“வர்ணாசிரம அதர்மத்தின் நீட்சிதான் மோடி அரசின் மாட்டுக்கறித் தடைச் சட்டம்!” பெ. மணியரசன் கண்டனம்!
“வர்ணாசிரம அதர்மத்தின் நீட்சிதான் மோடி அரசின் மாட்டுக்கறித் தடைச் சட்டம்!” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
பாரதிய சனதாக் கட்சியின் நடுவண் அரசு பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை உணவுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், அவற்றை உணவுக்காக சந்தையில் விற்கக் கூடாது என்றும் தடை விதித்து ஆணையிட்டுள்ள செயல், அக்கட்சியின் ஆதிக்க சக்திகள் மனிதர்களிடம் கடைபிடித்த வர்ணாசிரம அதர்மத்தை விலங்குகளிடமும் கடைபிடிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
விலங்குகள் கொடுமைத் தடை (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) சட்டம் – 2017 என்ற புதிய சட்டத்தின்படி, பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை உணவுக்காக சந்தையில் விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்படுகிறது. ஆனால், ஆடு, கோழி போன்றவற்றை உணவுக்காக விற்பதும், வாங்குவதும் தடை செய்யப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. அமைப்புகளுக்கு ஆன்மிக ஒழுக்கமில்லை என்று தொடர்ந்து நாம் சொல்லி வருகிறோம்.
தமிழர் ஆன்மிகத்தில் விலங்குகளிடையே பாகுபாடு காட்டாமல், புலால் உண்ணாமை என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எந்த உயிரையும் கொன்று உண்ணக் கூடாது என்று பேராசான் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை வலியுறுத்தினார்கள். உயிரினங்களிடையே பாகுபாடு காட்டாமல், அனைத்து வகை புலாலையும் மறுக்கும் கொள்கையுடைய தமிழ் மக்கள் இன்றும் பரவலாக வாழ்கிறார்கள். ஆனால், மாட்டுக்கறி உள்ளிட்ட புலால் உண்பதை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யுமாறு தமிழர் சமயத் தலைமைகள் ஒருபோதும் கோரியதில்லை! தமிழர்கள் உளவியல் சனநாயகத்தன்மை சார்ந்தது.
ஆனால், மனுதர்மம் பிராமணர்கள் கொலை செய்தால்கூட, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், மற்றவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்றும் கூறியுள்ளதைப் போல், பசுவை மட்டும் கொல்லக்கூடாது மற்ற விலங்குகளைக் கொல்லலாம் என்று பா.ச.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கூறி வருகின்றன.
இந்த முரண்பாட்டை பலரும் சுட்டிக்காட்டியதால், இப்போது பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை உணவுக்குக் கொல்லக் கூடாது என்று ஒட்டு வேலை செய்து ஆணையிட்டுள்ளார்கள். அதேவேளை, ஆடு, கோழி போன்ற உயிரிகளை கொன்று உண்ண இந்தப் புதிய ஆணை தடை விதிக்கவில்லை.
கோயில்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதித்துள்ளது புதிய சட்டம்! கிராமப்புற மக்களின் குலதெய்வ வழிபாட்டை ஒழித்து, பிராமணமயமாக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டோடு மட்டும் மக்களை கட்டுப்படுத்தும் செயலாகும் இது! கிராமப்புற மண்ணின் மக்கள், முசுலீம்கள், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் ஆகிய அனைத்து மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டுரிமை அனைத்தையும் மனு தர்ம அடிப்படையில் பிராமணிய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் செயல்தான் இப்புதிய சட்டம்!
புலால் மறுப்பதும், புலால் உண்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை! அதில் தலையிட்டு பசு உள்ளிட்ட சில விலங்குகளை உண்ணக் கூடாது என்று தடை செய்வது, பா.ச.க. அரசின் ஆரிய ஆதிக்க வாதத்தைத்தான் காட்டுகிறது.
இந்தத் தடைச்சட்டம் கிராமப்புற வேளாண் பொருளாதாரத்தை நசுக்கி நாசமாக்கிவிடும். கால்நடை வளர்க்கும் உழவர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும். வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்கள் மாட்டுக்கறியை டப்பாவில் அடைத்து இந்தியாவில் விற்று, கொள்ளை இலாபம் சம்பாதிக்க வழிதிறந்துவிடும்.
எனவே, எந்த வகையிலும் பா.ச.க. அரசு பிறப்பித்துள்ள “விலங்குகள் கொடுமைத் தடை (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) சட்டம் – 2017” ஏற்கத்தக்கதல்ல! இந்த சட்டத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment