ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி வழக்கில் தமிழ்நாடு வாதம் மிகவும் பலவீனம் - பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி வழக்கில் தமிழ்நாடு வாதம் மிகவும் பலவீனம் முதலமைச்சர் தலையிடுவாரா? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வில் நடைபெற்று வரும் காவிரி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடும் வழக்கறிஞர்களின் வாதங்களும் குறுக்கீடுகளும் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் ஏன் புதிய அணைகள் கட்டித் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவில்லை என்றும், கடலுக்குத் தண்ணீர் வீணாகப் போகிறது என்றும் கர்நாடகம் முன்வைக்கும் குற்றச்சாட்டை அப்படியே – வினாவாகத் தமிழ்நாடு வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள். அதற்கு மீண்டும் மீண்டும் விடையளித்த தமிழ்நாடு தரப்பு மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, “தமிழ்நாடு சமவெளிப் பரப்பாக உள்ளது. எனவே அணைகட்ட முடியவில்லை” என்று கூறுகிறார். இருக்கின்ற அணைகளுக்கேத் தண்ணீர் இல்லை; புதிய அணைக்குத் தண்ணீர் ஏது என்று நம் வழக்கறிஞர்கள் பதில் கூறியிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காவிரியிலிருந்து மிகை நீர் கடலுக்குப் போகும் நிலைமை பெரும்பாலும் இல்லை. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய பங்கு நீரைக் கர்நாடகம் சட்டவிரோதமாகத் தேக்கிக் கொள்வதால், மேட்டூர் அணை நிரம்பி மிகை நீர் வெளியேறுவதில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டும், அதன் பின் 2013ஆம் ஆண்டிலும் தான் மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவாக வெறும் 20 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கடலுக்குப் போனது. 2013க்குப் பின் மேட்டூர் அணை நிரம்பவே இல்லை. கடந்த ஆண்டு மேட்டூரில் மிகவும் தண்ணீர் அளவு குறைந்துவிட்டதால் சாகுபடி செய்த நெற்பயிருக்குத் தண்ணீர் விட முடியாமல் பாதியிலேயே மேட்டூர் அணை மூடப்பட்டது. இப்பொழுது மிகமோசமாக 40 அடிதான் மேட்டூரில் தண்ணீர் உள்ளது. மொத்தக் கொள்ளளவு 120 அடி!

பருவமழையும் கர்நாடகம், கேரளம் போல் தமிழ்நாட்டில் அதிகமாகப் பெய்வதில்லை. தமிழ்நாடு மழை மறைவு மண்டலம். எனவே தண்ணீரே இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் புதிய அணைகளுக்கான தேவை எழவில்லை என்ற மறுப்பை உச்ச நீதிமன்றத்தில் கூறுவதற்கு மாறாக சமவெளியாக இருப்பதால் தமிழ்நாட்டில் அணை கட்ட முடியவில்லை என்பது சரியான மறுமொழி அல்ல!

தமிழ்நாட்டில் இப்பொழுது மொத்தம் 84 அணைகள் உள்ளன. தேவைப்பட்டால் புதிய அணைகள் கட்டலாம். ஆனால், இந்த அணைகளுக்கே இப்போது தண்ணீரில்லை என்பதுதான் உண்மை நிலை! மேட்டூர் அணை மழை நீரால் மட்டும் நிரம்புவதில்லை.

காவிரித் தீர்ப்பாயம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்குரிய நீர் ஒதுக்காமல் மிகவும் குறைவாக 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளது. இது இயற்கை நீதிக்குப் புறம்பானது; 250 ஆ.மி.க. (டி.எம்.சி.)க்கு மேல் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது தமிழ்நாடு அரசு. அந்தக் கோரிக்கையை இதுவரை தமிழ்நாடு வழக்கறிஞர்கள் எழுப்பாதது ஏன்?

தமிழ்நாடு அரசுத் தரப்பின் பலவீனமான வாதங்களைக் கண்டு கொண்ட கர்நாடகம், கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுக்கிறது. ஒருநாள் 132 ஆ.மி.க. (டி.எம்.சி.) தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என்கிறார்கள்; மறுநாள் 102 ஆ.மி.க.தான் தமிழ்நாட்டிற்குத் தர ஆணை இட வேண்டும் என்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லுமோ, கர்நாடகம் பேசும் வல்லடி வழக்கே நிலைத்து விடுமோ என்ற அச்சம் தமிழ்நாட்டில் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பொதுப்பணித்துறை செயலாளரும் இதையெல்லாம் கண்டு கொண்டு கவலைப்பட்டு, சரி செய்ய தலையிட்டதாகத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற வழக்கில் விவாதங்கள் நிறைவடையும் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு அரசின் கவனமற்ற, தலையீடற்ற போக்கை ஏற்கெனவே சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.

கடைசிக் கட்டத்திலாவது தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி வழக்கில் கவனம் செலுத்தி வல்லுநர் குழுவை அழைத்துக் கொண்டு தில்லி செல்வாரா? நம் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை வலுப்படுத்துவாரா என்ற கேள்வி இப்போது தமிழ் மக்களிடம் இருக்கிறது.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.