ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்காவை எதிர்த்து நெல்லையில் அனைத்துக்கட்சியினர் மாநாடு !

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்காவை எதிர்த்து நெல்லையில் அனைத்துக்கட்சியினர் மாநாடு !
கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்கும் இந்திய அரசைக் கண்டித்தும், அத்திட்டத்தைக் கைவிடக் கோரியும், “அணுசக்திக்கு எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” சார்பில், 2016 திசம்பர் 3 (காரி) அன்று, நெல்லையில் அனைத்துக்கட்சியினர் மாநாடு நடைபெறுகின்றது.

1988 முதல் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை எதிர்த்து வந்த நிலையில், “கட்டி முடித்தபின் எதிர்க்கலாமா?” என்று சிலர் கேள்வி கேட்டனர். தற்போது, தமிழ்நாட்டு மக்கள் போராட்டத்தை சிறிதும் மதிக்காத இந்திய அரசு, கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணுஉலைகளை அங்கு நிறுவவுள்ளது. இதனை தொடக்க நிலையிலேயே எதிர்க்கும் வகையிலேயே இம்மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்கும் திட்டத்தையும், கல்பாக்கம் அணுஉலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும், இந்திய அரசு - தமிழ்நாட்டை அணுக் கழிவுக் கிடங்காக மாற்றக் கூடாது, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டுமென்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதித்து - தமிழ்நாடு அரசு மக்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டும், அமெரிக்கா, ஜப்பான், இரசியா ஆகிய நாடுகளுடனான அணு ஒப்பந்தங்களை இந்திய அரசு இரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இம்மாநாட்டில் வலியுறுத்தப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டம் - பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி சித்தா கல்லூரி அருகிலுள்ள “கிங்ஸ் சிக்” அரங்கில், 03.12.2016 அன்று மாலை 3 மணிக்கு மாநாட்டு நிகழ்வுகள் தொடங்குகின்றன.

நாகர்கோவில் “முரசு” கலைக்குழுவினரின் பறை முழக்கத்துடன் தொடங்கப்படும் இம்மாநாட்டில், அறிவாளர் அரங்கம், அரசியல் அரங்கம் என கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. பல்வேறு தள அறிஞர்களும், அரசியல் கட்சியினரும் இதில் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், அரசியல் அரங்கில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

மாநாட்டில், சூழலியல் ஆர்வலர்களும், சனநாயக ஆற்றல்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
 முகநூல்: https://www.facebook.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.