தருமபுரி யூனியன் வங்கியில் விதிமுறைப்படி பணம் கேட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல்!
தருமபுரி யூனியன் வங்கியில் விதிமுறைப்படி பணம் கேட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல்!
“கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில் பா.ச.க. நரேந்திர மோடி அரசு, நாட்டு மக்களின் மீது கொடுந்தாக்குதலைத் தொடுத்து, மக்களை வீதிகளில் அலைய விட்டுள்ளது. தான் உழைத்துச் சேர்த்தப் பணத்தைக்கூட செலவிட முடியாமல், மக்கள் திணறி வருகின்றனர். பல இடங்களில் உயிரிழப்புகளும், தற்கொலைகளும் இதன் காரணமாக நடைபெற்று மக்கள் பதற்றோடு அலைகின்றனர்.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற - இந்திய சேம (ரிசர்வ்) வங்கியின் அறிவித்துள்ள அறிவுரைகளின்படி பெரும்பாலான வங்கிகள் செயல்படுவதே இல்லை. எப்பொழுதும் 4 மணிக்கே மூடப்படும் சென்னை இந்திய சேம வங்கி அலுவலகம், 3 மணிக்கே இழுத்து மூடப்பட்டதும், பணம் மாற்ற வரிசையில் நின்ற மக்கள் ஏமாற்றத்தோடு தெருவில் நின்றதும் குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியின் அறிவிப்பு வந்த 08.11.2016 அன்று, இந்திய சேம வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை (எண் RBI/2016-17/112, DCM (Plg) No.1226/10.27.00/2016-17), ஒருவர் வங்கியில் நேரடியாகச் சென்று அவரவர் சொந்தக் கணக்கிலிருந்து காசோலை அல்லது பணம் எடுப்புச் சீட்டு வழியாக (Withdrawal slip or Cheque) வாரத்திற்கு 24,000 ரூபாயும், ஒரு நாளைக்கு 10,000 ரூபாயும் எடுத்துக் கொள்ளலாம் என்று தெளிவாக தெரிவித்துள்ளது.
அதன்படி, தருமபுரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவரும், தமிழ்த்தேசியப் பேரியக்க முன்னணிச் செயல்பாட்டாளருமான தோழர் அன்பழகன், தருமபுரி – அதியமான் பைபாஸ் சாலையிலுள்ள, “யூனியன் பேங்க் ஆப் இந்தியா” வங்கிக் கிளைக்கு, இன்று (14.11.2016) காலை, தனது கணக்கிலிருந்து தொழிலுக்காக, காசோலை வழியே 10,000 ரூபாய் எடுக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்தவர்கள் வெறும் 2,000 ரூபாய்தான் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.
உடனே அங்கிருந்த வங்கி மேலாளரான பிரபுசர்மாவிடம், தோழர் அன்பழகன் முறையிட்டுள்ளார். ஏ.டி.எம்.களில் 2,000 ரூபாயும் - வங்கிக் கணக்கில்லாதவர்களுக்கு 2,000 ரூபாயும் தரலாம், ஆனால் வங்கிக்கணக்கில் காசோலை அல்லது பணம் எடுப்புச் சீட்டு வழியாக 10,000 ரூபாய் வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளதே என தோழர் அன்பழகன் பேசிக் கொண்டிருக்கும்போதே, “அதெல்லாம் முடியாது. இங்க நாங்க வைக்கிறதுதான் ரூல்ஸ்.. வெளியே போடா” என ஒருமையில் அந்த அதிகாரி பேசியுள்ளார்.
“எதற்காக மரியாதையில்லாமல் பேசுகிறீர்கள்?” என தோழர் அன்பழகன் திருப்பிக் கேட்கவே, “மேனேஜரையே எதிர்த்துப் பேசுறியா?” என பிரபுசர்மாவின் அருகில் இருந்தவர்களும் பிரபுசர்மாவும் தோழர் அன்பழகனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தோழர் அன்பழகனை சட்டையைப் பிடித்து இழுத்து வந்து, வெளியே தள்ளியுள்ளனர். கழுத்தில் தாக்கப்பட்டதோடு, நகக் கீறல்கள் பட்ட அன்பழகன், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
இவை அனைத்தும் வங்கியிலுள்ள கண்காணிப்பு ஒளிப்படக் கருவியில் (சி.சி.டி.வி. கேமரா) பதிவாகியுள்ளதால், காவல்துறையினர் இதனை ஆராய்ந்து, தம்மை தாக்கிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரி பிரபு சர்மா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோழர் அன்பழகன் ஊடகங்களிடம் செவ்வி அளித்துள்ளார்.
மக்கள் பணத்தை - விதிமுறைப்படி கொடுக்காமல், ஞாயம் கேட்ட தோழர் மீதும் கடுமையாகத் தாக்கி சர்வாதிகாரி போல் நடந்து கொண்ட யூனியன் வங்கி மேலாளர் பிரபுசர்மா மீதும், தாக்கிய வங்கி ஊழியர்கள் மீதும் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி செயல்படாத வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment