மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)! கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை
மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
கோலாகல விழா ஆரவாரத்தோடு, பகை அரசுகளின் மீது போர் தொடுத்து, அவர்களை சரணடையச் செய்த, வெற்றிக் களிப்போடு, மிகப்பெரிய மாநில உரிமைப் பறிப்பை மோடி அரசு அறிவித் திருக்கிறது!
கோலாகல விழா ஆரவாரத்தோடு, பகை அரசுகளின் மீது போர் தொடுத்து, அவர்களை சரணடையச் செய்த, வெற்றிக் களிப்போடு, மிகப்பெரிய மாநில உரிமைப் பறிப்பை மோடி அரசு அறிவித் திருக்கிறது!
இந்திய நாடாளுமன்ற நடு மண்டபத்தில் 30.06.2017 நள்ளிரவில் கூட்டிய, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி வழியாக மோடி அரசு அறிவித்துள்ள சரக்கு - சேவை வரி (Goods and Services Tax - GST) என்பதே அது! இப்புதிய வரி விதிப்பு, 2017 சூலை 1 முதல் செயலுக்கு வருகிறது.
காங்கிரசுக் கூட்டணியின் மன்மோகன் சிங் ஆட்சியில் முன்வைக்கப்பட்டு, இப்போது பா.ச.க.வின் மோடி ஆட்சியில் சரக்கு - சேவை வரி முழு வடிவம் பெற்று செயலுக்கு வருகிறது.
இதற்கென 122ஆவது திருத்தம் என்ற ஒற்றைத் திருத்தத்தின் மூலம், ஒரே அடியில் அரசமைப்புச் சட்டத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
வரி விதிப்பில் மட்டுமின்றி, நிலவுகின்ற அரைகுறை கூட்டாட்சியிலும் மிகப்பெரிய குலைவை ஏற்படுத்தியிருக்கிற சட்டமே சரக்கு சேவை வரிச் சட்டமாகும்.
நடுவண் அரசின் உற்பத்தி வரி (எக்சைஸ் வரி), கூடுதல் உற்பத்தி வரி, சேவை வரி, கூடுதல் சுங்க வரி, சரக்கு மற்றும் சேவைகளின் மீதான கட்டணங்கள் (Cess) ஆகியவையும், மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட விற்பனை வரி / மதிப்புக் கூட்டு வரி (வாட்), நடுவண் விற்பனை வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, சரக்கு மற்றும் சேவைகளின் மீதான மாநில அரசின் கட்டணங்கள் ஆகியவையும் நீக்கப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக இந்த ஒற்றை வரி விதிப்பான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வரப்படுகிறது.
அதாவது நடுவண் அரசு விதிக்கும் சுங்க வரி தவிர, பிற அனைத்து மறைமுக வரிகளும் நீக்கப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக இந்த ஜி.எஸ்.டி. கொணரப்படுகிறது.
வரி இனங்களில் நேர்முக வரி (Direct Tax), மறைமுக வரி (Indirect Tax) ஆகிய இரு வரி இனங்கள் இருப்பதை அறிவோம்.
இவற்றுள் மறைமுக வரி என்பது சந்தைக்கு வரும் சரக்குகள், பணம் பெற்றுக் கொண்டு செய்யப் படும் சேவைகள் ஆகியவற்றின் மீதான வரி விதிப்புகள் ஆகும். நேர்முக வரி என்பது தொழில் முனைவோர், வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வருமானத்தின் மீதும், சொத்துகள் மீதும் விதிக்கப்படும் வரி இனங்கள் ஆகும்.
நேர்முக வரி என்பது, நிரந்தர வருமானமுள்ள நடுத்தர - உயர் நடுத்தர மற்றும் உயர் வருமான முள்ளவர்களிடமிருந்து திரட்டப்படுவதாகும்.
இவற்றுள் மறைமுக வரி என்பது பெரும்பாலும் சரக்கு மற்றும் சேவைகளின் விலைகளிலும், கட்டணங்களிலும் ஏற்றப்பட்டு, இறுதியில் நுகர்வோர் சுமக்க வேண்டிய வரி இனம் ஆகும். மிகப்பெருந்தொகையான மக்கள் தாங்கள் வாங்கும் சரக்குகள், பயன்படுத்தும் சேவைகள் ஆகியவற்றின் வழியாக இந்த வரி இனத்தை சுமப்பவர்கள் ஆவர். சுருங்கச் சொன்னால், மறைமுக வரி என்பது பெரும்பாலான ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் வரி விதிப்பாகும். பொது மக்கள், தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தங்களது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் இந்த வரி விதிப்பைச் சுமந்தே ஆக வேண்டும்.
இந்திய நிதித்துறையின் 2015ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, மறைமுக வரி இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாயில் 67 விழுக்காடு வருமானத் தைத் தருவதாகும். நேர்முக வரியின் மூலம் அரசுகளுக்கு வரும் வருமானம் 33 விழுக்காடுதான்! அதாவது, நடுத்தர மற்றும் உயர் வருமானப் பிரிவுகளில் உள்ளவர்களைவிட, ஏழை எளிய மக்களிடம்தான் அதிக வரி வருவாயை அரசுகள் ஈட்டுகின்றன என்பது பொருள்!
அதே போல், அவ்வப்போது பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய பெயரில் வரிகள் புகுத்தப்பட்டு மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கப்பட வேண்டிய வரி இனங்கள் குறைக்கப்பட்டன.
இந்திய அரசமைப்பு என்பது, கூட்டாட்சி வடிவமுள்ள ஒற்றையாட்சியாகும். மிகவும் வரம்புக்குட்பட்ட வரி விதிப்பு அதிகாரங்கள்தான் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இந்திய அரசு விதித்துத் திரட்டும் வரி வருமானத்தின் ஒரு சில வரி இனங்களில் மாநிலங் களுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு கொடுத்தாக வேண்டு மென்றும், வேறு சில வரி இனங்களில் இந்திய அரசு குழு அமைத்துத் தீர்மானித்து அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு பங்கு வழங்கலாம் என்றும் அரச மைப்புச் சட்டம் கூறுகிறது.
இதனடிப்படையில், வருமான வரியில் (Income Tax) மாநிலங்களுக்குக் குறிப்பிட்ட பங்கு கொடுத்தாக வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுவதால், சவகர்லால் நேரு இந்தியத் தலைமையமைச்சராக இருந்த காலத்திலேயே கொழுத்த வருமானம் அளிக்கும் தொழில் நிறுவனங்களிடம் திரட்டும் வரி வருமானத்தை மாநிலங்களுக்குப் பிரித்து அளிக்காத வகையில் சூதாக சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
வருமான வரி என்ற பொது இனத்திலிருந்து, தனிநபர் வருமான வரி மட்டும் கட்டாயம் மாநிலங் களுக்குப் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் வைக்கப்பட்டது. அதிக வருமானம் கிடைக்கும் கம்பெனி வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிக்கு “நிறுவன வரி” (Corporate Tax - கம்பெனி வரி) என்ற புதிய பெயர் சூட்டப்பட்டு, தனியே பிரித்தெடுக்கப் பட்டது.
இப்போது வந்திருக்கிற சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), மேற்சொன்ன அனைத்தையும் தாண்டி அடிப்படையிலேயே மாறுதல் கொண்டு வந்துள்ள வரி விதிப்பு முறையாகும்.
ஜி.எஸ்.டி. குறித்து அவ்வப்போது ஆரவாரப் பேச்சுகள் பேசி வரும் மோடியும், இந்திய நிதியமைச்சர் அருண் செட்லியும், படுமோசமான இந்த மாநில அதிகாரப் பறிப்பை மாநிலங்களின் அதிகாரத்தை மதிக்கும் கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு (Co-operative Federalism) எடுத்துக்காட்டு என்பதாக பச்சைப் பொய்யை கூறி வருகின்றார்.
இதற்கென அரசமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட 122ஆவது திருத்தம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 246இல் கூறப்பட்டுள்ள ஒன்றிய அதிகாரப்பட்டியல், மாநில அதிகாரப்பட்டியல், பொது அதிகாரப்பட்டியல் ஆகிய அனைத்திலும் பல அடிப்படையான குறுக்கீடுகளை செய்திருக்கிற சட்டத் திருத்தம் ஆகும்.
வரி விதிப்பு குறித்த அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 248, 249, 250, 254, 268, 269, 270, 286 ஆகிய உறுப்புகளில் அடிப்படை மாற்றங்களையே இந்த ஒற்றைச் சட்டத் திருத்தத்தின் வழியாக மோடி அரசு கொண்டு வந் துள்ளது.
ஒரு கோடியே ஐம்பது இலட்சத்திற்குக் கீழ் ஆண்டு மூலதன சூழற்சியுள்ள (Turnover) நிறுவனங்களின் மீது சரக்கு சேவை வரி வசூலிக்க மாநிலங்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் மூலதன சுழற்சி யுள்ள நிறுவனங்களின் மீதான வரி வசூலிக்கும் அதிகாரம், நடுவண் அரசுக்கே உண்டு!
இந்த சரக்கு - சேவை வரி விதிப்பில் மூன்று பிரிவுகள் கூறப்பட்டுள்ளன, ஒன்று நடுவண் சரக்கு - சேவை வரி (Central GST - CGST), மாநில சரக்கு - சேவை வரி (State GST - SGST), ஒருங்கிணைந்த சரக்கு - சேவை வரி (Integrated GST - IGST).
சரக்குகள் மற்றும் சேவைகள் மீது வரி விகிதத்தைத் தீர்மானிப்பதற்கு, சரக்கு சேவை வரி மன்றம் (ஜி.எஸ்.டி கவுன்சில்) என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது.
மாநில உரிமை அடியோடு பறிப்பு
மேலோட்டமாகப் பார்த்தால், மாநிலங்களும் சேர்ந்து முடிவெடுக்கக் கூடியதாக, அதுவும் மாநிலங் களுக்குப் பெரும்பான்மை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள தாகத் தெரியும். ஆனால், இம்மன்றத்தில் வாக்குக ளுக்குஅளிக்கப்படும் மதிப்பு அளவு (வெயிட்டேஜ்) வரையறுக்கப்பட்டதில்தான் மோடி அரசின் சூது தெரியும்.
சரக்கு சேவை வரி மன்றத்தில், மாநில அரசுகளின் பேராளர்கள் மூன்றில் இரண்டு பங்கினராக இடம் பெறுவர். நடுவண் அரசின் பிரதிநிதிகள் மூன்றில் ஒரு பங்கினர். இதனைக் காட்டியே மாநில அதிகாரத்தை மதிக்கிற கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு தனது அரசு சென்றிருப்பதாக மோடி அரசு தம்பட்டம் அடிக்கிறது.
ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவை வரியை தீர்மானிக்கும் அதிகாரம் படைத்த ”சரக்கு மற்றும் சேவை வரி மன்றம்“ (GST Council) முற்றிலும் நடுவண் அரசின் சர்வாதிகாரத்திற்கு உட்பட்டதாக அமையும் வகையில், நுட்பமாக விதிமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதற்கென அரசமைப்புச் சட்டத்தில் 279--A என்ற புதிய உறுப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் இதற்கென்று புதிதாகப் புகுத்தப்பட்டுள்ள 279 A என்ற புதிய உறுப்பை உற்று நோக்கினால், மாநில உரிமைப் பறிப்பு எவ்வளவு நுட்பமாக செய்யப்பட்டிருக்கிறது என்பது புரியும்.
வாக்குகளின் மதிப்பு அளவு WT = WC + WS என்ற வாய்ப்பாடு, 279-A உறுப்பின் பிரிவு 9-இன்படி வரையறுக்கப்படுகிறது.
அனைத்து சரக்கு மற்றும் சேவைகளின் மீது வரி இனங்களை, வரி அளவை, விதி விலக்குகளை தீர்மானிக்கும் உரிமை இந்த சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தில் மாநில அரசின் பேராளர் களும் (பிரதிநிதிகளும்) இடம் பெறுவார்கள். இவர்களுக்கு, ஒவ்வொரு சிக்கலின் மீதும் வாக்களிக்கும் உரிமையுண்டு. அதிலும், இம்மன்றத் தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மாநில அரசின் பேராளர்களாக இருப்பர் என்று கூறப்பட் டுள்ளது.
எல்லா மறைமுக வரி குறித்தும் மாநிலங்களையும் கலந்து கொண்டு தான் முடிவு செய்யப்படும் என்ற ஒரு மாயத்தோற்றத்தின் கீழ், நடுவண் அரசின் சர்வாதிகாரம் இதன் வழியாக நிலைநாட்டப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தில், நடுவண் அரசு பேராளர்களும் (பிரதிநிதிகளும்) இருப்பார்கள். மேற்சொன்ன சட்டப் பிரிவுப்படி, நடுவண் அரசின் வாக்கு மதிப்பு அளவு, 3இல் 1 பங்காக இருக்கும். அதாவது, 33.3 விழுக்காடு.
இம்மன்றத்தில், எந்தவொரு சிக்கல் குறித்தும் முடிவெடுப்பதாக இருந்தாலும் வந்திருந்து அளிக்கப்படும் வாக்கில் 75 விழுக்காடு மதிப் பளவு (வெயிட் டேஜ்) கொண்ட வாக்கு அதற்குக் கிடைக்க வேண் டும். அப்போதுதான், மன்றத்தின் முடிவாக தீர்மானிக் கப்படும்.
இதில் தான் சூது உள்ளது.
நடுவண் அரசின் வாக்கு மதிப்பு 33.3 விழுக்காடு தான். மாநிலங்களின் வாக்கு மதிப்பு 66.6 விழுக்காடு. 22 மாநிலங்கள் இம்மன்றத்தில் உறுப்பு வகிப்பதாகக் கொள்வோம். அப்போது, ஒரு மாநிலத்தின் வாக்கு மதிப்பு சுமார் 3 விழுக்காடு ஆகும். எல்லா மாநிலங்களும் பெரும்பாலும் வரிவிதிப்புத் தொடர்பான சிக்கல்களில் ஒரே விதமான கருத்துக்கு வருவது இல்லை.
ஏதோ ஒரு அரிதான சூழலில் எல்லா மாநிலங்களும் ஒரு சிக்கல் தொடர்பாக ஒரே கருத்தில் நிற்பதாகக் கொள்வோம். அப்போது, மாநிலங்களின் வாக்கு மதிப்பு 66.6 விழுக்காடு. அந்த சிக்கலில் நடுவண் அரசு இதற்கு எதிரான கருத்திலிருந்தால் அப்போது, நடுவண் அரசின் சார்பில் அளிக்கப்படும் வாக்கின் மதிப்பு சுழியம் (0) ஆகும்.
படுமோசமான இந்த அதிகாரப் பறிப்புக்குத்தான் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு ஏற்பிசைவு வழங்கியிருக்கிறது. இதுவரை எதிர்த்து வந்த ஒரு வலுவான மாநில அரசை சரணடையச் செய்த எக்களிப்போடு நரேந்திர மோடி நாடாளுமன்ற நடு மண்டபத்தில் ஜி.எஸ்.டி. செயலா வதை அறிவிக்கிறார்.
ஆனால், ஒரு தீர்மானம் நிறை வேறுவதற்கு 75 விழுக்காடு வாக்குகள் கிடைத்தாக வேண்டும். மேலே சொன்ன அரிதான சூழலிலும் மாநிலங்களின் முடிவுக்குக் கிடைக்கும் வாக்கு மதிப்பு 66 விழுக்காடு தான்! ஆனால் சட்டம் நிறை வேற்றுவதற்குத் தேவை யோ 75 விழுக்காடு.
நடைமுறையில் நடுவண் அரசு இரத்து அதிகாரம் பெற்றுள்ளது. இதுதான், இந்த விதியில் உள்ள சூழ்ச்சி!
ஒரு மாநில அரசு, மாநில உரிமைகளுக்காக வலியுறுத்த முனைந்தாலும் அது தனது 3 விழுக்காடு வாக்கு மதிப்பிலிருந்துத் தொடங்கி அதிகம் போனால், 66 விழுக்காட்டை அடைய முடியும். ஆனால், நடுவண் அரசுக்கு இருக்கும் வாக்கு மதிப்பு 33 விழுக்காடாக இருப்பதால் கட்சி அரசியல், கூட்டணி அரசியல், வழக்குகளைக் காட்டி மிரட்டல் போன்ற பல வழிகளில், தனது 33 விழுக்காடு ஆதரவை 75 விழுக்காடாக மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
ஒரேயொரு 122ஆவது சட்டத் திருத்தத்தின் மூலமாக நிலவும் அரைகுறை கூட்டாட்சியும், பெருமளவில் ஒற்றையாட்சியாக மாற்றப்படுகிறது. மாநில அதிகாரம் ஒரேயடியாக பறிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு அரசு ஏதாவது ஒரு சரக்கின் மீது அல்லது சேவையின் மீது வரி விகிதத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ விரும்பினால் இதுவரை இருந்ததுபோல், தானாக தீர்மானிக்க முடியாது! இந்த ஜி.எஸ்.டி. மன்றத்திற்கு மனு போட வேண் டும். அந்த மனுவை உறுப்பு வகிக்கும் பிற மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டால்தான், விவாதத்திற்கு வைப் பதற்கு மன உறுதி அளிக்கும் வகையில் எண்ணிக்கை கிடைக்கும்.
ஒரு கோடியே ஐம்பது இலட்ச ரூபாய் வரையிலும் மூலதன சுழற்சியுள்ள நிறுவனங்கள் மீதுகூட வரி விகிதத்தையும் மாநில அரசு தீர்மானித்துவிட முடியாது. வரி வசூலிக்கிறப் பணி மட்டுமே பிரித்து அளிக்கப் பட்டிருக்கிறது. வரி விகிதத்தைத் தீர்மானிக்கிற அதிகாரம், மேற்சொன்ன ஜி.எஸ்.டி. மன்றத்திற்கே உண்டு.
எப்படி இருப்பினும், மேலே விளக்கிய வகையில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டால்தான் இதை செயல்படுத்த முடியும்!
சரக்கு சேவை வரிச் சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, வெற்றிக் களிப்பில் உரையாற்றிய நரேந்திர மோடி, “ஒரே நாடு - ஒரே சந்தை - ஒரே வரி” என்று கொக்கரித்தார்.
அதாவது, தமிழ்நாட்டில் எந்தவகை வரி விதிப்பு அதிகாரமும் அற்ற -வெறும் நடுவண் அரசின் வரி வசூலிப்பு முகமையாக தமிழ்நாடு அரசு மாற்றப் பட்டுள்ளது!
இவ்வாறு மாநில அரசின் வரி விதிப்பு உரிமை பறிக்கப்படுவதென்பது, எல்லா மாநிலங்களுக்கும்தான் என்ற போதிலும், பிற மாநிலங்களை ஒப்பிட வரி வசூலிப்பில் கூடுதல் திறனுள்ள, வரி ஏய்ப்பு குறைவாக உள்ள தமிழ்நாட்டுக்கு வரி வருவாய் இழப்பு அதிகமாகும்.
வரி விதிப்பு அதிகாரத்தைப் பறித்து, வரி வருமானத்தை பெருமளவு குறைத்துவிட்டதால், மாநிலங்களின் செலவினங்கள் குறித்தும் மாநில அரசுகள் சுதந்திரமாக முடிவு செய்ய முடியாது.
ஏனெனில், ஏற்கெனவே நிதி ஒழுங்கு மற்றும் மேலாண்மைச் சட்டம் செயலில் உள்ளது. அதன்படி, ஒரு வரம்புக்கு உட்பட்டுத்தான் மாநில அரசுகள் செலவினங்களில் ஈடுபட முடியும்.
எடுத்துக்காட்டாக, உழவர்களின் கடன் தள்ளுபடி என்பதை மாநில அரசு விரும்பினாலும் அந்த அளவுக்குச் செய்ய முடியாது. ஏற்கெனவே உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப் மாநில அரசுகள் அடுத்தடுத்து உழவர் கடன் தள்ளுபடியை அறிவித்தபோது, இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி இதற்காகும் நிதியை ஒன்றிய அரசு தர முடியாது, மாநில அரசுகள்தான் தங்கள் நிதியிலிருந்து ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென்று உறுதிபட அறிவித்துவிட்டார்.
இப்போது, இந்த புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை முதல் மூன்றாண்டுகளுக்கு முழு அளவிலும், நான்காவது ஆண்டில் 75 விழுக்காடும், ஐந்தாவது ஆண்டில் 50 விழுக்காடும் ஈடு செய்வதாக இந்திய அரசு அறிவித் திருக்கிறது. ஐந்தாண்டுக்குப் பிறகு இழப்பீடு எதுவும் கிடைக்காது! வருவாய் இழப்பு, இழப்புதான்!
தனி அரசு நடத்தி, தமிழ் வணிகர்களுக்கு வணிகப் பாதை அமைத்துக் கொடுப்பதற்காகவே இமயமலை வரை தரைப்போரும், கடல் கடந்த போரும் நடத்திய செம்மாந்த தமிழினம் - வணிகத்திற்கும் வரி விதிப்புக்கும் அறம் சொன்ன தமிழினம், இன்றைக்கு இந்த வரலாற்றுப் பெருமிதங்களுக்குத் தொடர்பே இல்லாத கங்காணிகளால் இந்தியப் பேரரசின் காலடியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்திய அரசின் விருப்ப அதிகாரத்திற்கு (Veto) உட்பட்டதாக மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு நடக்கும். அனைத்துக் கொள்கைகளிலும் நடுவண் அரசின் ஆளுங்கட்சி மனங்குளிர நடந்து கொண்டால்தான், மாநில அரசுக்கு கிடைக்கிற நிதி ஓரளவுக்காவது கிடைக்கும்! பேரரசின் பாளையப்பட்டுகளைவிட கேவலமான நிலைக்கு, மாநிலங்கள் தள்ளப்பட் டுள்ளன.
ஒற்றைச் சந்தை என்ற ஆதிக்கம்
இவை பெருமுதலாளியக் கட்டமைப்புகள்தான் என்றாலும், ஒற்றைச் சந்தை என்பதற்கு ஒற்றை வரி விதிப்பைக் கட்டாயமாக்கவில்லை! பல்வேறு தேசிய அரசுகளின் இறையாண்மையை, அவற்றின் வரி விதிப்பு உரிமையை, மாகாண அரசுகளின் வரி விதிப்பு உரிமை யை இவை மதிக்கின்றன. அதே நேரத்தில், ஒற்றைச் சந்தையையும் நிறுவிக் கொள்கின்றன.
ஒற்றைச் சந்தை என்பது முதலாளியப் பெருங் குழுமங்களின் வல்லாதிக்கத்தை நிறுவும் முழக்கமாகும். இந்தியா ஒரு அரசமைப்பில் இருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்கள் இணைக்கப் பட்டுள்ள துணைக் கண்டமாகும். இத்தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஐரோப்பாவிலும், பிற பகுதிகளிலும் இருந்ததைப் போன்று தனித்தனி தேசிய அரசுகள் அமைத்துக் கொள்ள தகுதி படைத்தவை ஆகும்.
அதனால்தான், ஒரு மொழிவழி தேசிய இனத்திற்கு ஒரு மாநிலம் என்ற வகையில், மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. ஒவ்வொரு தேசிய இன மாநிலமும், அதற்கே உரிய தனித்த மொழி, வணிக முறை, சந்தைப் பண்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ள தனித்தனி அலகு களாகும்.
தமிழ்நாடு தனித்த தேசிய இனச் சந்தையாக, நிலவ முடியாது என்பதையே ஜி.எஸ்.டி. அறிவிக்கிறது. ஆனால், தேச அரசுசுளை அல்லது மாநில உரிமை களை அழிக்கிற உலக முதலாளிய வல்லரசுகள் கூட, ஒற்றை வரி விதிப்பாக ஜி.எஸ்.டி.யை கொண்டு வரவில்லை!
இத்தேசிய இனச் சந்தைகள் அனைத்தையும் ஒழித்து விட்டு, இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒற்றைச் சந்தையாக இந்தத் துணைக் கண்டத்தை மாற்றுவது, பொருளியல் வகையிலான இன அழிப்பாகும். இதைத்தான் ஜி.எஸ்.டி. செய்கிறது!
அதேபோல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தங்களுக்குள் ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை, அதற்கென ஐரோப்பிய ஒன்றிய நாடாளு மன்றம் என்ற அதிகாரக் கட்டமைப்பை, ஐரோப்பிய பொது சந்தை (European Common Market) என்ற ஒற்றைச் சந்தைக் கட்டமைப்பை அமைத்திருக்கின்றன. ஈரோ என்ற பொது நாணயமும் புழக்கத்தில் உள்ளது. ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்குமான ஜி.எஸ்.டி. இல்லை!
எடுத்துக்காட்டாக, உலகின் முதல்நிலை பொருளியல் வல்லரசான வட அமெரிக்க நாட்டில் ஜி.எஸ்.டி. இல்லை! வெவ்வேறு மாகாண அரசுகள், வெவ்வேறு விகித வரி விதித்து, திரட்டும் அதிகாரம் உள்ளது. ஒற்றைச் சந்தை என்பதை முதன்மையாகக் கொண் டுள்ள அமெரிக்க நாட்டிற்கு ஒற்றைச் சந்தையை நிறுவ ஜி.எஸ்.டி. தேவைப்படவில்லை!
ஜி.எஸ்.டி. என்பது உற்பத்தியாளர்கள் மீது விதிக்கும் வரி அல்ல. மாறாக பலநிலை நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரியாகும். ஒரு சரக்கு எங்கே உற்பத்தி யானாலும், எந்த மாநிலத்தில் உற்பத்தியானாலும் அது நுகரப்படும் அல்லது பயன்படுத்தப்படும் இடத்தில் தான், இந்த வரி விதிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் நடப்பது ஒற்றைச் சந்தை ஆதிக்க முயற்சி மட்டுமல்ல! ஒற்றை இன ஆதிக்க முயற்சியும் இணைந்து நிற்கிறது. இங்கு பெருங்குழும முதலாளிய ஆதிக்கம் மட்டுமின்றி, அதற்கு மேல் ஆரிய இன மேலாதிக்கமும் “இந்தியா” என்ற பெயரில் நிலவுகிறது.
வெவ்வேறு தேசிய இனங்களின் தனித்த வணிக நெறியை சந்தைப் பண்பாட்டை அழிப்பதென்பது, முதலாளிகளைவிட இன ஆதிக்கவாதிகளுக்குக் கூடுத லாகத் தேவைப்படுகிறது.
சந்தை வளர்ச்சி என்று சொன்னால், பெரும் பாலான மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதால், “ஒரே நாடு - ஒரே சந்தை” என்று முழங்கி தனது ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது!
மாநிலங்கள், தங்கள் விரி விகிகத்தை முடிவு செய்ய அனுமதிக்கப்பட்டால், போட்டி போட்டுக் கொண்டு வரி விகிதத்தைக் குறைத்துவிடுவார்கள், இதனால் வரி வருமானம் குறைந்துவிடும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.
இதற்கு பதிலளித்த மார்க்சியப் பொருளியல் அறிஞர் பிரபாத் பட்நாயக், “ஐரோப்பிய ஒன்றியத்திலும் அமெரிக்க நாட்டிலும் இன்னும் வேறு சில நாடுகளிலும் முடிவு செய்யப்பட்டிருப்பதைப் போல, குறைந்தபட்ச வரி விகிதத்தை ஒன்றிய அரசு முடிவு செய்து அறிவித்து, அதற்குக் கீழ் வரி விதிப்பு கூடாது என்று அறிவிக்க லாம்” என்று கூறுகிறார். இது கருத்தில் கொள்ளத் தக்கது!
மாநில அரசுகளின் மிக நீண்டப் போராட்டத் திற்குப் பிறகு, மாநில வரி விதிப்பு அதிகாரப் பட்டியலில் 84ஆம் பதிவுக்கு (Entry 84) முன்வைத்த திருத்தம் திரும்பப் பெறப்பட்டு, இப்போதைய வடிவில் ஜி.எஸ்.டி. ஏற்கப்பட்டிருக்கிறது.
ஐந்து வகை வரி விகிதங்கள், சரக்கு சேவை வரி மன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வெவ்வேறு விகித வரிகள் விதிக்கப்படுகின்றன. 0.3%, 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் வரி விதிப்புகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
இதனால் பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் ஆல்கஹால் மீதான வரி விதிப்பு உரிமை ஜி.எஸ்.டி.க்கு வெளியே வைக்கப்பட்டு, மாநிலங்களிடம் தொடர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி.யால் விலையேற்றம், தொழில் மந்தம்
ஜி.எஸ்.டி.யை ஏற்கச் செய்வதற்கு ஒரு உத்தியாக மோடி அரசு இதை அறிவித்திருந்தாலும், மிக விரை வில் மாநிலங்களின் வேண்டுகோளை ஏற்றோ அல்லது தானாகவோ இந்த வரி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படும்.
இவ்வாறு வரி விகிதங்கள் முடிவு செய்யப்படும் போது, ஏற்கெனவே நடப்பிலுள்ள மறைமுக வரி விகிதங்களின் கூட்டுத் தொகைக்கு நெருக்கமாகவே முடிவு செய்யப்பட்டுள்ளன. இதனை “வருவாய் நடுநிலை விகிதம்” (Revenue Neutral Rate - RNR) என்பார்கள்.
எனவே, ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை தவிர்க்க முடியாமல் உயர்த்தும்போது, விலை ஏற்றமும் தவிர்க்க முடியாதது! எனவே, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு விலை உயர்வுக்கும் பண வீக்கத்திற்கும் இட்டுச் செல்லும்!
ஜி.எஸ்.டி. என்ற ஒற்றை வரி விதிப்பு, ஒரு குறிப்பிட்ட சரக்கிற்கு அல்லது சேவைக்கு ஒரே விகிதத்தில் வரி சுமத்துகிறது. ஒரு பொருளைப் பொருத்து ரிலையன்சு, மோர் போன்ற பெரு வணிக நிறுவனங்கள், சாதாரண சில்லறை வணிகர்கள் ஆகிய இரு தரப் பாருக்கும் ஒற்றை வரி எனும்போது, நடைமுறையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை சந்தையிலிருந்து விரட்டிவிடும்!
இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும், ஒரு பொருளுக்கு அதற்கு அறிவிக்கப்பட்டுள்ள விகிதத்தில் தான் வரி விதிக்கப்படும். இதில், நுகர்வோர் பணக் காரரா ஏழையா என்ற வேறுபாடு கிடையாது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை ஏறுகிறபோது, அவர்களின் நுகர்வு குறையும். நுகர்வு குறையும்போது, உற்பத்தி குறையும். இது ஒரு குறுகிய காலத்தைத்தாண்டி நீடிக்குமானால், தொழில் தேக்கம் நிகழும்! இது மேலும் வேலையின்மையைக் கூடுதலாக்கி, சந்தையைக் குறுக்கி, இன்னும் தொழில் மந்தத்திற்கு இட்டுச்செல்லும்!
ஒருவேளை, நடுத்தர மற்றும் உயர் வருமானப் பிரிவினரின் நுகர்வு அதிகரித்து அதன் மூலம் சந்தை நிலைப்படுத்தப்பட்டாலும்கூட, மக்களிடையே சமமின்மை தீவிரமடையும். இது ஏதோ ஒரு வகையில் சமூகப் பதட்டத்தை அதிகரிக்கும்!
மாநிலங்களுக்கிடையே ஒப்பிட்டால், நுகர்வு குறைவான மாநிலங்கள்தான் தொழில் துறையில் பின்தங்கிய மாநிலங்களாகவும் இருக்கும். அங்கேயேயும் ஒரே விகிகத்தில் ஜி.எஸ்.டி. வரி என்றால், அது மேலும் அந்த மாநிலத்தை பாதிக்கும்.
அப்படியானால், தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களிலிருந்து நுகர்வு அதிகமிருக்கும் மாநிலத் தில் இந்த வரி வருவாய் கிடைக்கும்போது, ஒருபுறம் தொழில் தமிழ்நாடு, மராட்டியம் போன்ற தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதோடு, இந்த மாநிலங்களுக்குள்ளும் பெரும்பா லான சிறு நகரங்கள், கிராமங்கள், கூடுதல் பாதிப்பை சந்திக்க நேரும்!
ஒரு மாநிலத்திற்குள்ளேயே வரி வருவாய்த் தளம் ஒன்றிரண்டு நகரங்கள்தான் என்பது இப்போதைய நிலை. எடுத்துக்காட்டாக, பீகாரின் வாட் வருமானத் தில் 86 விழுக்காடு, அம்மாநிலத் தலைநகர் பாட்னா விலிருந்து மட்டும் கிடைக்கிறது. மற்ற 14 விழுக்காடு பாட்னா தவிர்த்த பிற பகுதிகளிலிருந்து கிடைக்கிறது. அதேபோல், குசராத்தில் அகமதாபாத்தும், மராட்டியத் தில் மும்பையும் அந்தந்த மாநிலத்தின் வரி வருவாயில் பெரும் பகுதியை ஈட்டித்தரும் மையங்களாக உள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களுக்கும் இது பொருந்தும்.
அதாவது, ஜி.எஸ்.டி. தொழில் மையங்களாக உள்ள மாநிலங்களையும் பாதிக்கும், இந்தத் தொழில் துறை வளர்ச்சி இல்லாத வேளாண்மை, சுற்றுலா ஆகிய வற்றைச் சார்ந்துள்ள மாநிலங்களையும் பாதிக்கும். ஒட்டுமொத்த விலையேற்றத்திற்கும் வழி வகுக்கும்!
சிறுதொழில் சில்லறை வணிகம் அழிக்கப்படும்
கருப்புப் பணத்தை ஒழிப்பது என்ற பெயரால், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதைப் போல, “ஊழலை ஒழிக்க ஜி.எஸ்.டி.” என்ற முழக்கம் வைக்கப்படுகிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, பெருமளவு கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்து விடவில்லை, வரி வருமானத்தைப் பெருக்கிவிடவும் இல்லை. ஜி.எஸ்.டி.யிலும் அதுதான் நடக்கும்!
அதேபோல், “ஒரே நாடு ஒரே சந்தை” என்பதில், அதிகப் பயனை அடையும் இந்திய மற்றும் பன்னாட்டு பெருங்குழுமங்களும், சிறு உற்பத்தியாளர்களும் ஒரே வரிச்சுமையை சுமக்க வேண்டும் என்கிறபோது, சந்தைப் போட்டியில் வலுவானவர்கள் வெல்வார்கள். சிறுதொழில் முனைவோர் விரட்டப்படுவார்கள்.
பெரு நிறுவனங்களுக்கு துணை உற்பத்தி நிறுவனங்களாக உள்ள சிறு தொழில்கள் தங்களுடைய உற்பத்திக்கான அடிப்படைப் பொருளுக்கு ஜி.எஸ்.டி.யை கட்டிவிட வேண்டும். அவர்கள் கட்டும் அளவிற்கு சிறு தொழில் முனைவோரிடம் வாங்கும் பெரு நிறுவனங் களுக்கு வரிக்கழிவு கிடைக்கும். இவ்வாறு பெரு நிறுவனங்களுக்கு வரிக்கழிவை வழங்குவதால், சிறு தொழில் நிறுவனங்கள் இலாபகரமாக நடத்துவது அரிதாகி விடும்!
பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் அனைத்துமே ஒரு மாதத்திற்கு மூன்று முறை வரித்துறை யினருக்கு தங்கள் கணக்குகளை மின்னியல் வடிவில் (Electronic Format இமெயில் வழியாகவோ, குறுந்தகடு வழியாகவோ) அளிக்க வேண்டும். இவர்களது கடை களை, நிறுவனங்களை கட்டாயம் கணினிமயமாக்க வேண்டும். இவர்களது வரவு செலவுக் கணக்குகள் ”ஜி.எஸ்.டி. இணையம்” (GST Network) என்ற வலைப் பின்னலில் இணைத்துவிட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் நாள், பதினைந்தாம் நாள், இருபதைந்தாம் நாள் என்று மூன்று முறை இவர்கள் தங்களது கணக்குகளை அனுப்ப வேண்டும். முறைப்படியான பதிவு செய்யப்பட்ட தணிக்கையாளர் கள் வழியாக ஆண்டு வரவு செலவுக் கணக்கு செலுத்து வதும் கட்டாயமாகிறது.
இப்போதுள்ள நிலையில், மிகப்பெரும்பாலான சிறு, நடுத்தர வணிகர்கள் கணினிமயமாவது அவர்கள் மீது கூடுதல் செலவை சுமத்துவதாகும். இந்த வகையிலும் சிறு நடுத்தர வணிகர்களும், சிறு உற்பத்தியாளர்களும் ஜி.எஸ்.டி. மூலம் நசுக்கப்படுகிறார்கள்.
வரித்துறையின் நிர்வாகத் திறன் அதிகரிப்பது, வரி வசூலிப்புத் திறன் அதிகரிப்பது ஆகியவை இல்லாமல் ஜி.எஸ்.டி. வசூலும் உயர்ந்துவிடப் போவதில்லை! மேற்சொன்ன திறன்கள், நேர்மையான நிர்வாகத்தால் உருவாக்கப்படுபவை! அரசியல் ஊழல்மயமாகி இருக்கிறபோது, இதில் மட்டும் திருத்தம் வருவதற்கு ஒரு வாய்ப்பும் இல்லை! இதில் திருத்தம் வந்துவிட்டால், ஜி.எஸ்.டி. தனியாகத் தேவையில்லை. ஏற்கெனவே இருக்கிற வரி விதிப்பே, வரி வருவாயை அதிகரிக்கும்.
ஊழலைக் குறைக்குமா?
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வெளிப்படைத்தன்மையையும், வரி வசூலிப்புத் திறனையும் அதிகரித்து, கையூட்டு ஊழலைக் குறைக்கும் என்ற வாதம் வலுவாக அரசினால் முன்வைக்கப்படுகிறது. இதற்கும் ஜி.எஸ்.டி.க்கும் எந்தக் கட்டாயத் தொடர்பும் இல்லை!
விதிக்கப்படும் வரியை விடுபடாமல் வசூலிப்பதைத் தான், வரித் திரட்டும் திறன் (Efficiency of Tax Collection) என்று சொல்கிறார்கள். இதற்கு ஜி.எஸ்.டி. கட்டாயமில்லை! ஏற்கெனவே, ‘வாட்’ வரி வந்தபோதும், இதே வாதத்தைத்தான் முன்வைத்தார்கள். வாட் வந்ததால், வரி வசூலிப்புத் திறன் அதிகரித்ததாகவோ, ஊழல் குறைந்துவிட்டதாகவோ மெய்ப்பிக்க சான்று கள் ஏதுமில்லை!
வங்கிகள் வாசலில் மக்கள் நிறுத்தப்பட்டதைப் போல, வரித்துறையின் ஜி.எஸ்.டி.என். வாசலில் சில்லறை வணிகர்களும், சிறு உற்பத்தியாளர்களும் வரிசையில் நிறுத்தப்படுவார்கள்.
தமிழ்நாட்டை தனது காலனியாக நடத்தும் தில்லி வல்லாதிக்கத்தின் இன்னொரு மிகப்பெரும் தாக்குதல் ஜி.எஸ்.டி. ஆகும் என்பதை தமிழ்நாட்டுக் கங்காணிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள். உரிமை உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளையோர்தான் இதைப் புரிந்து கொண்டு எழுச்சி கொள்ள வேண்டும்.
நடைபாதை வணிகர்கள், ஒரே ஒரு பற்ற வைப்பு இயந்திரத்தை வைத்து, ஒற்றை ஆள் பட்டறை நடத்து வோர் தங்கள் வருமானத்தை அரசுக்குக் காட்டாததால் கருப்புப் பணம் பெருகுவதும் இல்லை! செல்லாத நோட்டு அறிவிப்புப் போலவே சிறு வணிகர்களையும் சிறு உற்பத்தியாளர்களையும் “குற்றவாளி” என்ற சந்தேகப்பட்டியலில் வைப்பதற்கே ஜி.எஸ்.டி. பயன்படும்.
சில சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பால் கிடைத்திருக்கும் இலாபத்தை, விலைக் குறைப்பு என்ற வகையில் நுகர்வோருக்கு வழங்கியிருக்கிறார்களா என்று கண்காணிக்கப்படும் என்றும் அவ்வாறு விலை குறைக்காதவர்கள் மீது வரித்துறையினர் குற்ற நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஜி.எஸ்.டி. தேசிய இன மாநில உரிமைகளை முற்றிலும் பறிக்கிறது, நிலவும் அரைகுறை கூட்டாட்சியை ஒற்றையாட்சியாக மாற்றுகிறது! தில்லி ஆளும் கட்சியின் தயவை எதிர்நோக்கி இருக்கும் நிலைக்கு மாநிலங்களைத் தாழ்த்துகிறது! சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை நசுக்குகிறது. விலையேற்றத்திற்கு வழி செய்கிறது. வேலை வாய்ப்பை சுருக்கும் ஆபத்து கொண்டுள்ளது.
இது சில்லறை வணிகர்களையும் சிறு உற்பத்தி யாளர்களையும் நிரந்தரமாக வரித்துறை அதிகாரிகளின் மிரட்டலில் வைத்திருக்கும். ஊழலுக்கே வழிவகுக்கும். இதனால், நுகர்வோருக்குப் பயன் ஏதும் கிடைக்கப் போவதில்லை!
எனவே, சரக்கு சேவை வரியை இந்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும்!
ஒட்டு மொத்த வரி வருமானத்தில், நேர்முக வரியின் பங்களிப்பை அதிகப்படுத்தி, வரி வசூலிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும்.
(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 ஜூலை 1-15 இதழில் வெளியானது)
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment