“தாராளமயமும், கறுப்புப்பணமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்!” கி. வெங்கட்ராமன் பேட்டி!
“தாராளமயமும், கறுப்புப்பணமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்!” தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டி!
“தாராளமயமும், கறுப்புப்பணமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்” என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், சூனியர் விகடன் ஏட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“இதனால் ஒழியுமா கருப்புப் பணம்!” என்ற தலைப்பில், 16.11.2016 நாளிட்ட சூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரைக்காக பேட்டியளித்துள்ள தோழர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளதாவது :
“தாராளமயமும், கருப்புப் பணமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் வராமல், கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவது மக்களை ஏமாற்றும் செயல்.
இந்தியாவில் பெரும் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம் அரசின் அங்கமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் அதிகாரமும் குவிந்து கிடக்கிறது. எனவே, கறுப்பை எப்படி வெள்ளையாக மாற்ற வேண்டும் என்ற வித்தையை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப் போவதென்னவோ, சாமான்ய மக்கள்தான்.
மோடி அரசின் உண்மையான நோக்கம், கறுப்புப் பணத்துக்கு எதிரான தன் தோல்வியை மறைத்து திசை திருப்புவது, அதன் மூலம் ஒரு பொருளாதார அவசர நிலையை அறிவித்து, மக்களின் அனைத்து சனநாயக உரிமைகளையும் முடக்குவது. அதற்கான முன்தயாரிப்புதான் இது!
தீவிரவாதிகளின் பணப்பரிவர்த்தனை முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும் என்கிறார்கள். அதுவும் சரியான வாதமாகத் தெரியவில்லை. அப்படி தீவிரவாதிகளின் பணப் பரிவர்த்தனையை தடுத்து நிறுத்த வேண்டுமானால், ஏற்கெனவே உள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தினாலே போதும்!”
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment