ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கீழடி நாகரிகம் : ஆரிய - திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்! பெ. மணியரசன்

கீழடி நாகரிகம் :
ஆரிய - திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

ஐயகோ, இந்தக் கொடுமை இந்தியாவில் வேறு எந்த இனத்திற்காவது உண்டா?

சொந்த இனத்தின் பெயரை சொல்லக்கூடாது; வேறொரு கலப்பட இனப்பெயரைச் சொல் என்று கட்டளை இடும் இந்தக் கொடுமை மராத்தியர்க்கு உண்டா? குசராத்தியர்க்கு உண்டா? தெலுங்கர் – கன்னடர்க்கு உண்டா? இல்லை! தமிழர்களுக்கு மட்டும்தான் உண்டு!

தமிழர் என்று சொல்லாதே, திராவிடர் என்று சொல்! தப்பித்தவறி தமிழர் என்று சொல்லிவிட்டால், திராவிடர் என்பதை அடுத்த வரியில் சேர்த்துக் கொள் என்கிறார்கள். “தமிழர் நாகரிகம் என்று சொல்லாதே! பாரத நாகரிகம் என்று சொல்!” என்கிறார்கள். இந்தக் கொடுமை வேறு எந்த இனத்திலாவது உண்டா? இல்லை!

திராவிடத் திருட்டு

கற்பனையாகக் கயிறு திரித்த கால்டுவெல் கூட “தமிழர்க்கு மறுபெயர் திராவிடர்” என்று கூறவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்கு மூல மொழியாக இருந்தது திராவிடம் என்றுதான் கதையளந்தார்!

ஆனால், “திராவிடத் தந்தை” பெரியாரும், அவரின் வாரிசுகளும்தாம் தமிழர் அடையாளத்தை மறைத்து, திராவிட அடையாளத்தைத் திணிப்பதிலேயே 24 மணி நேரமும் குறியாக இருக்கிறார்கள்.

இதோ கீழடியில் தமிழர் தொன்மைப் பண்பாட்டின் பொருட்கள் அடுக்கடுக்காய் கிடைத்து வருகின்றன. திராவிடவாதிகள் திருட்டு வேலையைத் தொடங்கி விட்டார்கள்! அது திராவிட நாகரிகமாம்!

“அதனைத் திராவிடப் பண்பாடு என அறிஞர்கள் குறிப்பிடுவதைக் கேட்கும்போது, செவிகளில் இன்பத்தேன் பாய்கின்றது” என்று 28.09.2019 அன்று வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பூரித்துப் போகிறார்.

ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தமிழர் பண்பாட்டை – திராவிடப் பண்பாடு என்று திரிக்கும்போது எங்களுக்குக் காதில் தேள் கொடுட்டுவது போல் அல்லவா வலிக்கிறது.

இன்னொருபுறத்தில், அமைச்சர் பாண்டியராசனோ கீழடியை பாரதப் பண்பாடு என்கிறார்.

ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ கீழடிபோல் பழைய பண்பாட்டு அகழாய்வு கிடைத்தால் அவர்கள் அதைத் திராவிடப் பண்பாடு என்று சொல்வார்களா? சொல்லவே மாட்டார்கள்! தெலுங்கர் பண்பாடு, கன்னடர் பண்பாடு என்றுதான் சொல்வார்கள். தெலுங்கு தேசம் என்றல்லவா அங்கே கட்சி வைத்திருக்கிறார்கள். திராவிடப் பரிவாரங்கள் அங்கு கிடையாதே! தமிழீழத் தமிழர்களிடம் திராவிடக் கயிறு திரிக்க முடியுமா?

திராவிடவாதிகளே, நீங்கள் “தமிழர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்று கூறிக் கொள்கிறீர்கள். அக்கூற்றிலாவது, நீங்கள் நேர்மையாக இருந்தால், இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் தமிழர் என்றே அழைக்கப்படும் தமிழர்களைத் “தமிழர்” என்றே அழையுங்கள்!

தமிழர்களைத் “திராவிடர்கள்” என்றே அழையுங்கள் என்று இன்று உங்களிடம் கோரிக்கை வைப்போர் யார்? இராதாரவி போன்றவர்களா? அதையாவது சொல்லுங்கள்!

மொகஞ்சோதாரோ, அரப்பா நாகரிகம் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கூறிவிட்டார்களாம். பூரித்துப் போகிறார் ஸ்டாலின். அந்த சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான்! எந்தத் திராவிடர் எந்த நாட்டில் வாழ்ந்தார்? அதற்கென்ன இலக்கியச் சான்று? அதற்கென்ன கல்வெட்டுச் சான்று? செப்பேட்டுச் சான்று?

தமிழர் – திரமிளர்; திராவிடர் என்று ஆனார்கள் என தேவநேயப் பாவாணர் கூறியுள்ளார் என்றும் ஸ்டாலின் தமது அறிக்கையில் “விளக்குகிறார்”. திராவிடரை நிலைநாட்ட இவ்வளவு பெரிய முயற்சி எடுப்பானேன்? “தமிழர்” என்ற இன அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளத் தானே!

வலிந்து திராவிடரைத் திணிக்காவிட்டால் வருத்தப்படும் இனம் எது? மொழிஞாயிறு பாவாணர் தெளிவாகக் கூறியுள்ளார். “தமிழ் மொழி திராவிட மொழியன்று; தமிழிலிருந்து திரிந்து பிரிந்து போன தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவையே திராவிட மொழிகள்” என்று! தமிழர் திராவிடர் அல்லர் என்றும், பாவாணர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் கூட திராவிட மொழிகள் அல்ல. அவை தமிழிலிருந்து பிரிந்தவை. அவை தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை (Tamil Linguistic Family).

கீழடிப் பொருட்களில் காணப்படும் எழுத்தைத் தமிழ் பிராமி என்று கூறுவது, வடநாட்டுப் பிராமிக்கு வால் பிடிக்கும் அடிமைத்தனம்! அது தமிழ் எழுத்து மட்டுமே! அதை மூலத்தமிழ் (Proto Tamil) என்று கூற வேண்டும். தமிழி என்று கூற வேண்டியதில்லை!

ஆரிய நூல்களான மனுதர்மம், குமாரில பட்டரின் தந்திரவார்த்திகா ஆகியவற்றிலிருந்து “திராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்கிறார் கால்டுவெல். கால்டுவெல் கயிறு திரித்ததை வைத்து, தமிழர் நாகரிகங்களைத் “திராவிட” நாகரிகம் என்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் மேம்போக்காக அன்றும் கூறினார்கள்; இன்றும் கூறி வருகிறார்கள்.

இவர்கள் எல்லோரும் கால்டுவெல்லைப் போலவே முதலில் ஆரிய – பிராமணர்களிடம் பாடம் கேட்டு, சமற்கிருதம் கற்றுத் தேர்ந்த பின்னர் தமிழ் கற்றவர்கள். சமகால எடுத்துக்காட்டு – கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்; சில ஆண்டுகளுக்கு முன் காலமான பின்லாந்தின் அஸ்கோ பர்போலா!

ஆரியப் பெருமிதங்கள் – சமற்கிருதச் சிறப்புகள் ஆகியவற்றில் திளைத்துப் பின்னர், தமிழையும் கற்று – கால்டுவெல் காட்டிய திராவிடத்தை வழிமொழிந்தவர்கள் இவர்கள்.

ஆரியப் புரட்டு

தமிழறிஞர் என்று அறியப்படும் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பவரின் சமற்கிருதச் சார்பை மட்டும் – ஒரு சோறு பதமாகப் பார்க்கலாம்.

இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராக செயல்பட்டுப் பின்னர் தமிழ் கற்றவர். தமிழ்மொழி கி.மு. 300–இல் தோன்றியது என்றும் சமற்கிருதம் கி.மு. 2000–இல் தோன்றியது என்றும் கட்டுரை எழுதியவர். சங்ககாலத் தமிழ் இலக்கியம் இந்துமதக் கருத்துகளைக் கொண்டது என்று “ஆய்வுரை” வழங்கியவர். இவருக்கு இந்திய அரசு (மோடி அரசு) 2015-இல் பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.

மேற்கண்ட கருத்துகளைக் கொண்ட இவரது கட்டுரையை நடப்பாண்டு 12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் சேர்த்திருந்தார்கள். கடும் எதிர்ப்புக் கிளம்பிய பின் தமிழ்நாடு அரசு அப்பாடத்தை நீக்கியது.

ஆரியமயமாக்கல் ஆபத்து

கீழடி நாகரிகத்தை இந்து நாகரிகம் – ஆரிய நாகரிகம் கலந்தது என்று கூறிட ஆரிய பிராமண “அறிஞர்கள்” இந்நேரம் அணியமாகிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் சிந்துவெளி தமிழர் நாகரிகத்தையே ஆரிய சரசுவதி நாகரிகம் என்று மாற்றி எழுதினார்கள். இவர்களில் இராசாராம் என்பவர் அரப்பாவில் கிடைத்த காளையின் வால் சுடுமண் வடிவத்தை – குதிரையின் வால் என்று மாற்றினார். காளை தமிழர் விலங்கு, குதிரை ஆரியர் விலங்கு! எனவே, சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்றார். அக்கதையை எல்லாம் உண்மையான ஆய்வாளர்கள் உடைத்துச் சுக்குநூறாக்கினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த எலும்புகளை வைத்து, மரபணு (DNA) ஆய்வு செய்ததில், அது ஆரியர் வருகைக்கு முன் இருந்த உள்ளூர் மக்கள் எலும்பு என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்கட்டுரை Science (சைன்ஸ்) என்ற ஆங்கில ஆய்விதழில் வந்தது. அதை வைத்து ஆங்கில “இந்து” நாளேட்டில் 13.09.2019 அன்று “New reports clearly confirm ‘Arya’ migration into India” என்ற தலைப்பில் டோனி ஜோசப் கட்டுரை எழுதியுள்ளார்.

தமிழ்நாடு தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் (அ.தி.மு.க.) அவர்கள், “கீழடியை தமிழர் நாகரிகம் என்று கருதாமல் பாரத நாட்டின் மொத்த நாகரிகத்தின் தொடக்கமாகப் பார்க்க வேண்டும்” என்று இடுக்கில் புகுந்து கடுக்கண் கழற்றுவது போல் ஆரியக் கருத்தைப் புகுத்தினார்.

சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில் தமிழன்னை சிலையும், மற்ற வரலாற்றுச் சின்னங்களும் வடிப்பதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வரைவுக் கோட்பாடுகள் ஆரியஞ்சார்ந்து இருந்தன. அந்தத் துறைக்குப் பாண்டியராசன்தான் அமைச்சர்.

சங்ககாலத் தமிழர் பண்பாடு என்பது வேத பிராமண மதம் – இந்து மதம் ஆகியவை எல்லாம் கலந்த பண்பாடு. இந்த இந்துப் பண்பாடும் வெளிப்படும் வகையில் தமிழன்னை சிலை இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வழிகாட்டும் நெறி வகுத்திருந்தது. தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழின உணர்வாளர்கள் சமற்கிருத மாதா வடிவில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து மதுரையில் போராடினோம். அச்சிலைத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட்டது.

ஆரியம் கீழடி நாகரிகத்தைக் களவாட முயலும். முடியாவிட்டால், அது மிகமிகப் பிற்காலத்து நாகரிகம் என்று சொல்லிவிடும். தமிழர்கள் ஆரியத் திருட்டு – திராவிடத் திருட்டு இரண்டிடமும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது சரியாக இருக்காது. அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே இருக்கும். மீண்டும் கீழடிப் பொருட்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3,300 – 1,700 என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கீழடி நாகரிகமும் இதையொட்டித்தான் இருக்கும்.

கடலியல் ஆய்வாளர் கிரகாம் அன்காக் பூம்புகாரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 11,500 ஆண்டு பழைமையான நகரம் ஒன்று கிடக்கிறது என்று கூறியுள்ளார். சிந்துவெளி நாகரிகம் என்பது, தமிழர்களின் வழிமுறை (Secondary Civilization) நாகரிகமே தவிர முதனிலை நாகரிகமன்று. தமிழர்கள் தெற்கிலிருந்து வடக்கே போனவர்கள்.

கடலுள் மூழ்கிய பஃறுளி ஆறு, குமரிக் கண்டம் ஆகியவையே தமிழர்களின் முதனிலை நாகரிகம் தோன்றிய இடங்கள். அவை கடலுக்குள் மூழ்கிவிட்டதால், ஆதிச்சநல்லூர், பூம்புகார் போன்றவையே இப்போதுள்ள முதனிலை நாகரிகங்கள்!

அருள் கூர்ந்து, தமிழ் இனத்தில் பிறந்த அனைவரும் தங்களைத் தமிழர் என்ற உண்மைப் பெயரில் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் முன்னோர்க்கு இழுக்குச் சேர்க்கும் வகையில் “திராவிடர்” என்று அழைத்துக் கொள்ளாதீர்கள்! அரசியல் ஆதாயத்திற்காகவோ, பெரியார் பக்திக்காகவோ பிறந்த இனத்தை இழிவு படுத்தாதீர்கள்!

#கீழடி
#கீழடி_தமிழர்_நாகரிகம்
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.