ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு : தமிழ்நாட்டிலோ வெட்கக்கேடு! தோழர் க. அருணபாரதி – சிறப்புக் கட்டுரை!

வெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு : தமிழ்நாட்டிலோ வெட்கக்கேடு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி – சிறப்புக் கட்டுரை!
#90PercentJobsforTamils
சற்றொப்ப 90 இலட்சம் தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறை அலுவல கத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் பெருமளவில் வெளி மாநிலத்தவர்கள் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

எனவேதான், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து போராட்டங்களையும், பரப்புரை இயக்கங்களையும் நடத்தி வருகிறது. இப்போது கூட, வரும் 2017 அக்டோபர் 25 தொடங்கி 31 வரை, தமிழ்நாடெங்கும் பரப்புரை இயக்கத்தையும், 31.10.2017 அன்று சென்னை _- திருச்சியில் காத்திருப்புப் போராட்டத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்துகிறது.

தமிழ்நாட்டில் நாம் முன்வைக்கும் இக்கோரிக் கையை, இதிலுள்ள உண்மையையும் ஆழத்தையும் உணர்ந்து கொள்ளாமல் சிலர் “இனவெறி” என்று அவதூறு செய்து வருகின்றனர். ஆரியத்துவ அமைப்பு கள் மட்டுமின்றி, தமிழ்த்தேசியம் எனப் பேசிக் கொண்டிருக்கும் சிலரே அவ்வாறான அவதூறுப் பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங் களில் வெளி மாநிலத்தவர்க்கு சட்டப்படியான கட்டுப்பாடுகள் இருப்பது அவர்களுக்கெல்லாம் “இனவெறி”யாகத் தெரிவதே இல்லை!

இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளி மாநிலத் தவர்களுக்கு வரம்பு கட்ட, என்னென்ன சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கவே இக்கட்டுரை!

அரசமைப்பு சிறப்பு அதிகாரம்

1947 ஆகத்து 15 - இந்திய விடுதலைக்குப் பிறகும், தனிநாடுகளாக விளங்கிய பல நாடுகள் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டபோது, அவர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி, ஜம்மு காசுமீர் மாநிலத்திற்கு, உறுப்பு 370-இன்படியும், நாகாலாந்துக்கு உறுப்பு 371A-இன்படியும், அசாமுக்கு உறுப்பு 371B-இன்படியும், மிசோரத்துக்கு உறுப்பு 371G-இன்படியும், அருணாச் சலப்பிரதேசத்துக்கு உறுப்பு 371H-இன்படியும், மணிப்பூருக்கு உறுப்பு 371C-இன்படியும், சிக்கிமுக்கு உறுப்பு 371-Fஇன்படியும் சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப் பட்டுள்ளன.

மேகாலயா, திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்களில் பிற மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை உள்ளது. மேகாலயாவில், தனியார் தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலத்தவரை வேலைக்கு வைத்துக் கொள்ள அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், நாகாலாந்து பகுதிகளுக்கு, இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் உள் அனுமதி நுழைவுச் சீட்டு (Inner Line Permit - ILP) இல்லாமல், வெளி மாநிலத்தவர் இம்மாநிலத்திற்கு பணிக்கு மட்டுமல்ல, பயணம்கூட செய்ய முடியாது! இந்த உள் அனுமதி நுழைவுச் சீட்டு உரிமை தங்களுக்கும் வேண்டுமென மணிப்பூரில் பழங்குடியின மக்களின் போர்க்குணமிக்கப் போராட் டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண் டுள்ளன.

இவையெல்லாம் பழங்குடி மக்கள் பாதுகாப்புக்காக என்று காரணம் கூறினால், கோவாவுக்கு உறுப்பு 371-I-இன்படியும், ஆந்திரா - தெலங்கானா மாநிலங்களுக்கு உறுப்பு 371-D மற்றும் 371-Eஇன்படி எதற்காக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன?

தனிநாடாக இருந்து இந்திய ஒன்றியத்தில் இணைந்தவை என்பதால்தான் பழங்குடியினர் குறைவாக உள்ள ஆந்திரா, கோவா போன்ற மாநிலங்களுக்கு இந்திய அரசமைப்பில் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினால், 1962ஆம் ஆண்டு பிரஞ்சு அரசுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு இந்தியாவில் இணைந்த புதுச்சேரி மாநிலத்திற்கு இப்போதுவரை இந்திய அரசமைப்பில் சிறப்புரிமை வழங்கப்படாதது ஏன்? அது தமிழர்களின் மாநிலம் என்ற ஒரே காரணத்திற்காகவா?

ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சீமாந்திரா உருவாக்கப்பட்ட நிலையில், அதில் தெலங்கானாவைச் சேர்ந்தவர்ளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படாமலிருக்க, அம்மாநிலத் தலைமைச் செயலாளர் எஸ்.பி. தாக்கூர், 09.08.2016 அன்று அரசு அலுவலகங்களுக்குத் தனிச் சுற்றிக்கை அனுப்பினார். தெலங்கானாவில் ஆகத்து 2017 முதல் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர் களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என அறிவிக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 1959ஆம் ஆண்டு “கட்டாய வேலை வாய்ப்பு அலுவலகக் கட்டாய அறிவிப்புச் சட்டம் _- 1959’’ (The Employment Exchanges (Compulsory Notification Of Vacancies) Act, 1959) அந்தந்த மாநிலங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகவே அனைத்து வகை அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டுமென்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.

1960களில் மகாராட்டிரத் தலைநகர் மும்பையில் அங்கு காலங்காலமாக வசித்த வந்த தமிழ் மக்கள், தங்களுக்குரிய வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதாகக் கூறி சிவசேனைத் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மகாராட்டிர அரசியலில் தங்கள் மாநிலத்தின் கல்வி - வேலை வாய்ப்புகளில் தங்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள சட்டமியற்ற வேண்டுமென்ற முனைப்பு எழுந்தது.

ஒவ்வொரு ஆண்டும் புதுதில்லியில் மாநில முதல்வர்கள் மற்றும் பேராளர்கள் பங்கேற்போடு நடைபெறும் “தேசிய ஒருமைப்பாட்டு மன்றம்” (National Integration Council) கூட்டம் 1968ஆம் ஆண்டு சூன் 21 - 22 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில், இந்தச் சிக்கல் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முகாமையானது!

“இந்தியக் குடிமக்கள் இந்தியா முழுவதும் சென்று வாழ அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநிலத்தின் மக்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பங்கு அளிக்க நிறுவனங்களை வலியுறுத்திக் கேட்பதில் தவறில்லை” என அக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (தீர்மானம் III - Regional and Economic imbalances and Employment Opportunities to the Local Population, 22.06.1968).

தொழிலாளர் நலன்களுக்காக இந்திய அரசால், 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “தேசியத் தொழிலாளர் ஆணையம்”, பல்வேறு கட்ட ஆய்வு களுக்குப் பிறகு 1969 - ஆகத்து மாதம் தனது முதல் அறிக்கையை வெளியிட்டது. அதில், மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்க வேண்டுமென அவ்வாணையத்தின் பரிந்துரைகள் உறுதிபடக் கூறின. (பரிந்துரை எண்கள் 17, 18, 19, 20).

மகாராட்டிரம்

இதனையடுத்து, நாட்டிலேயே முதல் முறையாக மகாராட்டிரத்தில், 1968 நவம்பர் 5 அன்று, அம் மாநிலத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் 50 முதல் 80 விழுக்காடு வரை மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்க வேண்டுமென சட்டமியற்றப்பட்டது.

கர்நாடகா

அதன்பின், கர்நாடகாவில் 1986இல் கர்நாடக அரசு நியமித்த சரோஜினி மகிசி அறிக்கையின்படி, அம்மாநிலத்திலுள்ள இந்திய அரசு, தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில் 70 முதல் 100 விழுக்காடு வரை கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 1998 முதல், வெளி மாநிலத்தவர் விளை நிலங்களை வாங்கத் தடை விதித்து கர்நாடகத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

குசராத்

குசராத்தில், 1995 மார்ச் 31 அன்று நிறைவேற்றப் பட்ட குசராத் தொழிலாளர் துறை தீர்மானம், மண்ணின் மக்களுக்கு 85% வேலை வாய்ப்புகளை மாநில அரசு, இந்திய அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டுமென ஆணையிடுகிறது. இன்றைக்கும் அது செயலில் உள்ளது.
இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனம், குசராத்தில் கடந்த மே மாதம் (2017), 116 தொழிலாளர்களை பணியமர்த்தியபோது, அதில் 15 பேர்தான் குசராத்திகள்! எனவே, வேலை கிடைக்காத குசராத் இளைஞர்கள் அத்தேர்வுக்கு எதிராக வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில், குசராத் அரசு தன்னை இணைத்துக் கொண்டு, மண்ணின் மக்களுக்கே வேலை தர வேண்டும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது என 1995இல் இயற்றப் பட்ட தீர்மானத்தை முன்வைத்து வாதாடுகிறது. (காண்க: இந்தியன் எக்ஸ்பிரஸ், 09.05.2017).

இதற்கு முன்பு, கடந்த 2015இலிருந்து, குசராத் தொழிலாளர் துறை அமைச்சர் விஜய் ரூபானி மண்ணின் மக்களுக்கு வேலை அளிக்காத நிறுவனங்கள் கண்காணிக்கப்படும் என அறிவித்ததும், இச்சட்டம் சரிவர செயலில் உள்ளதா என 2016 சூன் மாதம் குசராத் சட்டப்பேரவையில் ஆய்வறிக்கை வெளியிட்ட போது, தனியார் தொழிற்சாலைகளில் சற்றொப்ப 92 விழுக்காட்டினர் குசராத்திகளே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்க செய்திகள்!

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில், ஜோதிபாசு தலைமையில் இடதுசாரிகளின் ஆட்சி நடந்தபோது, 1999ஆம் ஆண்டே மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க சட் டம் இயற்றப்பட்டது. 2009 பிப்ரவரியில், வங்காளிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என அம்மாநில இடதுசாரி அரசு அறிவித்தது.

இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்தில், 2003 சூலை முதல், அம்மாநிலங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள், அம்மாநிலத்தில் பின்தங்கியப் பகுதிகளில் 80 விழுக்காடும், மற்ற பகுதிகளில் 60 விழுக்காடும் மண்ணின் மக்களை வேலைகளில் அமர்த்தினால் மட்டுமே அரசுச் சலுகைகள் கிடைக்கும் என அம்மாநிலத் தொழில்துறை அமைச்சர் ஆர்.எல். தாக்கூர் அறிவித்தார்.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்டில், 2007 மே 6 அன்று, தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 70 விழுக் காட்டினருக்கு வேலை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுத் தலைமைச் செயலாளர் எஸ்.கே. தாசுக்கு அறிவுறுத்தினார், அம்மாநில முதலமைச்சர் பி.சி. கந்தூரி!

மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேசத்தில், 2009 திசம்பரில், பா.ச.க. முதலமைச்சர் சிவராஜ் சவுகான், “மத்தியப்பிரதேச மாநிலத்தவருக்கே வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்” என அறிவித்தார். 2010 அக்டோபர் முதல், அம்மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மண்ணின் மக்களுக்கே ஒதுக்க வேண்டுமென ம.பி. அரசு அறிவித்தது.

அரியானா

அரியானாவில், 2009 அக்டோபர் சட்டப்பேரவைத் தேர்தல் முதல், பா.ச.க., காங்கிரசு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் அரியானா மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பில் 90 விழுக்காடு வரை வேலை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
ஒடிசா

ஒடிசாவில், 2010 சூலை முதல் அங்குள்ள தொழிற்சாலைகள், கீழ்மட்டப் பணிகளில் 90 விழுக்காடும், அதற்கு மேலுள்ள பணிகளில் 60 விழுக்காடும், அதற்கும் மேலுள்ள மேலாண்மைப் பணிகளில் 30 விழுக்காடும் ஒரிசா மாநிலத்தவருக்கே அளிக்கப்பட வேண்டுமென அம்மாநில சுரங்க அமைச்சர் மனோஜ் அகுஜா அறிவித்து, அதை செயல்படுத்தி வருகின்றனர்.

கேரளா

கேரளாவில், 2013 ஆகத்து 25 அன்று மலையாளம் தெரிந்தோருக்கு மட்டுமே அரசு வேலைகளும், பிற சலுகைகளும் கிடைக்கும் என அம்மாநில காங்கிரசு அரசு ஆணை பிறப்பித்து, செயல்படுத்தியது. அதன்பின் வந்த இடதுசாரி அரசு, அதை பிற்போக்கு என்றோ இனவெறி என்றோ நீக்கவில்லை! தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில், 2015 பிப்ரவரி 25 முதல், மண்ணின் மக்களுக்கு 50% வேலை அளிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசத்தில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பா.ச.க. தனது தேர்தல் அறிக்கையில் அம்மாநிலத் தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலைகள் மண்ணின் மக்களுக்கே ஒதுக்க சட்டமியற்றப்படும் எனத் தெரிவித்தது. பல கட்சிகளும் அதை வலியுறுத்தியுள்ளன.

பீகார்

பீகாரில், 2016 சூலை முதல், லல்லு பிரசாத்தின் ராஷ்ட்டிரிய சனதா தளக் கட்சி, பீகாரின் கல்வி - வேலை வாய்ப்புகளில் 80 விழுக்காடு பீகாரிகளுக்கே வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் அக்கோரிக்கையை ஆதரித்தார். விரைவில் அதற்காக சட்டமியற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பா.ச.க.வும் அதை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட்

பழங்குடியின மக்கள் நிறைந்து வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பீகார், உ.பி. போன்ற வெளி மாநிலத்தவர் குடியேற்றம் காரணமாக - அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி அல்லாதவர்கள் முதல்வராகவேத் தேர்ந்தெடுக்கப்படும் அவலச்சூழல் நிலவுகிறது. 1932ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் பகுதிகளுக்குள் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற வேண்டு மென்ற கோரிக்கையுடன் பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டங்களைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில், 2017 சனவரி 28 முதல், அரசு வேலை வாய்ப்புகளில் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சரவை அளவில் முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பஞ்சாப்

பஞ்சாப்பில், 2017 சனவரி பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி அம்மாநிலத்தின் தொழிற்சாலைகளில் 80 விழுக்காட்டு வேலைகளை பஞ்சாபியருக்கே வழங்க வேண்டுமென அறிவித்தார். பல கட்சிகளையும் அதை வலியுறுத்தி வருகின்றன.

தில்லி

மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் குடியேறுவதால் தில்லியின் சூழல் கெடுகிறது என்றும், அதன் காரணமாகக் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன என்றும், புதுதில்லிக்குத் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த காங்கிரசுக்காரர் சீலா தீக்சித், “தேசிய ஒருமைப்பாட்டு மன்றக்” கூட்டத்தில் பலமுறை வெளிப்படையாகவே புகார் செய்துள்ளார். அண்மையில், கடந்த 2017 சூனில், தில்லிப் பல்கலைக் கழகத்தில் 85% இடங்கள் மண்ணின் மக்களுக்கே என தில்லி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவா

கோவாவில், 2017 அக்டோபர் 13 அன்று ஊடகத்தினரிடம் பேசிய தொழிற்துறை அமைச்சர் விஜய் சர்தேஷி, தனியார் வேலை வாய்ப்பில் கோவா மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்கும் என அறிவித்துள்ளார்.

இவையெல்லாம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசும், அரசியல் கட்சிகளும் செயல்படுத்தி வரும் சட்டங்கள்! மண்ணின் மக்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய சட்டங்கள் இல்லாத மாநிலங்களில், அவ்வாறு சட்டம் கொண்டு வரப்படும் என கட்சிகள் மக்களிடம் வாக்குறுதிகள் அளிக்கின்றன.

ஆனால், “மாநில உரிமைகளுக்காக” போர்க்குரல் எழுப்பும் மாநிலமாக சித்தரிக்கப்படும் தமிழ்நாடோ வந்தாரை மட்டுமே வாழவைத்துக் கொண்டுள்ளது! சொந்த மக்களை “இனவெறியர்கள்” என அவதூறு செய்பவர்கள் “முற்போக்காளர்களாகத்” தங்களைக் காட்டிக் கொள்ளும் அவலமும் இங்கு மட்டுமே நடக்கிறது!

தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே வேலை - வெளியாரை வெளியேற்று என 1991 முதல் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை, எந்தளவிற்கு சரியானது, சனநாயகத்தன்மை வாய்ந்தது என்பதை, இத்தனை மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களும் திட்டங்களும் நமக்கு உணர்த்துகின்றன.

எனவே, “தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை - வெளியாரை வெளியேற்று” என முழங்குவோம்! வீதிக்கு வருவோம்!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் 2017 நவம்பர் 1-15 இதழில் வெளியான கட்டுரை).
#90PercentJobsforTamils

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.