தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்!
தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில் இன்று (18.12.2016) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் க. பழனிமாணிக்கம், பாவலர் இன்குலாப், கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, தமிழின உரிமைப் போராளி புலவர் மகிபை பாவிசைக்கோ ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
1. தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்!
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் தங்களின் பொழுதுபோக்கு விளையாட்டின் ஒரு பகுதியாக கடைபிடித்து வந்த சல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்வதற்கு சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததின் விளைவாக, சல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளையில், தமிழர்களின் மரபுவழிப்பட்ட வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருக்கிறது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், காளைகளை அலங்கரித்து அதை ஒரு ஆன்மிக நிகழ்வாக நடத்திக் கொள்ள தடை இல்லை என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்த நிலையில், தமிழர் மரபு அடிப்படையில் சாதிச் சமய வேறுபாடற்ற திருவிழாவாக “காளைத் திருவிழா” நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள நுட்பத்தை தமிழ்நாடு அரசு புரிந்து கொண்டு, “காளைத் திருவிழா” நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் முன்னோர் வழக்கப்படி “காளைத் திருவிழா”வை சிறப்பாக நடத்தும்படி, த.தே.பே. தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி ஆகிய மாவட்டங்களில் தமிழர் மரபுப்படி அனைவருக்குமான “காளைத் திருவிழா”வை சிறப்புற நடத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்றுவதென்று பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.
2. இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களைப் புறக்கணித்து, வெளி
மாநிலத்தவர்களுக்கு வேலை தந்தால் அவர்களை வெளியேற்றுவோம்!
மாநிலத்தவர்களுக்கு வேலை தந்தால் அவர்களை வெளியேற்றுவோம்!
தமிழ்நாட்டிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கிக் கிளைகளில், பணியில் சேர நடந்தத் தேர்வில் 1,420 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதில் 90 விழுக்காட்டினர் கேரள மற்றும் இந்தி மாநில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கத்தையே முறியடிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அண்மைக்காலமாக 80 விழுக்காட்டிற்கு மேல் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள்.
இதற்காக நடத்தப்படும் அனைத்திந்தயத் தேர்வுகள் சூதாகவும் சூழ்ச்சியாகவும் நடத்தப்பட்டு, மண்ணின் மக்களாகிய தமிழ்நாட்டு மாணவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இப்பணிகளில் சேர்வதற்குரியத் தகுதியுள்ள கல்வி கற்று, வேலை கிடைக்காமல் இலட்சக்கணக்கானத் தமிழ்நாட்டு இளைஞர்கள் வறுமை மட்டுமின்றி அவமானத்தையும் சுமந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்!
அனைத்திந்தியத் தேர்வு முறையை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாகவே வேலைக்கு ஆள் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள இந்நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். இதுபோல், மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரும் அரசாணை சரோஜினி மகிசி அறிக்கையின் கீழ் கர்நாடகத்தில் செயல்படுகிறது என்பதை இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
இப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள எஸ்.பி.ஐ. கிளைகளில் உள்ள காலி இடங்களில், கேரளத்தவரையும் வடநாட்டினரையும் 90 விழுக்காட்டு அளவிற்கு வேலையில் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டு, அந்தத் தேர்வு முடிவுகளை இரத்து செய்ய வேண்டும்.
அவ்வாறில்லாமல் தேர்வில் வென்றவர்கள் என்ற சாக்கில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1,420 பேரை தமிழ்நாடு எஸ்.பி.ஐ. கிளைகளில் பணியமர்த்தினால், அந்தந்த வங்கி அலுவலகத்திற்குள் சென்று, புதிதாக வேலைக்குச் சேர்ந்த அயல் மாநிலத்தவரை வெளியேற்றுவோம் என்று இத்தலைமைச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
மண்ணின் மக்களுக்கான இந்தத் தற்காப்பு அறவழிப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அங்கங்கே கலந்து கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.
3. தமிழ்நாட்டை முழு வறட்சி மாநிலமாக அறிவித்து, துயர் நீக்கப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்!
இந்திய அரசின் துணையுடன் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை
திறந்துவிடாமல், தானே எடுத்துக் கொண்டதால் காவிரிப் பாசன மாவட்டங்கள் சாகுபடி இழந்து, செய்த சாகுபடிப் பயிரும் கருகி, முற்றிலுமாக இவ்வாண்டு வேளாண்மை பாழ்பட்டுவிட்டது.
திறந்துவிடாமல், தானே எடுத்துக் கொண்டதால் காவிரிப் பாசன மாவட்டங்கள் சாகுபடி இழந்து, செய்த சாகுபடிப் பயிரும் கருகி, முற்றிலுமாக இவ்வாண்டு வேளாண்மை பாழ்பட்டுவிட்டது.
இவ்வாண்டு, தமிழ்நாடு முழுவதிலும் பத்து விழுக்காட்டு அளவிற்கே மழைப் பெய்து, 90 விழுக்காடு பருவமழைப் பொய்த்துப் போனதால், முழு வறட்சி நிலவுகிறது. எனவே, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் வறட்சி பாதித்த மாநிலமாக தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்புடன் சேர்த்து, வறட்சித் துயர் நீக்கத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
பயிர் செய்து தண்ணீரின்றி காய்ந்து போன நிலங்களுக்கு – நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய், கரும்புக்கு ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாய், மற்றும் பிற பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். சாகுபடி செய்ய முடியாமல் தரிசாகக் கிடக்கும் வேளாண் நிலங்களுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் (Layoff) ஏற்பட்டால், தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு ஊதியம் வழங்குவதுபோல், உழவுத் தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
காவிரி நீர் கர்நாடக அரசால் தடுக்கப்பட்டதால், தான் செய்த பயிர் கருகுவதைக் கண்டும் வாங்கியக் கடனை எப்படி அடைப்பது என்று துன்புற்றும், மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உயிர் நீத்த குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 15 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் வன விலங்குகளுக்கும் உரிய குடிநீர் கிடைக்க தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.
மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் “சிறப்பு நிதி” பெற உடனடியாக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment