ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வரலாறு அறிவோம்! தமிழ்மொழி - தமிழ்மண் மீட்புப் போராளி மங்கலங்கிழார் நினைவு நாள் 31.8.1953 கட்டுரை : கதிர் நிலவன்

வரலாறு அறிவோம்! தமிழ்மொழி - தமிழ்மண் மீட்புப் போராளி மங்கலங்கிழார் நினைவு நாள் 31.8.1953.  கட்டுரை : கதிர் நிலவன்
1911ஆம் ஆண்டிற்கு முன்னர் வடவேங்கடம், திருக்காளத்தி உட்பட பல்வேறு பகுதிகள் தமிழ்நாட்டின் வடவெல்லையாக இருந்து வந்தது. அப்போது பிரித்தானிய அரசு நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்கியது. 1911ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளன்று வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளான திருத்தணிகை, புத்தூர், திருக்காளத்தி, சந்திரகிரி, சிற்றூர், பலமேனரி, புங்கனூர் ஆகிய வட்டங்களைப் பிரித்தும், கடப்பை மாவட்டத்தில் உள்ள தெலுங்கர் பகுதிகளான மதனப்பள்ளி, வாயல்பாடு ஆகிய இரண்டு வட்டங்களைப் பிரித்தும் புதிதாக சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் காரணமாக சிறுபான்மை இனத்தவராகிய தெலுங்கர்கள் பெரும்பான்மையாக மாற்றப்பட்டனர். பனகல் அரசர், பொல்லினி முனிசாமி நாயுடு போன்றோர் சென்னை மாகாண முதல்வராக இருந்த காரணத்தால் சித்தூர் மாவட்ட அதிகார மையங்களில் தெலுங்கர்களே ஆதிக்கம் செலுத்தினர். பெரும்பான்மை தமிழர்கள் மீது தெலுங்குமொழி கட்டாயமாக திணிக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் தெலுங்கர் மாவட்டமென்று பொய்யான பரப்புரை செய்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் ஆந்திரர்கள் தந்த நெருக்கடி காரணமாக தமிழ்மொழி மீது தமிழர்களே பற்று கொள்ளாமல் தடுத்து நிறுத்துப்பட்டதோடு, தமிழ்பாடசாலை கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆந்திரர்களின் தெலுங்கு தேசிய உணர்வு அங்குள்ள தமிழர்களை தெலுங்கு மொழியை பேச வைத்தது. அத்தகையச் சூழ்நிலையில், வளரும் தலைமுறை மாணாக்கர்களுக்கு தமிழ் மொழிக் கல்வியை அளித்து இலட்சக்கணக்கான தமிழர்களை தெலுங்கராக மாறிப் போகாமல் தடுத்து நிறுத்தினார் ஒரு தமிழர். அவர் தான் 'மாத்தமிழர்' மங்கலங்கிழார்.
வட ஆற்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்து ஒரு கல் தொலைவில் உள்ள புளியமங்கலம் எனும் சிற்றூரில் 1897ஆம் ஆண்டு ஐயாசாமி- பொன்னுரங்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஐயாசாமி அவ்வூரில் மணியம் (ஊர்த் தலைவர்) வேலை பார்த்து வந்தார். அவர் தம் மகனுக்கு குப்பன் என்று பெயரிட்ட போதிலும், மற்றவர் அவரை குப்புச்சாமி என்றே அழைத்து வந்தனர்.
குப்புச்சாமி தனது தொடக்கக்கல்வியை புளியமங்கலத்தில் கற்று வந்தார். 
அவரின் தமக்கையாருக்கு குழந்தைப்பேறு இல்லாத நிலையில் பத்துவயது நிரம்பிய குப்புச்சாமியை வளர்க்க விரும்பினார். அவர் விரும்பிய படி குப்புச்சாமி தமக்கையார் வசித்த சென்னை புரசைவாக்கத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

1908இல் குப்புச்சாமி அங்குள்ள பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்ததோடு, தேர்வுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.
இதைக் கண்டு இன்புற்ற அவரின் தமக்கையார் எதிர்காலத்தில் குப்புச்சாமி பெரிய வழக்கறிஞராக வரவேண்டும் என்று விருப்பப்பட்டார். அவரின் கனவோ நிறைவேறவில்லை. கணவர் எதிர்பாராமல் இறந்துவிட, குடும்பம் வறுமையில் மூழ்கத் தொடங்கியது. இதன் காரணமாக குப்புச்சாமி படிப்பைக் கைவிட்டு தச்சுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
1914இல் இளமையில் கல்வி கற்க முடியாத நிலையை எண்ணி வருந்திய குப்புச்சாமிக்கு இரவுப் பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இரவுப் பள்ளியை டி.என்.சேஷாசலம் ஐயர் என்பவர் கல்வி இடை நிற்றல் மாணவர்களுக்காக நடத்தி வந்தார். அப்பள்ளியில் குப்புச்சாமி சேர்த்துக் கொள்ளப்பட்டார். டி.என்.சேஷாசலம் ஐயர் சிறந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; சிறந்த தமிழுணர்வாளர்; ஆங்கிலம், தமிழ், வடமொழியில் புலமை மிக்கவர். இவரின் தமிழுணர்வும் குப்புச்சாமியின் தமிழார்வமும் இரவுப்பள்ளியில் ஒன்றாய்க் கலந்தது.
தமிழ்மொழி மேம்பாட்டுக்காக ஐயர் "கலாநிலையம்" எனும் இலக்கிய ஏட்டை நடத்தி வந்தார். அவர் அவ்வேட்டின் பொறுப்பு முழுவதையும் குப்புச்சாமியிடம் ஒப்படைத்தார். அவ்வேடு தொடர்ந்து வெளிக்கொணர நிதி தேவைப்பட்டதால்
மாணவர்கள் மத்தியில் "கலாநிலையம்" பெயரிலே நாடகம் தயாரிக்கப்பட்டு சென்னை, சிதம்பரம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் நடத்தப்பட்டது.

இந்நாடகத்தில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு " தமிழ் நாடகக் கலைத் தந்தை" சங்கர தாஸ் சுவாமிகள் பயிற்சியளித்தார். இந்த நாடகத்தில் பெண் வேடமிட்டு குப்புச்சாமி சிறப்பாக நடித்தார். இவரின் நடிப்பைக் கண்டு பிரபல நாடக நடிகர் கிட்டப்பா வியந்து பாராட்டினார். நாடகம் மூலம் கலாநிலையப் பணிகள் பலரின் பாராட்டைப் பெற்றபோதிலும், நிதியுதவி கிடைக்கப் பெறாததால் நின்று போனது.
இதற்கிடையில், 1922-இல் தமது இருபத்தைந்தாம் வயதில் கமலாம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தமிழ் மீதான ஈடுபாடு கூடியதே தவிர குறையவில்லை.
தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களை பிழையறக் கற்றுக் கொள்ளவும், இலக்கண, உரை விளக்க நூல்களில் சிறப்பெய்திடவும் விரும்பினார். அதன் பொருட்டு "இலக்கணப்புலி" என்று அறியப்பட்ட தமிழறிஞர் கா.ரா.கோவிந்த சாமி முதலியார் என்பவரிடம் போய்ச் சேர்ந்தார். இவரோடு தமிழறிஞர் சிந்தாமணி மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை என்பவரும் இணைந்து படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தச்சுத் தொழிலாளி மிகுந்த ஆர்வத்தோடு இலக்கணம் கற்பதில் சிறந்து விளங்குவதைக் கண்டு வியப்புற்ற கா.ர. கோவிந்தசாமி முதலியார் அவர்கள் பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக நியமனம் செய்யப் பரிந்துரைத்தார். அங்கு பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்து வந்த குப்புச்சாமிக்கு இரத்த அழுத்த நோய் கூடி, பற்கள் கொட்டி விடவே ஆசிரியப் பணியை கைவிட்டார்.
இந்நிலையில், தந்தையார் இறந்து விடவே, அவரின் உறவினர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி "மணியம்" வேலையை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று குப்புச்சாமியும் சென்னையிலிருந்து தம் பிறந்த ஊரான புளிய மங்கலத்திற்கு இடம் பெயர்ந்தார்.
1934இல் ஊர்த்தலைவர் பொறுப்பை ஏற்று திறம்பட பணியாற்றியதால், அவ்வூர் மக்கள் "மங்கலங் கிழார்" என்று அழைக்கலாயினர். இப்பெயரே நாளடைவில் எல்லோரும் அழைக்கும் பொதுப் பெயராக நிலைத்து நின்றது.
மங்கலங்கிழார் தனக்கு கல்வி புகட்டிய டி.என். சேஷாசல ஐயர் வழியில் புளியங்குளத்தில் இரவுநேரப்பள்ளியைத் தொடங்கி தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இராணிப்பேட்டை சின்மயானந்தா அடிகளோடு தொடர்பு கிடைத்ததால் துறவு நிலைக்கு மாறினார். அதுமுதல் வெண்மையான வேட்டியும், காவி ஜிப்பாவும், கதர் சால்வையும் அணியத் தொடங்கினார். அவரின் புறத் தோற்றம் மாறினாலும் உளத் தோற்றம் மாறவில்லை. சித்தூர் மாவட்டம் முழுவதும் தெலுங்கு மொழி ஆதிக்கத்தால் தமிழ்மொழி அழியும் நிலைகண்டு அவரின் உள்ளம் குமுறியது. உடனடியாக அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் விழிப்புணர்ச்சியூட்டிட "அறநெறித் தமிழ்ச்சங்கம்" என்னும் அமைப்பை நிறுவினார்.
1939-இல் வளர்புரத்தில் முதல் அறநெறி தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக விரிவடைந்து குருவராயப்பேட்டை, அம்மையார் குப்பம் , மின்னல், நரசிங்க புரம், கீழ்ப்புத்தூர், மேல் புத்தூர், நாராயணவனம், சத்திரவாடி, சிந்தலப்பட்டடை, பொதட்டூர் பேட்டை, அத்தி மாஞ்சேரிப் பேட்டை, புதுப்பேட்டை, சுரைக்காய்ப் பேட்டை, மத்தூர், மத்தேரி முதலிய 16 கிராமங்களுக்கு கிளை பரப்பியது.
மங்கலங்கிழார் முயற்சியால் மேற்கண்ட ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டு நான்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அவைகள் ஆரம்ப வகுப்பு, ஒளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என அழைக்கப்பட்டன. முதலிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியம் கற்கும் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தினர்.
அறநெறிக் கழகம் மூலம் தமிழுணர்வு பெற்ற மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊரிலும் "மாணவர் மாநாடு" பெயரில் விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் தமிழறிஞர்கள் தொ.ப.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் ஆகியோர் பங்கு பெற்று தமிழ் எழுச்சியூட்டினர்.
அது போல், தமிழ் தழைக்கப் பாடுபட்ட சமயச் சான்றோர்களான திருஞான சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரருக்கும் "திருநாள்" பெயரில் விழா கொண்டாடப் பட்டது. அந்நிகழ்வுகளில் 'தமிழ்த்தென்றல்" திரு.வி.க., ச.சச்சிதானந்தம், " சைவப் பெரியார்" சச்சிதானந்தம் , தமிழ் அகராதி தந்த பாலூர் கண்ணப்ப முதலியார், முனைவர் மா.இராசமாணிக்கனார், தென்னிந்திய சீவரட்சகத் தலைவர் ஶ்ரீபால், மறைமலையடிகள் மகள் நீலாவதி அம்மையார் ஆகியோர் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்தினர். பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற திரு.வி.க. மங்கலங் கிழாரை "வித்தியானந்தர்" என்றே விளிப்பது வழக்கம்.
பல்வேறு விழாக்கள் நடத்தி மங்கலங்கிழார் செய்த தமிழ்த்தொண்டிற்கு நல்ல பலன் கிடைத்தது. சித்தூர் பகுதியில் தமிழ் படித்த பல்லாயிரக்கான மாணவர்கள் உருவானார்கள். பலநூறு மாணவர்கள் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று ஆசியர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அடுத்த கட்டமாக திருத்தணிகையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், பொதட்டூரில் தமிழாசிரியர் பயிற்சிப் பள்ளி என்று மங்கலங்கிழாரின் தமிழ்ப்பணி விரிவடைந்தது.
மங்கலங் கிழாருக்கு தமிழ்ப்பணி ஒரு கண்ணென்றால், 'தமிழ்மண் மீட்புப் பணி' மறு கண்ணாகும்.
சித்தூர் மாவட்டத் தோற்றத்திற்கு முன்பு இருந்த மக்கள் தொகை விவரம், வரைபடங்கள், கல்வெட்டு, இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றை சேகரித்தார். சித்தூர் குறித்து பல்வேறு செய்திகளை திரு.வி.க. மூலம் உறுதி செய்து கொண்டார். இதற்கிடையில், ம.பொ.சி.யின் "தமிழ்முரசு" ஏடு தமிழ் மாகாண உரிமை பற்றி எழுதி வந்ததையும் கண்ணுற்றார்.
1947ஆம் ஆண்டு வடக்கெல்லை கிளர்ச்சிக்காக ம.பொ.சி. உள்ளிட்ட தோழர்கள் திருவாலங்காடு வந்தபோது வரவேற்பு அளித்ததோடு உடன் சென்று தமிழர்களின் வடக்கெல்லைப் பகுதிகளை அடையாளங் காட்டினார்.
1949இல் திருத்தணிகையில் "தமிழ் வளர்ச்சிக் கழகம்" தொடங்கப்பட்ட போது அங்கு வந்திருந்த மங்கலங்கிழாருக்கு எல்லை மீட்புப் போராளிகள் தளபதி கே. விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், சித்தூர் அரங்க நாத முதலியார் ஆகியோரின் நட்பும் கிடைத்தது.
அதே ஆண்டில் "ஆந்திர கேசரி" என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் என்பவர் சென்னை ஆந்திரருக்கு உரியது என்று பேசி வந்தார். அப்போது ம.பொ.சி. ஒருங்கிணைப்பில் சென்னையில் "தமிழர் மாநாடு" கூட்டப்பட்டது. அந்த மாநாட்டிற்கு ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார். அதில் வடக்கெல்லை சார்பில் மங்கலங்கிழார் கலந்து கொண்டு சென்னை தமிழருக்கே என்று முழங்கினார்.
அத்தோடு நின்று விடாது, சித்தூர் ஜில்லா அறநெறித் தமிழ்ச் சங்கம் சார்பில், "தமிழ்ப் பெரு மக்களுக்கொரு வேண்டுகோள் " (சங்க வெளியீடு 1) என்ற பெயரில் வட ஆர்க்காடு தமிழ்ப்பகுதி பறிபோன வரலாற்றைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார்.
மற்றொன்றில், "தமிழ்நாட்டின் வடக்கு" என்று தலைப்பிட்டு (சங்க வெளீயிடு 2 ) விரிவாக வெளியிட்டார். அதில், சங்க இலக்கிய, இலக்கண, செய்யுள், புராண நூல்களிலும், கல்வெட்டுகளிலும் திருப்பதி வரை தமிழக எல்லை குறிப்பிட்டு இருப்பதை விளக்கினார்.
மேலும், தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆந்திரருக்கு தெலுங்கு மொழி கற்கும் வசதியும், காரமான உணவு சாப்பிடுவதற்கு தனி விடுதி வசதியும் அளிக்கப்படும் போது, விசாகப் பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் மட்டும் தமிழுக்கும், தமிழருக்கும் இடமில்லையே? ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்மண் மீட்புப் போராட்டத்தின் போது பின்வரும் முழக்கங்களை தானே கைப்பட எழுதி வெளியிட்டார். அது வருமாறு:
1. வேங்கடத்தை விட மாட்டோம். 2. சென்னை ராஜ்ஜியத்தின் வடவெல்லை திருப்பதி மலை 3. நகரி பிர்க்காவை சென்னையோடு சேர். 4. புத்தூர் பிர்க்காவை சென்னையோடு சேர் . 5. சித்தூர் தமிழ்ப் பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்க்காதே! 6. முன்னே எல்லையைப் பிரி- பின்னே நாட்டைப் பிரி 7. நமது ராஜ்ஜியம் சென்னை ராஜ்ஜியம் 8. நமது தலைநகரம்- சென்னை நகரம் 9. சென்னையோடு சேர்ந்து வாழ்வோம் 10. சென்னை நகரம் சமீபமானது 11. விஜயவாடா- வெகுதூரம் 12. ஐதராபாத்து- அதிக தூரம் 13. சென்னையை விட்டால் - பின்னால் கஷ்டம்.

1952 திசம்பர் இறுதியில் பிரதமர் நேரு ஆந்திரம் தனிமாநிலமாக பிரிக்கப்படும் என்றும், அதில் தமிழ் மாவட்டமான சித்தூரும் உள்ளடங்கும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து ம.பொ.சி. முயற்சியில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. அதில் மங்கலங்கிழார் உறுப்பினராக இருந்து தீவிரமாக செயல்பட்டார். 25.6.1953இல் 144 தடையை மீறி மறியல் நடத்தியதால் மங்கலங்கிழார் கைது செய்யப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார்.
வடக்கெல்லை பாதுகாப்புக் குழு கூட்டம் மீண்டும் 10.7.1953இல் சென்னையில் கூடி சித்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்கு பாதுகாப்பு வழங்கங் கோரி பிரதமர் நேருவை சந்திக்க முடிவெடுத்தது. இக் கூட்டத்தில் ம.பொ.சி., தளபதி விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், டி.எம்.திருமலைப் பிள்ளை, வேலூர் அண்ணல் தங்கோ ஆகியோரோடு மங்கலங்கிழாரும் பங்கேற்றார். இதுவே மங்கலங்கிழார் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வாகும்.
பொதட்டூரில் தமிழாசிரிரியர் பயிற்சிப் பள்ளி கட்டட வேலையில் தீவிரம் காட்டி வந்த நிலையில், மங்கலங்கிழாருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் பள்ளிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி 31.8.1953இல் காலமானார்.
மங்கலங் கிழார் எழுதிய நூல்கள் பத்துக்கும் மேற்பட்டவை. அவற்றுள் வடவெல்லை, தமிழ்நாடும் வடவெல்லையும், தமிழ்ப் பொழில், நளவெண்பா விளக்க உரை, இலக்கண விளக்கம், இலக்கண வினா விடை , நன்னூல் உரை ஆகியவை முதன்மையான நூல்களாகும்.
குறிப்புதவி:
1. தமிழக வரலாற்றில் மாத்தமிழர் மங்கலங்கிழார் - முனைவர் செ.உலகநாதன்
2. தமிழக வடக்கெல்லைப் போராட்டமும்- தணிகை மீட்சியும் -கோல்டன் ந.சுப்பிரமணியம்
3. தமிழ் வளர்த்த மாமுனிவர் மங்கலச் கிழார் - முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன்

நன்றி: 
வரலாறு அறிவோம், கதிர் நிலவன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
மாதமிருமுறை இதழ் ( 16-31, ஆகஸ்ட் 2017)

இக்கட்டுரை,தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 அக்டோபர் 16-31இதழில்  வெளிவந்தது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.