ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட்டை வளர்க்கக் கூடாது! இந்திய அரசு உடனடியாக ஓரிடத்தை அறிவிக்க வேண்டும்” பெ. மணியரசன் அறிக்கை!

“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட்டை வளர்க்கக் கூடாது! இந்திய அரசு உடனடியாக ஓரிடத்தை அறிவிக்க வேண்டும்” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டில் “அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை”யை (AIIMS) எங்கு நிறுவுவது என்பதில் தமிழர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் நிறுவிட தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது என்ற செய்தி அண்மையில் வெளியானவுடன், மதுரையில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் மற்றவர்களும் தீவிரமாக முன் வைக்கிறார்கள். செங்கிப்பட்டியில்தான் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தஞ்சைப் பகுதியினர் தீவிரமாக முன் வைக்கிறார்கள்.

தஞ்சையா, மதுரையா என்ற போட்டியில் தீவிரமாக இறங்க வேண்டியதில்லை. அந்தந்தப் பகுதியினரும் அவ்வாறு கோரிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால், அதே வேளை அக்கோரிக்கையை தமிழர்களிடையே மாவட்ட முரண்பாடாக வளர்த்து தீவிரப்படுத்தக் கூடாது.

இம்முரண்பாட்டை மேலும் வளரவிடும் நோக்கத்தில், இந்திய அரசு தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தேர்வை தள்ளிப்போடக் கூடாது. இம்முரண்பாட்டை சாக்காக வைத்து, தமிழ்நாட்டுக்குரிய எய்ம்ஸ் மருத்துவமனையை வேறு மாநிலத்துக்குக் கொண்டு போகவும் கூடாது.

இந்திய அரசு உடனடியாக இதில் ஒரு முடிவெடுத்து தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிப்பதுடன், அதற்கான பணிகளையும் தொடங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு திரைமறைவு வேலை எதிலும் ஈடுபடாமலும் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமலும் மேற்கண்டவாறு ஒரு முடிவை எடுக்க இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் பொது நல அக்கறையாளர்களும் இச்சிக்கலை தமிழர்களிடையே முரண்பாட்டையும் பிளவையும் உண்டாக்கும் வகையில் வளர்க்கக் கூடாது. இழப்புக்கு மேல் இழப்பை அன்றாடம் சந்தித்துவரும் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் இதை வளரவிடவும் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com  
இணையம்: www.tamizhdesiyam.com  

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.