ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மோடி அரசின் ரேசன் கடை மூடல் திட்டத்திற்கு அடிபணிந்து - தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!

மோடி அரசின் ரேசன் கடை மூடல் திட்டத்திற்கு அடிபணிந்து - தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
தமிழ்நாட்டு ரேசன் கடைகளை படிப்படியாக மூடுவதற்கு மோடி அரசு தொடுத்துள்ள தாக்குதலுக்கு, இறுதியில் தமிழ்நாடு அரசு பணிந்து விட்டது.

இந்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை, வரும் 2016 நவம்பர் 1 முதல் செயல்படுத்தப் போவதாக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, இந்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற நல்ல பெயரில் அழைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் குலைக்கும் சட்டமாகும்.
அதைவிட இச்சட்டம், தமிழ்நாடு அரசின் உணவு வழங்கல் அதிகாரத்தை பறிக்கும் சட்டமாகும்.

வரைவு நிலையிலிருந்தே இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்த்து வந்தது. 2013-இல், இச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது, தமிழ்நாடு அரசு அச்சட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என உறுதிபட அறிவித்தது.

இந்நிலையில், இந்திய அரசு தமிழ்நாட்டு நியாய விலைக் கடைகளில் வழங்குவதற்காக வழங்கப்பட்ட அரிசியில், வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளோர் என்று பிரிக்கப்பட்டோரின் அட்டைகளுக்கு வழங்கும் அரிசியின் விலையை கிலோ 8 ரூபாய் 30 பைசாலிருந்து, 22 ரூபாய் 50 பைசாவுக்கு என மும்மடங்குக்கு மேல் உயர்த்தியது.

இதன் காரணமாக, தமிழ்நாடு அரசின் உணவு மானிய நிதிச்சுமை திடீரென்று 2,100 கோடி ரூபாய் உயர்ந்தது. இதை உறுதியாக நின்று எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும் நவம்பர் 1-லிருந்து செயல்படுத்துவதாகவும் அறிவித்திருப்பது தமிழ்நாட்டு எளிய மக்களின் எதிர்கால உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நிலையாகும்.

உடனடி எதிர்காலத்திற்கு தமிழ்நாடு அரசே கூடுதல் நிதிச்சுமையை ஏற்றுக் கொள்வதாகவும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கலும், அதற்குக் கூடுதலாகக் குறைந்த விலையில் வழங்கலும் தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆயினும் இந்திய அரசு வற்புறுத்துவது போல, நியாய விலைக் கடைகளில், விலையில்லாமலும் குறைந்த விலையிலும் அரிசி வழங்குவது நிறுத்தப்படும் நாள் நெருங்கி வருகிறது என்ற அபாய அறிவிப்பே தமிழ்நாடு அரசின் முடிவாகும்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1 கோடியே 90 இலட்சம் குடும்பங்களுக்கு விலையில்லாமலும், குறைந்த விலையிலும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதி 3 (2), ஏறத்தாழ தமிழ்நாட்டுக் குடும்ப அட்டைதாரர்களில் 51 விழுக்காட்டினருக்கு இந்திய உணவுக் கழகத்தின் சந்தை விலையில் அரிசி வாங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அந்த சந்தை விலைதான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 22 ரூபாய் 50 காசு என்பதாகும்.

தமிழ்நாடு அரசு மாதந்தோறும் நடுவண் தொகுப்பிலிருந்து பெறும் அரிசி, ஏறத்தாழ 2 இலட்சத்து 90 ஆயிரம் டன் ஆகும்.

இப்போது, இந்திய அரசு அறிவித்துள்ளபடி இதில் ஏறத்தாழ 1 இலட்சத்து 40,000 டன் கிலோ 22 ரூபாய் 50 காசு விலையில் வாங்க வேண்டும். மீதியுள்ள அரிசியை கிலோ 7 ரூபாய் 50 காசுக்கு வாங்க வேண்டும்.

இந்திய அரசின் சட்டம் ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கு விற்கச் சொல்கிறது. தமிழ்நாடு அரசோ எல்லா குடும்ப அட்டைக்கும் 20 கிலோ விலை இல்லாமலும், அதற்கு மேல் கிலோ 3 ரூபாய் 25 காசிற்கும் விற்கிறது.

இப்போது, தமிழ்நாடு அரசு செலவிட்டு வரும் உணவு மானியம் ஆண்டுக்கு 5,100 கோடி ரூபாய் ஆகும். அது இனி, 7,300 கோடி ரூபாயாக உயரும். இதில் ஏறத்தாழ 5,100 கோடி ரூபாய் அரிசிக்கு மட்டுமே செலவிடப்படுகிறது.

சிக்கல் இத்தோடு நிற்கவில்லை. இந்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின், அட்டவணை 1 – “மூன்று ரூபாய் அரிசித் திட்டம் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தொடரும் என்றும், அதற்குப் பிரிவு அரிசிக் கொள்முதலுக்கானக் குறைந்தளவு ஆதரவு விலைக்கு மிகாமல் இருக்கும் வகையில் விலை உயர்த்தப்படும்” என்றும் அறிவிக்கிறது.

அதுமட்டுமல்ல, “அரிசியோ கோதுமையோ மானிய விலையில் வழங்குவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டால், இதற்கான தொகையை இந்திய அரசு பணமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ வழங்கும், அதே வடிவத்தில் மாநில அரசும் மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று இச்சட்டத்தின் விதி 13 கூறுகிறது.

இதுகுறித்து இச்சட்டத்தின் விதி 18 (2)(h) விளக்கமளிக்கிறது. பணமும் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டால், ரேசன் அட்டைதாரர்களுக்கு உணவுக் கூப்பன்களை வழங்க வேண்டும், அந்தக் கூப்பன்களை வைத்துக் கொண்டு வெளிச்சந்தையில் அரிசியை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறுகிறது.

அதாவது, ஒரு அரிசிக் கூப்பனின் மதிப்பு கிலோவுக்கு 3 ரூபாய். வெளிச்சந்தையில் கிலோ 30 ரூபாய் என்றால், கையிலிருந்து 27 ரூபாய் கொடுத்தால்தான் 1 கிலோ அரிசியை ஏழை எளிய மக்கள் வாங்க முடியும்.

இவ்வாறு நியாயவிலை அரிசி வழங்கல் படிப்படியாக நிறுத்தப்படும் நிலை ஏற்படும்.

ஏற்கெனவே, ரேசன் கடைகளில் வழங்கும் மண்ணெண்ணெய் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டு விட்டது.

அரிசியும், மண்ணெண்ணெயும் குறைந்த விலையில் வழங்கும் வாய்ப்பு இல்லையென்றால், ரேசன் கடை என்ற ஒன்றே இருக்காது. இதுதான் இந்திய அரசின் திட்டமும் ஆகும்!

குறிப்பிட்ட கால எல்லைக்குள், இவ்வாறு பெரும்பகுதி ரேசன் கடைகளை மூடிவிடுவதாக உலக வர்த்தகக் கழகத்தில் இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதுதான் இப்போது செயலாகிறது. தமிழ்நாட்டின் ஏழை எளிய நுகர்வோரை மட்டுமின்றி, உழவர்களையும் கடுமையாகத் தாக்கும்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு, நெல் கொள்முதலில் நேரடிப் பொறுப்பிலிருந்து நீங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. நடுவண் அரசின் இந்திய உணவுக் கழகத்தின் முகவராகத்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்படுகிறது. இந்திய உணவுக் கழகம், எவ்வளவு தேவை என்று அறிவிக்கிறதோ அந்தளவுக்கு மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது. இந்த நெல், நடுவண் அரசுத் தொகுப்பில் கணக்கு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய அரசு தமிழ்நாடு நெல் கொள்முதலை மிகவும் குறுகிய வரம்புக்கு உட்படுத்துகிறது.

நடுவண் தொகுப்பு என்ற பெயரால், தமிழ்நாட்டு ரேசன் கடைகளுக்கு பஞ்சாப், அரியானா, ஒரிசா, சில நேரங்களில் வங்காள அரிசி வருகிறது. வெளிச் சந்தையிலோ கர்நாடக அரிசியும், ஆந்திராப் பொன்னியும் கோலோச்சுகிறது. தமிழ்நாட்டு உழவர்கள் தமிழ்நாட்டுச் சந்தையை பறிகொடுத்து விட்டார்கள்.

இன்னொருபுறம், விலையில்லா அரிசி வழங்குவதால் மானியச் சுமையை ஓரளவுக்கு மேல் தாங்க முடியாத தமிழ்நாடு அரசு, உழவர்கள் விளைவிக்கும் நெல்லுக்குத் தரும் ஊக்கத் தொகையை உயர்த்தாமல் பார்த்துக் கொள்கிறது.

இப்போதே இந்த நிலை! இந்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம், முழு அளவில் தமிழ்நாட்டில் வருங்காலத்தில் செயல்பட்டால் மக்களுக்கு ரேசன் கடையும் இல்லை, உழவர்களுக்கு அரசின் நெல் கொள்முதலும் இல்லை என்ற நிலையே ஏற்படும்.

ஏற்கெனவே, பெருமளவுப் பற்றாக்குறையிலும், கடன் சுமையிலும் இருக்கும் தமிழ்நாடு அரசு, இந்த சுமை அனைத்தையும் மக்கள் மீது சுமத்தி வதைக்க இருக்கிறது!

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது என்ற முடிவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் இந்திய அரசு திரட்டும் வரி இனங்களில், பாதியையாவது பெற்று உணவு மானியத்தையும் உழவு மானியத்தையும் விரிவாக்கி தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும்.

அதற்கு மாறான தமிழ்நாடு அரசின் முடிவை, தமிழ்நாட்டு மக்களும் உழவர்களும் ஒன்று திரண்டு எதிர்த்து முறியடிக்க வேண்டும.

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.