ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நியூட்ரினோ திட்டம் விரட்டியடிக்கப்பட்டது!

நியூட்ரினோ திட்டம் விரட்டியடிக்கப்பட்டது!
அசைக்க முடியாது என்று நினைக்கப்பட்ட இந்திய வல்லரசு, மக்கள் இயக்கங்களிடம் பணிந்தது! பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டது!

உலகின் உயர்ந்த பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத் தொடர்ச்சி மலையில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில், அம்பரப்பர் மலையைக் குடைந்து - இயற்கைச் சூழலை சிதைத்து, நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை அமெரிக்காவின் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்வதாக இந்திய அரசு முடிவு செய்து திணித்தது.

சற்றொப்ப 8,600 கிலோ மீட்டருக்கு அப்பால், அமெரிக்காவின் பெர்மிலேப் (திமீக்ஷீனீவீறீணீதீ) ஆய்வகத்திலிருந்து ஆற்றல் வாய்ந்த நியூட்ரினோ கற்றைகளை புவிக்கு அடியில் செலுத்தி, பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகத்தில் ஆற்றல் வாய்ந்த காந்தப்புலத்தின் வழியாக அதை ஈர்க்கச் செய்து - ஆய்வு நடத்துவது என்ற பெயரில், நியூட்ரினோ ஆயுதத்திற்கான அடிப்படைத் திட்டமிடல் இருந்தது.

ஆற்றல் வாய்ந்த கற்றைகளாக நியூட்ரினோ அனுப்பப்படும் போது, ஆய்வகத்தைச் சுற்றி தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், கேரளத்திலும் கதிரியக்க ஆபத்து இருந்தது. பல்வேறு சிற்றாறுகளும் நீர் கட்டமைப்புகளும் நிறைந்திருக்கும் பசுமை மண்டலத்தைத் தகர்த்தெறிந்து, பல்லுயிரிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பேராபத்தாக இத்திட்டம் இருந்ததால், இதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியது.

தேனி மாவட்ட மக்களும், தமிழ்நாடு - கேரளம் போன்ற பிற பகுதி மக்களும் இத்திட்டத்தை எதிர்த்து, தொடர் போராட்டங்களை நடத்தினர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட இன உணர்வு அமைப்புகளும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் சூழலியல் அறிஞர்களும் இப்போராட்டத்தை வலுவாக முன்னெடுத்தனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினரும் பசுமைத் தீர்ப்பாயத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து, வலுவான சட்டப் போராட்டங்களை நடத்தினர். சூழலியல் ஆய்வுச் சான்று அளிக்கும் தகுதியற்ற ஓர் நிறுவனத்தைக் கொண்டு, சான்றிதழ் பெற்றதை சுட்டிக்காட்டி வழக்கு மன்றத்தில் வாதாடிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பணி குறிப்பிடத்தக்கது.

இப்போது, நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தேனி மாவட்டம் பொட்டிபுரத்திலிருந்து, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தா பெல்லாம் என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக இந்திய நியூட்ரினோ ஆய்வக இயக்குநர் விவேக் டாடர், 15.06.2017 அன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இது அறம் சார்ந்த மக்கள் இயக்கங்களுக்கும், தேனி மாவட்ட மக்களுக்கும் கிடைத்த வெற்றி!

இப்போது, நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை ஆந்திராவில் நிறுவப்போவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது கவலை அளிக்கக்கூடியது. நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் எங்கு அமைந்தாலும், அது எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்! ஆந்திர மக்கள் இத்திட்டத்தை தங்கள் மண்ணில் காலூன்ற விடாமல் விரட்டியடிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். பேரழிவு ஏற்படுத்தும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை எதிர்த்து ஆந்திர மக்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு அளிக்கும்!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)

http://www.kannotam.com/2015/02/blog-post.html
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.