ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சல்லிக்கட்டு தடையில் முதல் குற்றவாளி காங்கிரசு! இரண்டாவது குற்றவாளி பா.ஜ.க.! மூன்றாவது குற்றவாளி பீட்டா! இனம் கண்டு போராடி வெல்வோம்!

சல்லிக்கட்டு தடையில் முதல் குற்றவாளி காங்கிரசு! இரண்டாவது குற்றவாளி பா.ஜ.க.! மூன்றாவது குற்றவாளி பீட்டா! இனம் கண்டு போராடி வெல்வோம்!

தடை செய்யப்பட்ட விலங்குப் பட்டியலில் முதன் முதலாக 11.11.2011 அன்று காளையைச் சேர்த்து சட்டம் இயற்றியது சோனியா காந்தியின் காங்கிரசு ஆட்சி. இந்தப் பட்டியலை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் சல்லிக்கட்டுக்குத் தடை கோரியது பீட்டா.
உச்ச நீதிமன்றம் 7.5.2014 அன்று சல்லிக்கட்டுக்கு முழுத் தடை விதித்தது. தடை செய்யப்பட்ட விலங்குப் பட்டியலில் காளையைச் சேர்த்தவர்கள் குதிரையை ஏன் சேர்க்கவில்லை? குதிரைப் பந்தயத்தை ஏன் தடை செய்யவில்லை? சிந்துச்சமவெளி நாகரிகத்திற்கு முன்பிருந்தே, காளை தமிழின அடையாளம்! குதிரை ஆரிய அடையாளம்! தமிழர்களை அடக்கி ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற இந்திய ஏகாதிபத்தியத்தின் முனைப்புகளில் ஒன்றுதான் சல்லிக்கட்டு தடை!

உச்ச நீதிமன்றத் தடையை நீக்கும் வகையில் 2015-இல் சட்ட மசோதா கொண்டுவரப் போவதாகக் கூறிய மோடி அரசு, கொண்டு வராமல் ஏமாற்றிவிட்டது. மீண்டும், தமிழர்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு, 7.1.2016 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டது. சில கட்டுப்பாடுகளுடன் சல்லிக்கட்டு நடத்தலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதை எதிர்த்து பீட்டா போட்ட மனுவில் அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மூன்றாண்டுகளாக சல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. நரேந்திர மோடியை 19.1.2017 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வம் புதுதில்லியில் சந்தித்து, சல்லிக்கட்டு தடையை நீக்க அவசரச் சட்டம் இயற்றுமாறு கேட்டுக் கொண்டார். முகத்தில் அடித்ததுபோல், “முடியாது” என்று சொல்லிவிட்டார் மோடி! ஆனால் நல்ல காலம் வருமென்று உடுக்கடிக்கிறார் ஓ.பி.எஸ்.

சல்லிக்கட்டுக்குத் தடை இருந்தும் ஆந்திராவில் மூன்றாண்டுகளாகத் தடங்கலின்றி ஏறுதழுவுதல் நடக்கிறது. அதேபோல் மராட்டியத்தில் தடை செய்யப்பட்ட ரேக்ளா பந்தயம் மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அ.இ.அ.தி.மு.க. அரசு பொங்கலர் நாட்களில் அவனியாபுரத்திலும், அலங்காநல்லூரிலும் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டு தமிழின இளைஞர்களைத் தாக்கியது. தடியடி நடைபெறவே இல்லையென்று புதுதில்லியில் போய் பொய் சொன்னார் ஓ.பி.எஸ்.

தடை இருந்த போதும் மற்ற மாநிலங்களில் அவ்விளையாட்டுகள் காவல்துறை தலையீடின்றி நடக்கின்றன. தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை? அங்கெல்லாம் தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தரகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு உரிமைகளைக் காவு கொடுத்துத் தன்னலவெறி அரசியல் நடத்தும் கழகங்களின் ஆட்சியில்தான் காவிரி, கச்சத்தீவு, கடல் உரிமை, முல்லைப் பெரியாறு, பாலாறு உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது. இப்போது பவானியில் பல இடங்களில் தடுப்பணைகள்கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டது கேரள அரசு.

தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட, மீட்டிட புதிய இனத்தற்காப்பு அரசியல் தேவை. தமிழ்த்தேசிய இலட்சியத்தை ஏந்தி, பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத மாபெரும் மக்கள் இயக்கம் தேவை. எழுச்சி பெற்றுள்ள இளைஞர்கள் இது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இந்திய அரசே, சல்லிக்கட்டு தடையை நீக்கிட அவசரச் சட்டம் கொண்டு வா!

தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து காளையை நீக்கு!

பன்னாட்டுக் குற்றக்கும்பலான பீட்டாவை இந்தியாவை விட்டு வெளியேற்று!

தமிழ்நாடு அரசே, தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து தமிழர் உரிமைகளையும், தமிழர் அடையாளங்களையும் காவு கொடுக்காதே!

#WeDoJallikattu
#SaveJallikattu
#TamilsBoycottGovtOfIndia
#JusticeForJallikattu

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.