காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசு துரோகம் - வழக்கு விசாரணையை உடனே நிறுத்துக! நாளை திருவாரூரில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசு துரோகம் - வழக்கு விசாரணையை உடனே நிறுத்துக! நாளை திருவாரூரில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கின் நேற்றைய (17.08.2017) விசாரணையின் போது, கர்நாடகம் மேக்கேத்தாட்டில் அணை கட்டி காவிரி நீரைத் தடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பது, தமிழர்கள் தலையில் இடி விழுந்ததுபோல் வலியை உண்டாக்குகிறது!
காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதைக் கைவிட்டுவிட்டு, புதிதாக அணை கட்டி - அதற்கொரு கண்காணிப்புக் குழு அமைக்கிறோம் என உச்ச நீதிமன்றமும், இந்திய அரசும், கர்நாடகமும் தெரிவித்திருப்பது, தமிழர்களை ஏமாற்றும் வஞ்சகச் செயலாகும்!
இவ்வழக்கைத் தொடக்கத்திலிருந்தே ஏனோதானோவென நடத்தி வரும் தமிழ்நாடு அரசு, தமிழர்களின் பிரிதிநிதியாக வாதிடாமல், கர்நாடகம் மற்றும் இந்திய அரசுத் தரப்போடு இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளைக் காவு கொடுக்கும் அளவிற்கு விலைபோய்விட்டார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு குறித்த இவ்வழக்கு விசாரணையில், இப்போது மேகேத்தாட்டில் அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படுவது, வழக்கு விசாரணை திசைமாறி விட்டதையே காட்டுகிறது. மேலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள், தமிழ்நாட்டைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் தகுதியை (Representative Character) இழந்துவிட்டார்கள்.
எனவே, தமிழ்நாடு சார்பான விவாதம் இல்லாமலே, இந்த வழக்கு விசாரணை நடைபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், தமிழ்நாடு உழவர்கள் சார்பில், தகுதியான வழக்கறிஞரை நியமித்து தமிழ்நாட்டின் வாதங்களை எடுத்து வைக்க காவிரி உரிமை மீட்புக் குழு விரும்புகிறது.
எனவே, உடனடியாக உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இது குறித்து கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கு மின்னஞ்சல் வழயாக வேண்டுகோள் மடல்கள் அனுப்புமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்!
தமிழ்நாடு அரசின் இந்த துரோகத்தைக் கண்டிக்கும் வகையில் - நாளை (19.08.2017) – திருவாரூர் வரும் தமிழ்நாடு முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். அதில் மண்ணின் மக்கள் என்ற உரிமையோடும், தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டுமென்ற அவசரத்தோடும் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Related

பெ. மணியரசன் 1340858851626053057

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item