ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஓ.என்.ஜி.சி. வேட்டைக்காக நன்னிலத்தில் பொய் வழக்கு - இளைஞர்கள் சிறையிலடைப்பு! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

ஓ.என்.ஜி.சி. வேட்டைக்காக நன்னிலத்தில் பொய் வழக்கு - இளைஞர்கள் சிறையிலடைப்பு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிதாகக் குழாய்கள் பதிக்கக் கடந்த வாரம் சென்றபோது, அப்பகுதி மக்கள் தங்கள் நிலத்தடி நீர் பாழாகிவிடும், வேளாண்மை பாதிக்கப்படும், குடிநீருக்கும் சிக்கல் ஏற்படும் என்று கூறி குழாய்கள் பதிக்க வேண்டாம் என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதை மனத்தில் வைத்துக் கொண்டு, இன்று (08.11.2017) காலை, தங்கள் வீடுகளிலிருந்த அன்புச்செல்வன், இரவி, திலக், ஜானகிராமன் ஆகியோரை எரவாஞ்சேரி காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளார்கள். இவ்வழக்கில், பேராசிரியர் த. செயராமன் அவர்களை முதல் எதிரியாகச் சேர்த்துள்ளார்கள். மற்றும் உத்தமன், சுரேசு, உதயகுமார், அலாவுதீன் ஆகியோரையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளார்கள்.

இன்று காலை, ஏழரை மணிக்கு ஓ.என்.ஜி.சி. காவிரிப் பிரிவு துணைப் பொது மேலாளர் ஜோதீஸ் என்பவர் இவர்கள் மீது புகார் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளார்கள். இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 448, 186, 353, 506 மற்றும் குற்றவியல் திருத்தச் சட்டப் பிரிவு 7(1)(a) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றம்சாட்டியுள்ளார்கள். கலகம் விளைவித்தது, சட்டவிரோதமாக அடுத்தவர் இடத்தில் நுழைந்தது, அரசு அதிகாரிகளைத் தாக்கியது, குற்றச்செயல் மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட உண்மைக்குப் புறம்பான மற்றும் பிணை மறுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

அந்த இடத்தில் இல்லாத – அங்கு போராட்டம் எதிலும் கலந்து கொள்ளாத மயிலாடுதுறை பேராசிரியர் த. செயராமன் அவர்களை இவ்வழக்கில் தமிழ்நாடு காவல்துறை முதல் எதிரியாகப் பதிவு செய்திருப்ப திலிருந்து, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதக் குற்றச்செயல்களுக்கும் சதித் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடந்தையாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

தொடர்ந்து காவல்துறையை ஏவி, சனநாயக மற்றும் மனித உரிமைப் பறிப்புகளில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட பாய்ச்சல் நன்னிலம் பொய் வழக்கு! காவிரிப்படுகையை நாசமாக்கும் ஓ.என்.ஜி.சி.யின் சதித் திட்டத்திற்கு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தமிழ்நாடு அரசின் இச்செயலை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அதை நஞ்சு மண்டலமாக்கும் ஓ.என்.ஜி.சி. மற்றும் பெருங்குழும கனிம வேட்டைக்கு திறந்து விடுவதும், அந்நிறுவனங்களுக்குப் பாதுகாப்புப் படையாக செயல்படுவதும் மக்கள் விரோதச் செயல்களாகும்!

எரவாஞ்சேரியில் போடப்பட்ட பொய் வழக்கைக் கைவிட்டு, சிறையிலுள்ளவர்களை விடுதலை செய்து, எரவாஞ்சேரி மக்களுடைய குறைகளைக் கேட்டறிய உடனடியாகத் தலையிடுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.