ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த “காளைத் திருவிழா” பேரணி..!

சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த “காளைத் திருவிழா” பேரணி..!


ஏறுதழுவல் மீதான தடையை நீக்கக் கோரியும், காளைகளைக் காக்க வேண்டுமென வலியுறுத்தியும், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், காளைகளுடன் மக்கள் பேரணி நடைபெற்றது.சென்னை – பல்லாவரம் அருகிலுள்ள பொழிச்சலூரில், மாட்டுப் பொங்கலான இன்று (15.01.2017) காலை நடைபெற்ற இப்பேரணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். பேரியக்கத்தின் தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன் முன்னிலை வகித்தார்.
 
பேரணியின் தொடக்கத்தில், காளைகளுக்கு மாலையிட்டு ஆரத்தி எடுத்து ஊர் மக்கள் வணங்கினர். இதனையடுத்து, சென்னை போன்ற பெரு நகரத்தில், காளைகளை அழியாமல் பாதுகாத்து வளர்த்து வரும், மாடு வளர்ப்போருக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.

இதனையடுத்து, விநாயகா நகரின் வீதிகளில் சென்ற பேரணியில் இளைஞர்களும், மாணவர்களும் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். “ஏறுதழுவல் எங்கள் உரிமை!”, “இந்தியாவே தடையை நீக்கு!”, “தடை செய் தடை செய், பீட்டாவை தடை செய்!”, “எச்சரிக்கை எச்சரிக்கை இந்தியாவுக்கு எச்சரிக்கை” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியபடி தோழர்கள் வீதி வீதியாகச் சென்ற போது, காளைகளுக்கு பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று வணங்கி மகிழ்ந்தனர்.

பேரணியை நிறுத்தக் கோரியும், முழக்கம் எழுப்பக் கூடாதென்றும் பொழிச்சலூர் காவல்துறையினர் வந்து எச்சரித்த போது, தோழர்களுடன் இணைந்து ஊர் மக்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைப் பொருட்படுத்தாமல், முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே தோழர்கள் பேரணியை நடத்தினர்.

பேரணியில், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழ்நாடு மாணவர் நடுவம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜோ. பிரட்டோ, ஊடகவியலாளர் திரு. இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தோழர்கள் வி. கோவேந்தன், மு.வெ. இரமேசு, தமிழக இளைஞர் முன்னணித் தோழர் வீரத்தமிழன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பாவலர் முழுநிலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், ஊர் மக்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.#WeDoJallikattu
#SaveJallikattu
#TamilsBoycottGovtOfIndia

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.