ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தேசிய நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடல் : மக்களுக்குக் கிடைத்த வெற்றி! மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா அறிக்கை!

தேசிய நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடல் : மக்களுக்குக் கிடைத்த வெற்றி! மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா அறிக்கை!

தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடெங்கும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 3200 மதுக்கடைகளை தமிழ்நாடு அரசு மூடியுள்ளது.

தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம் புதுக்குடி முதன்மைச் சாலையிலிருந்த மதுக்கடையையும், தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் அருகருகே இருந்த இரண்டு மதுக்கடைகளையும் மூடக்கோரி மகளிர் ஆயம் தொடர் பரப்புரை மற்றும் போராட்டங்களை நடத்தி வந்தது. கடந்த 08.03.2015 அன்று, மகளிர் நாளையொட்டி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி தலைமையில் புதுக்குடி மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடைபெற்று 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

2016ஆம் ஆண்டு, மார்ச் 8 அன்று, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா தலைமையில் நடைபெற்ற தஞ்சை புதிய பேருந்து நிலையம் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டத்தில், 150 மகளிர் தோழர்கள் கைதாகினர். மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, இம்மூன்று மதுக்கடைகளும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாடு அரசால் மூடப்பட்டுள்ளன. இது மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

தமிழ்நாடு அரசு, இம்மதுக்கடைகளை மூடிவிட்டு, இதே மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றிவிட்டு ஊருக்குள் வைக்க முயன்றால் அது உச்ச நீதிமன்றத்தையும், மக்கள் போராட்டங்களையும் அவமதிப்பதாகிவிடும். எனவே, தமிழ்நாடு அரசு, அவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் இம்மதுக்கடைகளை முழுவதுமாக மூட வேண்டும்.

நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், ஊருக்குள் இருந்த மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாகியுள்ளது. ஊருக்குள் உள்ள மதுக்கடைகளால் ஏற்கெனவே சமூக ஒழுங்கு கெட்டுவரும் சூழலில், இதில் கூடுதலான கூட்டம் வருவது நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மட்டுமின்றி, அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என இந்நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு மகளிர் ஆயம் கோரிக்கையை முன் வைக்கிறது.
இன்னணம்,
அருணா
ஒருங்கிணைப்பாளர், மகளிர் ஆயம்.

இடம்: தஞ்சை

தொடர்புக்கு:
7373456737, 9486927540

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.