தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்..!
தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்..!
ஆரியத்தின் வடிவமான இந்திய அரசு தனது விலங்குகள் நல வாரியத்தின் மூலமும், பன்னாட்டு முதலாளிகள் பீட்டா என்ற தனியார் அமைப்பு மூலமும் இணைந்து செயல்பட்டு, பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழர்களின் வீர விளையாட்டான “சல்லிக்கட்டு” எனப்படும் ஏறுதழுவலுக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளன.
இந்தியாவின் இத்தடைக்கு எதிராக தமிழ்நாடெங்கும் காளைகளென மாணவர்களும் இளைஞர்களும் சீறி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கு ஏறுதழுவல் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், வலிவலம் அருகிலுள்ள கொடியாலத்தூர் பகுதியில், 13.01.2017 அன்று காலை, தமிழக இயற்கை உழவர் இயக்கம் மற்றும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில், தடையை மீறி ஏறுதழுவல் நடத்தப்பட்டது. தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் திரு. நெல். செயராமன் தலைமை வகித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியத் துணைச் செயலாளர் தோழர் சை. செந்தில்குமார், தோழர் சை. செயபால், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இரா. தனபாலன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
ஏறுதழுவலுக்கென அழைத்து வரப்பட்ட காளைகள் வழிபாட்டுக்குப் பின்னர் அவிழ்த்து விடப்பட்டது. அங்கு திரண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அவற்றை அடக்க முற்பட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி குறித்து தகவலறிந்து அங்கு வந்த வலிவலம் காவல்துறையினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தோழர் கண்ணன் அவர்களைக் கைது செய்து, தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தியதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 144, 145 ஆகிய இரு பிரிவுகளின் கீழ், அவர் உள்ளிட்ட 9 தோழர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை விடுதலை செய்தனர்.
தமிழர் பண்பாட்டைக் காக்கத் தடைகளை மீறி ஏறு தழுவுவோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment