காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கிட உச்சநீதிமன்றத்தைத் தூண்டுகிறது மோடி அரசு! பெ. மணியரசன் கண்டன அறிக்கை!
காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கிட உச்சநீதிமன்றத்தைத் தூண்டுகிறது மோடி அரசு! காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டன அறிக்கை!
“தமிழ்நாட்டிற்கு மாதாமாதம் தண்ணீர் திறந்துவிடமுடியாது; ஆண்டுக்கு ஒரு தடவை திறந்துவிட ஆணையிட வேண்டும்; அந்த நீரின் அளவையும் குறைக்க வேண்டும்!” – கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலிநாரிமன் 19.09.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் கூறியவை இவை!
அதே நாளில் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு ஆதரவாக நரேந்திரமோடி அரசின் வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் கூறியவை இதோ:
“காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குழப்பங்கள் பல இருக்கின்றன. அதில் எங்களுக்கு 12 சந்தேகங்கள் இருக்கின்றன. அந்தத் தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால்தான் அது செயலுக்கு வரும். நாடாளுமன்றம் அந்த இறுதித் தீர்ப்பில் திருத்தங்கள், சேர்க்கைகள், நீக்கங்கள் செய்து கொள்ள அதிகாரமிருக்கிறது.” நாடாளும் பா.ச.க. அரசின் கருத்து இது!
மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் – 1956 இன் படி ஆற்று நீர்த் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குரிய அதிகாரம் பெற்றுவிடுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து மாற்றங்கள் செய்வார்களா?
நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளின் தீர்ப்பாயத் தீர்ப்புகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டனவா? இல்லை! அவற்றிலெல்லாம் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அத்தீர்ப்புகள் செயல்படுத்தப்படுகின்றன.
கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடுநிலையோடு செயல்பட வேண்டிய நரேந்திரமோடி அரசு இனப்பாகுபாடு பார்த்து தமிழ்நாட்டிற்கான நீதியைப் பறிக்கிறது. தமிழர் நெஞ்சாங்குலையில் குத்துகிறது. ஒரு “கட்டப் பஞ்சாயத்துத்” தீர்ப்பு வழங்கி தமிழ்நாட்டின் காவிரி உரிமையை வெட்டி சிதைக்க வேண்டும் என்று மோடி அரசு உச்சநீதி மன்றத்தைத் தூண்டுகிறது.
காவிரிப் பாசன மாவட்டங்களை வானம் பார்த்த புஞ்சை மாவட்டங்களாக மாற்றினால்தான் உழவர்கள் தங்கள் நிலங்களை விற்பார்கள். ஓ.என்.ஜி.சி, மற்றும் தனியார் நிறுவனங்கள், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன், பெட்ரோல், எரிவளி, நிலக்கரி முதலியவற்றை எடுத்துக் கொள்ளையடிக்க வாய்ப்பு உருவாகும் என்று மோடி அரசு கணக்குப் போடுகிறது.
காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மோடி அரசின் ஆதரவோடு ஜக்கிவாசுதேவ் களமிறங்கியுள்ளார். காவிரிக் கரை நெடுக மரம் நட்டால் மழை வரும், தண்ணீர் வரும் என்றும் – ஆறுகளை இணைத்தால் தண்ணீர் வரும் என்றும் அவர் கானல் நீர் பரப்புரை செய்து வருகிறார்.
ஆறு ஆண்டுகளாக குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஒரு போகச் சம்பா சாகுபடியும், தண்ணீரின்றி காய்ந்து சருகாகிப் போனது. நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வியுடன் உழவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சம்பாப் பயிர் காய்ந்து கருகியதைப் பார்த்து 250 க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
காவிரி நீர் நமக்கு 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர்; 20 மாவட்டங்களுக்கு குடிநீர்! இயற்கை நமக்கு வழங்கிய இன உரிமை காவிரி!
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாதத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அது மட்டும் போதாது தமிழ்நாடு அரசு நடுவண் அரசுக்கு உரியவாறு அழுத்தம் கொடுத்து நடுநிலைக்கு திருப்ப வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் காவிரியில் நமக்குள்ள சட்டப்படியான உரிமையை பெற அறவழிப் போராட்டங்களை மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களாக நடத்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
(பெ.மணியரசன்)
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
காவிரி உரிமை மீட்புக் குழு
Leave a Comment