ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

”தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு!

”தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!



ஆதிக்க இந்தியாவின் அடிமையாக உள்ள தமிழ்நாடு, தனது அடிமை முறியைப் புதுப்பித்துக் கொள்ளும் வடிமாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று (2016 மே 16) பரபரப்போடு நடந்து கொண்டிருந்த வேளையில், அந்த அடிமைத் தேர்தலைப் புறக்கணித்து – தமிழ் இன விடுதலைக்காகப் போராடும் தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு விடுதலைக்காக உயிரீகம் செய்த புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் வீரவணக்க நிகழ்வை நடத்தியது.

நக்சல்பாரி இயக்கத்தின் தமிழக நிறுவனர்களில் ஒருவரும் தூக்குத் தண்டனை பெற்று பின்னர் வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வெளிவந்த ஈகியும் தமிழ்த் தேசியப் போராளியுமான புலவர் கு.கலியபெருமாள் அவர்கள், கடந்த 16.05.2007 அன்று காலமானார்.

மார்க்சியத்தை ஓர் ஆன்மிக நூல் போல் பார்க்காமல் மண்ணுக்கேற்ப மாற்றி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற படைப்பூக்கம் மிக்க புரட்சியாளராக விளங்கியவர் புலவர் கலியபெருமாள்.

தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டு சிறையிலிருந்த நிலையில், அதிலிருந்து விடுபட அரசுக்குக் கருணை மனு அளிக்கப் பலரும் புலவர் கலியபெருமாளை வலியுறுத்திய போது, “ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால்என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை” என்றுகூறி கருணை மனுத்தாக்கல் செய்ய மறுத்தார்.

புலவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில் அவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் விதைக்கப்பட்டது. 22.2.1970-இல்தோழர்கள் சர்ச்சில்கணேசன்காணியப்பன் வீரமரணம் எய்திய அதே இடத்தில் புலவரின் உடல் விதைக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடம்தென்னஞ்சோலை செங்களம்” என அழைக்கப்படுகிறது.

நேற்று (16.05.2016) மாலை 6 மணியளவில் செங்களத்தில், “தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் - வீரவணக்க நிகழ்வு, எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வுக்கு, புலவர் கலியபெருமாள் அவர்களின் தம்பியும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெண்ணாடம் செயலாளருமான தோழர் கு. மாசிலாமணி தலைமை தாங்கினார்.

புலவர், மனைவி வாளாம்பாள், தோழர்கள் கணேசன், சர்ச்சில், காணியப்பன் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி, முழக்கங்கள் எழுத்தி, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழர் தேசிய முன்னணி மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர். நிறைவில், தோழர் சௌ.ரா. கிருட்டிணமூர்த்தி நன்றி கூறினார்.

நிகழ்வில், மாந்த நேயப் பேரவை திரு. பெ.ச. பஞ்சநாதன், தோழர் க. சோழநம்பியார், தமிழ்த் தேசியப் பேரியக்க முருகன்குடி செயலாளர் தோழர் அரா. கனகசபை, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, தமிழக மாணவர் முனுனணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இராமகிருட்டிணன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மு. வித்யா உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

புலவர் கு. கலியபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.