தொடரும் குண்டாஸ்? : 10 பேரை குறிவைக்கிறதா இந்திய அரசு? பெ. மணியரசன் செவ்வியுடன் மின்னம்பலம் இணைய இதழில் கட்டுரை!
தொடரும் குண்டாஸ்? : 10 பேரை குறிவைக்கிறதா இந்திய அரசு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் செவ்வியுடன் மின்னம்பலம் இணைய இதழில் கட்டுரை!
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட வழக்கைத் தொடர்ந்து, மேலும் பத்து செயல்பாட்டாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களின் செவ்வியுடன் மின்னம்பலம் இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரை வருமாறு :
2௦௦9 ஆம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் சிங்கள அரசால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டத்தை மெரினா கடற்கரையில் நடத்தினார் என்பதற்காக... மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியையும், அவரது சகாக்கள் இருவர் தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த இளமாறன் ஆகிய நால்வரை சில நாட்களுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைது செய்தது தமிழக அரசு.
“மத்திய அரசின் ஆணைக்கிணங்க மாநில எடப்பாடி அரசு செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த கைது” என்று கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில்...
காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை எதிர்த்துப் போராடும் மேலும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அரசு தயாராகிவருவதாக தகவல்கள் கசிந்துவருகின்றன.
பெ.மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கம் மத்திய அரசின் இந்தித் திணிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது ஆகியவற்றை எதிர்த்து தொடர்ச்சியாக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
கடந்த வாரம் காவிரி விவகாரத்துக்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு வாரம் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தினர். இவை பெரும்பாலுமே மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள். திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையும் இந்த இயக்கங்கள் கண்டித்துவருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் போராட்டங்களை ஒடுக்கும் வகையில்... இந்த அமைப்புகளில் ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வது என்ற தகவல் உளவுத்துறை வட்டாரத்தில் சில நாட்களாக உலவி வருகிறது.
இந்த பட்டியலில் தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்த அருணபாரதி, இயக்குனர் வ. கௌதமன் உள்ளிட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இயக்குனர் வ. கௌதமன் வெளியிட்டிருக்கும் காணொளியில்,
“மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் நடந்த ஐயா பழ. நெடுமாறன் தலைமையிலான போராட்டத்தில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்த என்னை, சென்னை கத்திப்பாரா பகுதியை உள்ளடக்கிய செயின்ட் தாமஸ் காவல் நிலைய அதிகாரி அழைத்தார். ‘என்ன சார்... கத்திபாரா பாலத்துக்கு பூட்டு போட்ட வழக்கில் 15 நாள் வந்து கையெழுத்து போட்டீங்க. அப்புறம் வரவே இல்லை. கொஞ்சம் வந்துட்டு போங்களேன்’ என்று அழைத்தார். நாங்கள் அந்த வழக்கில் பிணையில் வந்துவிட்டோம். பிணை நிபந்தனைகளை பின்பற்றினோம். இப்போது திடீரென ஏன் அந்த அதிகாரி அழைக்கிறார் என்று ஆராயும்போதுதான்...திருமுருகன் காந்தியை தொடர்ந்து... தமிழ் உரிமைக்காக களத்தில் தொடந்து போராடும் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு அதை மாநில அரசு அதை செயல்படுத்த தயாராகிவிட்டது என்று எங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
என்னையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமிட்டுள்ளார்கள். ஐயா மணியரசன் அவர்களது தமிழ் தேசிய பேரியக்கத்தில் செயல்பட்டு வரும் அருண பாரதி, லயோலா கல்லூரியில் மாணவர்களோடு உண்ணாவிரதம் இருந்த செம்பியன், என்னோடு கத்திபாரா பாலத்தை பூட்டு போட்ட தம்பிகள் அருள்தாஸ், பிரபாகரன் என்று பத்து பேர் மீது குண்டர் சட்டம் பாய்ச்ச ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
இதைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். திருமுருகனை கைது செய்தால், எங்களைக் கைது செய்தால் கேட்க ஆளில்லை என்று நினைத்தார்களா? கைது செய்து பாருங்கள்” என்று உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார் வ. கௌதமன்.
இதுபற்றி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனிடம் பேசினோம்.
"இப்படிப்பட்ட தகவல்கள் இரண்டு நாட்களாக எங்களுக்கும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அது உண்மையாக இருக்குமானால்... நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம். இந்த கைதுகள் நடந்தால்... அது, மத்திய அரசு தமிழர் பகை அரசுதான் என்று தானே அம்பலப்படுத்தும் நடவடிக்கையாகவே இருக்கும்.
மேலும் மத்திய அரசின் தமிழர் பகை செயல்பாடுகளை எங்கள் பாமர தமிழன் தமிழச்சிகளுக்கு எடுத்துச் சென்று சேர்க்கும் வகையில் தான் இருக்கும். மத்திய அரசுக்கு ஒத்துழைக்கும் மாநில அரசும் பதவிக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோக அரசாகவே அறியப்படும். கைதுக்கு நாங்கள் தயார்" என்றார் உறுதியாக நிதானத்துடன்.
திருமுருகன் கைது மூலம் அரசியல் சூழலை திசைதிருப்ப முயன்ற மாநில அரசு, தொடர்ந்து குண்டாஸ் கைதுகளை அரங்கேற்றினால்... அரசியல் சூழலில் சுழல் உறுதி.
நன்றி: https://www.minnambalam.com/k/2017/06/01/1496300130
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment