ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிய - தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு அனுப்ப வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிய - தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு அனுப்ப வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அறிக்கை! 
கடந்த 02.06.2017 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், கதிராமங்கலம் கிராமத்தை முற்றுகையிடச் செய்து, இந்திய அரசின் எண்ணெய் எரிவளிக் கழகம் (ஓ.என்.ஜி.சி.), அங்கு புதிய எண்ணெய் எரிவளிக் குழாய் இறக்கியது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அக்கிராமத்தில் உள்ளூர் மக்கள் வெளியே போக முடியாமலும், அக்கிராமத்திற்குள் யாரும் உள்ளே வர முடியாமலும் மனித உரிமை பறிக்கப்பட்டு, பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருந்தனர். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்ட பத்து பேரை சிறையில் அடைத்தனர்.

இந்த அடக்குமுறைகளைக் கண்டித்து 20.06.2017 அன்று, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தியது. நான்கு நாட்கள் நடந்த காவல்துறையின் முற்றுகை ஆக்கிரமிப்பில் கதிராமங்கலம் மக்கள் பட்ட துயரங்களையும், ஏற்கெனவே அவ்வூரில் பதினேழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எண்ணெய் எரிவளிக் குழாய் கிணறுகளால் நிலத்தடி நீர் பாழ்பட்டு, சாகுபடிக்கு ஏற்பட்ட துயரங்களையும் தோழர் க. அருணபாரதி இயக்கத்தில் குறும்படமாக “பன்மைவெளி” வெளியிட்டது.

இவற்றுக்குப் பிறகு, நேற்று (21.06.2017) எண்ணெய் எரிவளிக் கழக – காரைக்கால் பிரிவு பொறுப்பு அதிகாரி “தவறான பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்” என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் 2000லிருந்து எண்ணெய் மற்றும் எரிவளி எடுக்கும் குழாய்கள் கதிராமங்கலத்தில் செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறார். ஆனால், இதற்கு முன் கதிராமங்கலம் மக்களிடம் மண்ணெண்ணெய் எடுப்பதற்காக என்று சொல்லிதான் குழாய்களை இறக்கியுள்ளார்கள். அத்துடன், எரிவளி (Gas) எடுப்பது பற்றி மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.

அடுத்து, நிலக்கரிப்படுகை மீத்தேன் – ஷேல் மீத்தேன் ஆகியவற்றை தமிழ்நாட்டில் எடுக்கும் திட்டம் ஓ.என்.ஜி.சி.க்கு இல்லை என்றும், இனியும் இருக்காது என்றும் மேற்படி அறிக்கையில் அந்த அதிகாரி கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படும் குறும்படங்களும், செய்திகளும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளார்.

இக்கூற்று முற்றிலும் பொய்யானது! நாடாளுமன்ற மக்களவையில் 13.05.2015 அன்று, வினா ஒன்றுக்கு எழுத்து வடிவில் விடையளித்த பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டுக் காவிரிப்படுகையில் நிலக்கரிப்படுகை மீத்தேன், ஷேல் மீத்தேன் ஆகியவற்றை எடுப்பதற்கான ஆய்வு நடக்கும் என்று உறுதிபடக் கூறியிருந்தார். 

அதன்படி, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 25.06.2015 அன்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பியக் கடிதத்தில் (ONGC/CHSE/ENV/Amend.EC-Shale Gas/2015), நிலக்கரிப்படுகை மீத்தேன் – ஷேல் மீத்தேன் எடுப்பதற்காக மேலும் சில சாதகமான திருத்தங்களைக் கோரியிருந்தது.


அடுத்து 2016 ஏப்ரல் முதல் வாரத்தில், பசுமைத் தீர்ப்பாயத்தில், நிலக்கரிப்படுகை மீத்தேன் - ஷேல் மீத்தேன் எடுக்கும் திட்டம் தங்களுக்கு இருக்கிறது என்று ஓ.என்.ஜி.சி. ஒப்புக் கொண்டது.

ஷேல் மீத்தேன் எடுப்பதற்கான மேற்கண்ட அறிவிப்புகள், அறிக்கைகள், கடிதங்கள், ஒப்புதல் கூற்றுகள் அனைத்தும் எப்பொழுது திரும்பப் பெறப்பட்டன என்பதை நேற்று அறிக்கை கொடுத்த காரைக்கால் பொறுப்பு அதிகாரி கூற வேண்டும். அவையெல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உண்மையை மறைத்து, கச்சா எண்ணெய் எடுப்பதாகக் கூறிக் கொண்டு படுகை மீத்தேன் – ஷேல் மீத்தேன் ஆகியவற்றை எடுக்கும் ஆய்வுப்பணிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

2.06.2017 அன்று தொடங்கி நான்கு நாட்கள் கதிராமங்கலத்தில், புதிதாக இறக்கியக் குழாய்கள் எதை எடுப்பதற்காக என்ற மர்மம் ஓ.என்.ஜி.சி.க்கு மட்டுமே தெரியும். புதிய குழாயைச் சுற்றி இன்றைக்கும் காவல்துறையை காவலுக்கு வைத்துக் கொண்டுள்ளார்கள். அந்த நான்கு நாட்கள் பராமரிப்புப் பணிதான் செய்தோம் என்று ஓ.என்.ஜி.சி. கூறுவது உண்மைக்குப் புறம்பான செய்தி! அதில் நிலத்தடி நீரை மேலும் பாழ்படுத்தும் இரசாயணக் கலவைகளை மேலும் இறக்கியிருக்கிறார்கள் என்பதும் உண்மை!

அடுத்த மிக முக்கியமான செய்தி, கடந்த 17 ஆண்டுகளாக கதிராமங்கலத்தில் செயல்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவளி குழாய்களால் நிலத்தடி நீர் முற்றிலும் பாழ்பட்டு, குடிநீருக்குப் பயன்படாத மஞ்சள் நிற சேற்று நீராக மாறிவிட்டது. அத்துடன், அக்குழாய்கள் உள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் கருகிப்போகின்றன. அவ்வப்போது திடீரென்று தீப்பற்றி எரிகிறது. இதில், செயலட்சுமி என்பவர் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. ஓ.என்.ஜி.சி.தான் அழைத்துப் போய் கமுக்கமாக சிகிச்சை அளித்து கொண்டுவந்து விட்டது.

காவிரி ஆற்றுக்கும், விக்கிரமனாற்றுக்கும் .இடையில் நீர் வளமும் நிலவளமும் நிறைந்திருந்த ஊர் கதிராமங்கலம். பத்தடி ஆழத்தில் பளிங்கு போல் தூய நீர் கிடைத்த ஊர் கதிராமங்கலம்! எண்ணெய் எரிவளிக் குழாய்கள் இறக்கப்பட்ட பின்தான், குடிநீருக்கும் வேளாண்மைக்கும் தகுதியற்றதாக நிலத்தடி நீர் மாறியது. பத்தடியில் கிடைத்த நிலத்தடி நீர் இப்போது, எழுபதடிக்கும் கீழே போய்விட்டது. அந்த நீரும் பாழ்பட்டுவிட்டது.

இன்று, இந்த பட்டறிவிலிருந்துதான் கதிராமங்கலம் மக்கள், கதிராமங்கலத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஏழு எண்ணெய் மற்றும் எரிவளிக் குழாய் கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டுமென்று பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இத்தனை கசப்பான - நஞ்சு கலந்த நடைமுறை உண்மைகளைப் புறக்கணித்துவிட்டு, மக்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் குரல் கொடுப்போரை வதந்தி பரப்புவோர் என்றும் “தீய சக்திகள்” என்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சாடுவது வாடிக்கையாக உள்ளது. அதேநிலையில்தான் புதிதாக வந்த ஓ.என்.ஜி.சி. அறிக்கையும் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஓ.என்.ஜி.சி.க்கு காவல் படையை அனுப்பும் சேவகம் மட்டும் செய்து கொண்டிருக்கக்கூடாது. கதிராமங்கலத்தில் நடந்து கொண்டிருக்கும் உண்மை என்ன என்பதறிய - அதற்குரிய தீர்வு காண வல்லுநர் குழு ஒன்றை அனுப்ப வேண்டும். அந்த வல்லுநர் குழுவில் மீத்தேன் திட்டத்தை எதிர்க்கும் அமைப்புகளின் சார்பில் பரிந்துரைக்கப்படும் முழுக் கல்வித் தகுதியும் பணி அனுபவமும் உள்ள வல்லுநர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கோயபல்சு பரப்புரை காவிரிப்படுகை மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.