ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மீத்தேன் எதிர்ப்புத் தலைவர் பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்ட 11 பேர் சிறையிலடைப்பு! பெ. மணியரசன் கண்டனம்!

மீத்தேன் எதிர்ப்புத் தலைவர் பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்ட 11 பேர் சிறையிலடைப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

இந்திய அரசின் எண்ணெய் எரிவளிக் கழகம் (ஓ.என்.ஜி.சி.), தஞ்சை மாவட்டம் – கதிராமங்கலத்தில் புதிதாக எரிவளிக் குழாய்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அப்பணியை நிறுத்தக் கோரி அறவழியில் எதிர்ப்பைத் தெரிவித்த இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் – பெண்களை தமிழ்நாடு காவல்துறை இன்று (02.06.2017) காலை கைது செய்து, மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தது.

அவர்களில் 11 பேரைத் தேர்வு செய்து, அவர்கள் மீது பிணை மறுப்புப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, இன்றிரவு 10.30 மணிக்கு மேல் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்தி, சிறைக்கு அனுப்பியுள்ளது காவல்துறை!

அண்மையில் இதே கதிராமங்கலத்தில் ஏற்கெனவே எண்ணெய் எரிவளிக் கழகம் குழாய்ப் பதிக்க வந்தபோது, கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு அம்முயற்சியைத் தடுத்தனர். இன்று பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினரைத் திரட்டி வைத்துக் கொண்டு, மக்களுக்கு எதிராகப் போர் புரிவது போல் – எரிவளிக் குழாய்களை இறக்க முயன்ற போது, மக்கள் திரண்டு தடுத்துள்ளார்கள்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் மற்றும் அவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் விசயரங்கன், சீனிவாசன் மற்றும் ம.தி.மு.க.வின் மாநிலப் பொறுப்பாளர் ஆடுதுறை முருகன் உள்ளிட்ட 11 பேரை இன்று சிறையில் அடைத்துள்ளார்கள்.

தமிழர் மரபுவழி வேளாண் அறிவியலாளர் ஐயா கோ. நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களில் மாபெரும் மக்கள் இயக்கமாய் வளர்ச்சியடைந்த போது, அன்றைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள், மக்கள் உணர்வை மதித்து மீத்தேன் எடுக்கத் தடை ஆணை போட்டார்.

மராட்டிய மாநிலம் செய்தாப்பூரில் அணுமின் ஆலைக்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வந்த போது, அங்கு அணுஉலை கூடாது என்று மக்கள் போராடினர். அப்போதிருந்த மராட்டிய மாநிலக் காங்கிரசு ஆட்சி, மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய்தாப்பூர் அணுஉலைத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அவ்வாறே அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டாவின் நஞ்சை நிலங்களில் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுக்கப்பட்டு வரும் பல ஊர்களில், நிலத்தடி நீர் நஞ்சாகி – வயல் வெளியும் சாகுபடிக்கு லாயக்கற்ற இரசாயண தரிசுகளாக மாறின. குடிநீருக்கும் வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த அவலங்களைப் பார்த்த அனுபவத்தில் காவிரி டெல்டா மக்கள் எண்ணெய் எரிவளிக் கழகம் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுப்பதை கைவிடக் கோரிப் போராடி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு மக்களின் இந்த உணர்வைப் புரிந்து கொண்டு, விளைநிலங்களில் எண்ணெய் மற்றும் ஐட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவளி ஆகியவற்றை இந்திய எண்ணெய் எரிவளிக் கழகம் எடுக்கத் தடை விதித்திருக்க வேண்டும். மாறாக, மக்கள் மீது தமிழ்நாடு அரசு போர் தொடுக்கிறது!

கதிராமங்கலத்தில் எண்ணெய் எரிவளிக் கழகம் எரிவளிக் குழாய்கள் பதிப்பதை சனநாயக வழியில் எதிர்த்த மக்களை தமிழ்நாடு அரசு கைது செய்வதும், அவர்களில் முன்னோடிகளாக உள்ளவர்களை சிறையில் அடைப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்! அவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

மக்கள் மீது அடக்குமுறை ஏவுவது, தொடக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு சுகமாகவே இருக்கும். பின்னர் அதுவே அவர்களுக்கு சோகமாக மாறிவிடும் என்பதுதான் வரலாறு தந்துள்ள பாடம்! நரேந்திர மோடி அரசு மகிழத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் மீது அடக்குமுறை ஏவுவது சனநாயகமற்ற எதேச்சாதிகார நடவடிக்கை மட்டுமின்றி, தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்ளும் செயலாகவும் அமையும் என்பதைத் தெரிவித்து, இந்த அடக்குமுறைப் பாதையைக் கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.