் தள்ளியவர்கள் திராவிடத் தலைவர்கள்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டி விட்டார்கள் என்று மகிழ்கிறீர்களே, இது பாகுபாடற்ற வரலாற்றுப் பார்வையா?
“இனப்பற்று, மொழிப்பற்றை உண்டாக்கியதே திராவிட இயக்கம்தான்” என்று கூறியுள்ளீர்கள்.
தமிழைப் படிக்காதே, தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ச் சனியனை விட்டுத் தொலை, ஆங்கிலத்தைப் படி, ஆங்கிலத்திலேயே உன் மனைவி, வேலைக்காரிகள் ஆகியோருடன் பேசு என்று எழுதியவர், பேசியவர் பெரியார். இதற்கான சான்றுகள் ஐயா ஆனைமுத்து 1974-இல் வெளியிட்ட ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுப்பு-2-இல் இருக்கின்றன.
இந்தித் திணிப்பை எதிர்த்து தி.மு.க.வின் முன்முயற்சியில் 1965 இல் மாபெரும் மொழிப்போர் மாணவர் போராட்டமாக - மக்கள் போராட்டமாக 50 நாள் நடந்தது. காங்கிரசு ஆட்சி 300 பேரை சுட்டுக் கொன்றது. எட்டு பேர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தார்கள். இந்த இந்தி எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை காலிகளின் போராட்டம் என்றார் பெரியார். காவல்துறையினர் கையில் இருக்கும் துப்பாக்கி பூப்பறிக்க இருக்கிறதா என்று அவர் கேட்டார்.
1965 மொழிப்போரில் திராவிட இயக்கம் என்று தி.மு.க.வைக் கூறுவதா? திராவிடக் கழகத்தைக் கூறுவதா?
நவீன காலத்தில் வள்ளலார், அயோத்திதாசர், பாரதியார், பாண்டிதுரைத்தேவர், மறைமலைஅடிகளார், நாவலர் சோமசுந்தரபாரதியார், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம், கரந்தை உமாமகேசுவரனார் போன்றவர்களும், தமிழ்நாடு அளவில் பிரபலம் அடையாத தமிழறிஞர் பலரும், தமிழ் உணர்வாளர்களும் ஆகிய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களே தமிழ் மொழிப்பற்றை உண்டாக்கி வந்தனர். மறைமலை அடிகளார் 1916-இல் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார்.
1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் கா. நமசிவாய 500 தமிழறிஞர்களைக் கூட்டினார். அக்கூட்டத்திற்கு மறைமலை அடிகளார் தலைமை தாங்கினார்.
காங்கிரசார் தங்கள் மாநாடுகளில் இந்தி – இந்தியாவின் தேசிய மொழி, அனைவரும் அதைக் கற்க வேண்டும் என்று வலியுறுத்திய கருத்துகளை முதல்முதலாக எதிர்த்தவர்கள் இப்படிப்பட்ட தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் ஆவர்.
அக்கூட்டத்தில் (1921) தமிழர்களுக்கான பொது ஆண்டு முறையாகத் திருவள்ளுவராண்டு கடைபிடிப்பது பற்றியும், தமிழர்களுக்கான பொதுவான திருநாள் கொண்டாடுவது பற்றியும் முடிவெடுத்தனர்.
1938 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார், திரு.வி.க., ஈழத்தடிகள் போன்ற தமிழறிஞர்கள் முன்னணியில் நின்றனர். அப்போராட்டத்திற்கு நடைமுறையில் தலைவராகவும் மக்கள் திரளிடம் அதைக் கொண்டு போய்ச் சேர்த்தவராகவும் விளங்கியவர் பெரியார். ஆனால் தமிழறிஞர்கள் பங்கு புறக்கணிக்கத்தக்கதன்று!
சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் 11.09.1938 அன்று கூடிய மாபெரும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில்தான், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற தீர்மானம் முன் மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அம்மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் மறைமலை அடிகளார். “தமிழ்நாடு தமிழர்க்கே” தீர்மானத்தை முன்மொழிந்தவர் மறைமலை அடிகளார். வழிமொழிந்து பேசியவர் பெரியார் மற்றும் நாவலர் சோமசுந்தர பாரதியார். (நூல்; தி.மு.க. – நாவலர் இரா. நெடுஞ்செழியன்).
அடுத்த சில மாதங்களிலேயே தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தைக் கைவிட்டு, 1939-இல் “திராவிடநாடு திராவிடர்க்கே” என்று மாறிப் போனார் பெரியார். ஏனெனில், அப்போது அவர் நீதிக்கட்சியின் தலைவராக்கப்பட்டிருந்தார்.
நீதிக்கட்சி ஆந்திரர்களை மையப்படுத்திச் செயல்பட்டது.
எல்லாரையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றது திராவிட இயக்கம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். காந்தியடிகளின் ஆக்கத்திட்டங்களில் ஒன்றாக அனைவர்க்குமான கோயில் நுழைவுப் போராட்டம் தமிழ்நாட்டில் செயல்பட்டது.
மதுரையில் வைத்தியநாதய்யர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டமும் குறிப்பிடத்தக்கதே.
பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று திராவிட இயக்கம் அடையாளப்படுத்தப்பட்டதாக எழுதியுள்ளீர்கள். கம்யூனிஸ்ட்டுக் கட்சிதான் அப்படி அடையாளப்படுத்தப்பட்டது.
காரணம் அக்கட்சி தீண்டாமைக் கொடுமைக் கெதிராகக் கடுமையாகப் போராடியது. பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிராக – சாதி ஆதிக்கத்திற்கெதிராகப் பெரியாரும் அண்ணாவும் திராவிட இயக்கத்தவரும் நடத்திய போராட்டங்கள் மற்றும் பரப்புரைகள் போற்றத்தக்கவை. அவற்றை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது!
ஆனால், 1968இல் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது கீழ்வெண்மணியில் ஒடுக்கப்பட்ட வகுப்பு உழைப்பாளிகள் ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக 44 பேர் ஒரு குடிசைக்குள் வைத்து பார்ப்பனரல்லாத சாதி ஆதிக்க வெறியர்களால் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட போது – பெரியார், இந்த இடத்துக்குப் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூடக் கூறவில்லை.
உடனடியாகக் கண்டன அறிக்கைகூட விடவில்லை. மூன்று நாள் கழித்து நீதி கெட்டுப் போன பல நிகழ்வுகளில் ஒன்றாகக் கீழ்வெண்மணி மனித எரிப்பையும் சில வரிகளில் குறிப்பிட்டு இருந்தார். கம்யூனிஸ்ட்டுக் கட்சியை போல் தீண்டாமைக்கெதிராக நேரடிக் களப் போராட்டங்களை திராவிட இயக்கம் பரவலாக எடுத்ததாகத் தெரியவில்லை.
“நீ பள்ளிக்கு வராதே, அப்பன் தொழிலைப் பார்” என்று பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் முற்றிலுமாகக் கல்வியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தது போலவும், திராவிட இயக்கம் வந்த பிறகுதான் வீதிகள் தோறும் பள்ளிச் சாலைகள் திறக்கப்பட்டன என்றும் பள்ளிச் சாலைகள் தோறும் பாமரப் பிள்ளைகள் படித்தனர் என்றும் நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
நீதிக்கட்சி தொடங்கியதின் முதன்மையான நோக்கமே, பார்ப்பனரல்லாதாரில் படித்தவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கேற்ற விகிதத்தில் அரசு வேலை வழங்கவில்லை, அதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகத்தான்!
இதனை பிட்.டி. தியாகராயர், தாம் 1916-இல் வெளியிட்ட பார்ப்பனரல்லாதார் அறிக்கையில் (Non-Brahmin Manifesto), “தாமதமாக நுழைந்திருந்தாலும் பார்ப்பனரல்லாத சமுதாயங்கள் கல்வித்துறையில் முன்னேறத் தொடங்கி விட்டனர். அவர்கள் முன்னேற்றத்திற்கான பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள். மிகவும் பின் தங்கியோர் கூட கல்வியில் முன்னேற வேண்டும் என்ற பொதுவான உணர்வு எல்லோருக்கும் வந்துவிட்டது” என்கிறார். (முரசொலி மாறன், திராவிட இயக்க வரலாறு -1).
ஆங்கில அரசு அனைவருக்குமான பொதுக் கல்வியைத் திறந்து விட்டதும், கல்விச் சாலைகளை நிறுவியதும், கிறித்துவ சமய நிறுவனங்கள் கல்விக் கூடங்களைக் கட்டியதையும், பொதுநல நோக்கம் கொண்ட பார்ப்பனரல்லாத செல்வந்தர்கள் தங்கள் செலவில் பொதுக் கல்விக் கூடங்கள் நிறுவியதும், பார்ப்பனர்கள் நிறுவிய கல்விக் கூடங்களில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொண்டதுமான பல நிகழ்வுகள் திராவிட இயக்கத்திற்கு அப்பால் நடந்த கல்வி வளர்ச்சி!
பார்ப்பனரல்லாத சாதி அமைப்புகள் கூட அறக்கட்டளை உருவாக்கி தங்கள் வகுப்புப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்குத் துணை நின்றன.
வர்ணசாதியால் பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கருது கோளை ஓர் ஆணையாக 1854 ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் வருவாய்துறை போட்டது ஆனால் அது செயல்படுத்தப்பட வில்லை.
இந்தியாவில் முதல் முதலாக இடஒதுக்கீடு வழங்கியவர் மராட்டியத்தில் சாகு மகாராசா. அடுத்து மைசூர் சமஸ்தானத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. இவ்வாறு இடஒதுக்கீட்டின் வரலாறும் பன்முகம் கொண்டு நீள்கிறது அது திராவிட இயக்கத்தின் தனி கண்டுபிடிப்பன்று.
திராவிட இயக்கம் இல்லாத கேரளாதான் இந்தியாவிலேயே கல்வி கற்றோர் விகிதத்தில் முதலிடம் வகிக்கிறது. (93.6%). மிக மோசமான பார்ப்பன ஆதிக்கத்தில் கீழ் துன்புற்ற மக்கள் மலையாளிகள்! ஆந்திரப் பிரதேசம், மராட்டியம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கல்வி கற்றோர் விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன.(85%). இந்திய விடுதலைக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் கல்வி கற்றோர் விகிதம் குறுகிய காலத்தில் பெருகியுள்ளது.
இந்த வளர்ச்சி இரண்டாம் உலகப் போருக்கு பிறகு விடுதலையடைந்த பெரும்பாலான காலனி நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தனித்த சாதனையாகக் கருதமுடியாது.
திராவிட இயக்கம் தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சியில் பங்களிப்பு நல்கியதை நாம் மறுக்கவில்லை. அதேபோல் காங்கிரசு இயக்கம் – காமராசர் முயற்சி ஆகியவையும் தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தின.
இத்தனை முயற்சிகளையும் திராவிட இயக்கத்தின் ஒற்றைப் பங்களிப்பாக சுருக்குவது அறமாகுமா தோழர் திருமாவேலன்?
பெண்ணுரிமைப் போராட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கிருக்கிறது. பாரதியார்க்குப் பங்கிருக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பங்கிருக்கிறது. அயோத்திதாசர், அம்பேத்கர் சிந்தனைகளுக்கும் பங்கிருக்கிறது. பெரியாருக்குச் சிறப்பான பங்கிருக்கிறது.
இத்தனை முயற்சிகளையும் திராவிட இயக்க ஒற்றை முயற்சியாகக் காட்டுவது சார்பற்ற வரலாறாகுமா?
தமிழ்த்தேசியம் பேசுவோர் உண்மைக்குப் புறம்பாகத் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தினால், அதனை விமர்சியுங்கள்.
ஆனால் திராவிட இயக்கத்திலிருந்துதான், பெரியார் பிறந்ததிலிருந்துதான் தமிழினத்தின் நவீன கால வரலாறு பிறந்தது என்பதுபோல் சித்தரிப்புகளை வழங்காதீர்கள். ஆதாயந்தேடும் திராவிட அரசியல்வாதிகள் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உங்களிடம் அதை இளந்தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்குத் திராவிடச் சார்பிருந்தாலும் நீங்கள் தமிழினத்தின் அறிவுத்துறை சார்ந்த ஓர் ஆற்றலாளர்.
தமிழ்த்தேசியம், தன்னுரிமை இயக்கங்கள் உருவாவதற்கு முன்பே 1938-ஆம் ஆண்டிலேயே திராவிட இயக்கம் தமிழ்நாடு தமிழர்க்கே என்று முழக்கமிட்டது என்கிறீர்கள். சரி. அதை அடுத்த ஆண்டே கைவிட்டதும் அதே இயக்கம்தானே!
“அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று முழக்கமிட்டுவிட்டு, தங்களை ஆட்சி நாற்காலியில் அமர்த்திக் கொண்டு, திராவிட நாட்டை சுடுகாட்டுக்கு அனுப்பியது அதே திராவிட இயக்கம்தானே!
இந்திய அரசை ஏகாதிபத்திய அரசு என்று பெரியார் கூறினார்; அண்ணா கூறினார். அந்த அரசின் கொடியை ஏற்றும் உரிமையைக் கலைஞர் கருணாநிதி பெற்றதை சாதனையாகக் கூறுகிறீர்களே திருமாவேலன், அது ஒரு ஏகாதிபத்தியக் கங்காணியின் வேலை என்பதை உங்களால் உணர முடியவில்லையா?
1990 பிப்ரவரி 25-இல் சென்னை பெரியார் திடலில் நாம் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்தினோம். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அம்மாநாட்டிற்குக் கடுமையாக உழைத்தார். நீங்களும் உங்கள் தோழர்களும் அம்மாநாட்டிற்கு உங்களால் இயன்ற உழைப்பை நல்கினீர்கள்.
அம்மாநாட்டில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற தீர்மானத்தை நான் முன் மொழிந்தேன். அன்று உங்கள் அனைவர்க்கும் உவப்பான – ஒப்புதல் உள்ள தீர்மானத்தை முன்மொழிந்ததற்காக, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி பிரிவினைத் தடைச் சட்டத்தின்கீழ் என்னைக் கைது செய்து சென்னை நடுவண் சிறையில் அடைத்தது. உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் இப்போது, இந்திய அரசுக் கொடி ஏற்றும் உரிமையைக் கலைஞர் பெற்றுத் தந்ததைப் பாராட்டுகிறீர்கள்.
சன்யாட்சென், கமால் பாட்சா, மாஜினி, பிரஞ்சுப்புரட்சி, இரசியப்புரட்சியை எல்லாம் ஒப்பிட்டு, அவர்களைப் போல் தமிழ்நாட்டில் தேசிய இன எழுச்சி உருவாகக் காரணமாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தவர்கள் என்று கூறியுள்ளீர்கள்.
தமிழ்நாடு விடுதலை என்று சொல்லிக் கொண்டே, இந்திய ஏகாதிபத்திய ஆளுங்கட்சியான காங்கிரசை 1954லிருந்து 1967வரை ஆதரித்து வந்தார் பெரியார். காங்கிரசு ஒழிப்பு, தமது இலட்சியங்களில் ஒன்று என்று அறிவித்த பெரியார், தி.மு.க. ஒழிப்பைத்தான் 1949லிருந்து 1967வரை - தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும்வரை தமது நடைமுறை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இவை எல்லாம் உங்களுக்கு ஏற்புடையவைதாமா?
தமிழ் இன உணர்வாளர்கள் – தமிழ்த்தேசியம் பேசுவோர் “கட்டாந்தரையைப் பார்த்து, திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள்” என்று நையாண்டி செய்துள்ளீர்கள்.
தமிழ்த்தேசியர்கள் – தமிழின உணர்வாளர்கள் ஆகியோர் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறாத தனிநபர்கள் என்பதுபோல் கூறியிருக்கிறீர்கள். மக்களின் ஆதரவைக் கருதத்தக்க அளவில் தமிழ்த்தேசியர்கள் திரட்ட வேண்டிய உடனடிக் கடமை இருப்பதை நீங்கள், வேறு வகையில் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறீர்கள். நன்றி தோழர்!
அன்புடன்,
பெ. மணியரசன்
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment