ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பால் கதிராமங்கலம் காப்புப் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது!

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பால் கதிராமங்கலம் காப்புப் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது!
ஓ.என்.ஜி.சி.யின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் மக்களுடன் இணைந்து போராடியதற்காக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 தோழர்களின் பிணை மனுவை, தஞ்சை மாவட்ட நீதிமன்றம் இன்று (04.07.2017) தள்ளுபடி செய்தது. 

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், கதிராமங்கலம் பிரமுகர் திரு. க. தர்மராசன், தோழர்கள் செந்தில், முருகன், சாமிநாதன், ரமேஷ், சிலம்பரசன், சந்தோஷ் உள்ளிட்ட 9 தோழர்கள் மீது காவல்துறையினர், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 294(B), 314, 323, 324, 336, 383, 436(3), 
506(2) ஆகியவற்றின் கீழ் பொய் வழக்குப் புனைந்து, 30.06.2017 அன்று மாலை தடியடி நடத்திக் கைது செய்தனர். தற்போது, திருச்சி சிறையில் மேற்படித் தோழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இன்று (04.07.2017) காலை தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் தோழர்களின் பிணை மனு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் தோழர்களை விடுதலை செய்வதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. 

போராட்டத்தால் அரசுக்கு ரூ.3 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், காயம் அடைந்த அரசு அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், கதிராமங்கலத்தில் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, தோழர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

தமிழ்நாடு அரசே! மேலும் மேலும் துரோகத்தில் ஈடுபடாதே! கதிரைக் காக்கக் களம் புகுந்த போராளிகளை உடனடியாக விடுதலை செய்! 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
www.kannotam.com
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.