கவிதைப் போராளியாகவும் களப்போராளியாகவும் விளங்கிய பாவலர் இன்குலாப்-க்கு வீரவணக்கம்! பெ. மணியரசன் அறிக்கை!
கவிதைப் போராளியாகவும் களப்போராளியாகவும் விளங்கிய பாவலர் இன்குலாப்-க்கு வீரவணக்கம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழர் மறுமலர்ச்சிப் பாவலர்களில் சமகாலத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னோடிப் பாவலராக விளங்கி, நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள பாவலர் இன்குலாப் இன்று (01.12.2016) முற்பகல் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி, இடி போல் தாக்கியது!
தமிழர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பெருமைக்குரிய 1965 – இந்தித் திணிப்புப் போராட்டத்தில், மதுரைக் கல்லூரி மாணவராக களம் கண்டவர் இன்குலாப். 1970களில் இடதுசாரிச் சிந்தனைகள் எழுச்சிபெற்ற காலத்தில், புரட்சிகரக் கவிஞராக உருவெடுத்தவர் இன்குலாப்.
இந்தியத் துணைக் கண்டத்தின் தனித்தன்மையாகவுள்ள வர்ண சாதி ஆதிக்கத்தை எதிர்த்தும், பெண்ணுரிமையை வலியுறுத்தியும், பொதுவுடைமைக் கொள்கைகளை முன்வைத்தும் தமிழ்க் கவிதை இலக்கியத்தில் மகத்தான சாதனைகள் புரிந்தவர்; இளம் படைப்பாளிகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டிப்பாவலர்.
கீழ வெண்மணியில் சாதி ஆதிக்க வெறி பிடித்த நிலக்கிழார்களால், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் 44 பேர், ஒரு குடிசைக்குள் வைத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்ட அந்தக் கொடுமையை எதிர்த்து, “மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..” என்ற பாடலை, பாவலர் இன்குலாப் எழுதியபோது, அவர் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த மனச்சான்று நெருப்பும், சமத்துவத்தின் மீதான உண்மைப் பற்றும் கொழுந்துவிட்டெறியும் தமிழ்ச் சொற்களாக வெளிவந்தன.
பாவலர் இன்குலாப்பின் மன வலிமைக்கு ஏற்ற உடல் வலிமை இல்லை. அவ்வப்போது, உடல் நோவுகளால் பாதிக்கப்படுவார். ஆனால், உறுதி படைத்த அவர் தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டக் களங்களிலும், மனித உரிமைப் போராட்டக் களங்களிலும், தமிழுரிமைப் போராட்டக் களங்களிலும், பெண்ணுரிமைப் போராட்டக் களங்களிலும் கலந்து கொண்டு பலமுறை தளைப்பட்டுள்ளார்.
எமது “தமிழர் கண்ணோட்டம்” – மாதமிருமுறை இதழிலும் பொங்கல் விழா மலர்களிலும் மிகச்சிறந்த கவிதைகள் வழங்கியவர் இன்குலாப். தமிழ்த்தேசியச் சிந்தனையை ஏற்று அதன் வளர்ச்சிக்கு தம்மால் ஆன இலக்கியப் பணிகளைச் செய்ய முன் வந்தார்.
1965 மொழிப்போரின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவை, 2016 சனவரி 24 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் மதுரையில் நடத்திய போது, பாவரங்கத்திற்கு பாவலர் இன்குலாப் அவர்களை தலைமை தாங்க அழைத்தோம். அவர் உடல் நிலை பாதிப்பால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவர் தலைமைக் கவிதையை எம் தோழர்கள் ஊரப்பாக்கத்திலுள்ள அவரது இல்லம் சென்று, அவர் படிக்க காணொலியாக எடுத்து வந்தார்கள். அதை மதுரை மாநாட்டில் காட்சிப்படுத்தினோம்.
கவிதைப் போராளியாகவும் களப் போராளியாகவும் ஒருங்கிணைந்து செயல்பட்ட ஒப்பிலாப் பாவலர் இன்குலாப் அவர்கள், தமிழர் வரலாற்றில் நிலைத்தப் புகழோடு விளங்குவார். அவருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment