ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏறுதழுவல் உரிமைக்காகப் போர்க்களமாகும் தமிழ்நாடு !

ஏறுதழுவல் உரிமைக்காகப்  போர்க்களமாகும் தமிழ்நாடு !

தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவலுக்கான இந்திய அரசின் தடையை நீக்கக் கோரி, தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது.

அலங்காநல்லூரில் இரவு முழுவதும் வாடி வாசல் அருகேயே அமர்ந்து அறவழியில் போராடிய மாணவர்களையும் இளைஞர்களையும் நேற்று (17.01.2017) காலை 6.30 மணியளவில், தமிழ்நாடு காவல்துறையினர் இழுத்துச் சென்று பலவந்தமாகக் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி, அலங்காநல்லூரில் பொது மக்கள் தொடங்கிய எழுச்சிமிகுப் போராட்டம், இன்று தமிழ்நாடெங்கும் தீப்பொறியாக பற்றி எரிகிறது.

ஏறுதழுவலை நடத்த வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையுடன், சென்னை மெரினா கடற்கரையிலும், கோவை, நெல்லை, தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அறவழியில் ஒன்றுகூடிப் போராடி வருகின்றனர்.

தன்னெழுச்சியான இப்போராட்டங்களுக்கு ஆதரவுத் தெரிவித்து, தமிழ்நாடெங்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்தன.
சிதம்பரம்

சிதம்பரத்தில், ஏறு தழுவலுக்குத் தடை விதித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, இந்தியத் தலைமை அஞ்சலகத்தை இன்று காலை மாணவர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் தோழர் எல்லாளன், தமிழக இளைஞர் முன்னணித் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி
திருச்சியில், தொடர்வண்டிச் சந்திப்பு அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தோழர் முகிலினியன் எழுச்சி முழக்கங்களை எழுப்பினார். தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை, வ.உ.சி. பேரவை தோழர் முருகராசன், வழக்கறிஞர் சுகுமார், தமிழக உழவர் முன்னணி இலால்குடி பொறுப்பாளர் திரு. நகர் செல்லையா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

பெண்ணாடம்
கடலூர் மாவட்டம் – பெண்ணாடத்தில், கிழக்குக் கடைத்தெருவிலிருந்து ஊர்வலமாக வந்த தோழர்கள், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் தலைமையில் முதன்மைச் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர. கனகசபை, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன், திருவள்ளுவர் தமிழர் மன்றச் செயலாளர் திரு. தி. ஞானப்பிரகாசம், தலைவர் திரு. மா. கார்த்திகேயன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் மு. இராமகிருட்டிணன், மாந்த நேயப் பேரவை திரு. பெ.ச. பஞ்சநாதன், மகளிர் ஆயம் தோழர் க. இந்துமதி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குடந்தை
குடந்தையில், காந்திப் பூங்கா அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க குடந்தை நகரச் செயலாளர் தோழர் க. விடுதலைசுடர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சாமிமலை கிளைச் செயலர் தோழர் க. தீந்தமிழன், குடந்தை செழியன், செந்தமிழன், அன்பு உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில், நரேந்திர மோடி – பன்னீர் செல்வம் – சசிகலா- கிரண் பேடி ஆகியோரின் நால்வரின் உருவப்படங்களும், நேற்று(17.01.2017) காலை தீ வைத்து எரிக்கப்பட்டன. புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில் இந்நால்வரின் உருவப்படத்தையும் எரித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. இரா. அழகிரி, தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் தோழர் கோ. அழகர், தமிழ் தமிழர் இயக்கம் திரு. பிரகாசு, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் - உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து, தோழர்கள் நால்வர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஓசூர்
ஓசூரில், இராம் நகர் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திரளான மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. செம்பரிதி உள்ளிட்ட பல்வேறு கட்சி – இயக்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து, ஏறுதழுவலுக்கான உரிமைப் போராட்டங்கள் தன்னெழுச்சியாகவும், பல்வேறு இயக்கங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன.

“இந்திய அரசே! ஏறுதழுவலைத் தடை செய்யாதே!” என விண்ணதிர முழங்குவோம்!
போராட்டத்தை முன்னெடுங்கள்! இந்திய அரசைப் புறக்கணிப்போம்!

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.