குமரிப்புயல் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் - இந்திய அரசு பாகுபாடு காட்டுகிறது! தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டுகிறது! நேரில் கண்டபின் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
குமரிப்புயல் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் - இந்திய அரசு பாகுபாடு காட்டுகிறது! தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டுகிறது! நேரில் கண்டபின் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
குமரி மாவட்டத்தையும் கடலையும் வேட்டையாடிய ஒக்கிப் புயலில் மனித உயிர்களையும் உடைமைகளையும் இழந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும், நேரில் கண்டறிந்த அடிப்படையில் ஆட்சியாளர்களுக்குக் கோரிக்கைகள் முன்வைக்கவும் 12.12.2017 அன்று நானும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் தமிழ்மணி, மேரியம்மா ஆகியோரும் அங்கு சென்றோம்.
சின்னத்துறைத் தேவாலயத்திடலில் பெருந்திரளாகக் கூடி, அதேவேளை அமைதியுடன் அமர்ந்திருந்த மக்களிடையே அமர்ந்து இழப்புகள் குறித்துக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
சிறிது நேரத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் அவர்களும் அவ்வியக்கத் தோழர்களும் மக்களைச் சந்திக்க அங்கு வந்தார்கள்.
நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்துறைத் தேவாலயத் திடலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தூத்தூர் ஜூட் கல்லூரி வளாகத்தில் பேராயர் பங்குத் தந்தையர் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்கள் வாங்கப்போகிறார் என்ற செய்தி வந்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் கூடியுள்ள இங்கு வந்து முதலமைச்சர் நமக்கு ஆறுதல் கூறமாட்டாரா என்ற குரல் அங்கு அழுது கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஆண்களிடமிருந்து எழுந்தது. தூத்தூர் கல்லூரிக்கு வரும்முன் முதலமைச்சர் புயலில் முற்றிலுமாக தரையில் விழுந்து சேதமடைந்த வாழைத் தோப்பு ஒன்றை கல்படி கிராமப்பகுதியில் நேரில் பார்த்து வந்தார் என்ற செய்தியும் அங்கு சிலர் சொன்னார்கள். ஏராளமான வாழைத் தோட்டங்களும் இரப்பர் மரத் தோட்டங்களும் ஒக்கி புயலால் தரையோடு சாய்ந்து சேதமான பேரழிவை முதல்வர் நேரில் பார்த்தது மிகச் சரியானது. ஆனால் எண்ணிக்கை தெரியாத வகையில் ஏராளமான மனித உயிரிழப்பிற்கு ஆளாகியுள்ள எங்களிடம் நேரில் வந்து ஆறுதல் கூறினால் என்ன என்று மக்கள் கேட்டார்கள். அவர்களின் இந்தக் கேள்வி ஞாயமானது!
முதலமைச்சர் நேரில் வந்தால் சின்னத்துறைத் திடலில் கூடியிருந்த மக்கள் அவரை அவமதிக்கும் வகையில் கூச்சல் போடுவார்களோ என்ற ஐயம் ஆட்சியாளர்களுக்கு இருந்திருந்தால் அது தவறு. அம்மக்கள் அனைவரும் பேராயர்க்கும் பங்குத் தந்தைமார்க்கும் கட்டுப்பட்டவர்கள். முதலமைச்சர் வருவதால், சின்னத்துறை போராட்டத் திடலில் வழக்கம்போல் ஒலி பெருக்கி வைத்துப் பேசுவதை தவிர்க்கும்படி காவல்துறை சொன்னதை ஏற்று அமைதி காத்தார்கள். நாங்கள் போகும் போது யாரும் முழக்கம்கூட எழுப்பவில்லை. அமைதியாகத் துயரங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். தங்கள் கணவனை, மகனை மற்றும் குடும்பத்தினரை இழந்த ஒரு சில தாய்மார்கள் ஒப்பாரி வைத்து அவ்வப்போது அழுது கொண்டிருந்தார்கள்.
நாங்கள் பார்த்த இடங்களில் எல்லாம் மீனவ மக்களின் கோரிக்கையாக இருந்தது நிவாரணத் தொகை அல்ல! நடுவண் அமைச்சர்களும் தமிழ்நாடு முதலமைச்சரும் அமைச்சர்களும் நேரில் வந்து மீனவ கிராமங்களில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி கடலில் மிதக்கும் பிணங்களையும் எங்கோ ஒதுங்கி உயிர் வைத்துக் கொண்டுள்ள மீனவர்களையும் மீட்க போர்க்கால ஆற்றலோடு அக்கறையோடு விரைந்து செயல்படவில்லையே என்பதுதான் அவர்களின் குறையாகவும் குமுறலாகவும் இருந்தது.
காணாமல் போனவர்களில் பலரும் ஒரே படகில் கூட்டாக சென்றவர்கள். அதிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்! சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்பவருக்கு 3 மகள்கள் – ஒரே மகன். தற்போது, செல்வராணியின் கணவர், அவரது மகன், அவரது இரு மருமகன்கள் என அக்குடும்பத்தின் ஆண்கள் அனைவரையுமே கடலில் இழந்துள்ளனர். தங்கள் வீட்டு ஆண்கள் கரை திரும்புவார்களா, தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்ற கேள்விகளோடு அவர்கள் போராட்டத் திடலில் அமர்ந்துள்ளனர். இதுபோல், நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் துயரத்தோடு போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.
நீரோடி, மார்த்தாண்டந்துறை, வள்ளவிளை, ரவிப்புத்தன் துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன் துறை, இராமன் துறை, புத்தன் துறை, மேல்மிடாளம், மிடாளம், குளச்சல், கடியப் பட்டணம், மணக்குடி முதலிய கிராமங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மீளாதவர்கள் அதாவது காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 602 என்றும் இவ்வூர்களில் இறந்து போனர்கள் எண்ணிக்கை 84 என்றும், மக்கள் தாங்கள் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் கூறினார்கள்.
சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டணம், ஜேப்பியார் ஆகிய நான்கு மீன்பிடித் துறைமுகங்களில் இருந்த அத்தனை படகுகளும் சேதமாகிவிட்டன என்றனர்.
காணாமல் போனவர்களை மீட்பதற்கு 250 கடல் மைல்கள் வரை சென்று தேடவேண்டும். மீனவர்களைத் தேடி அரசு அனுப்பிய சில கப்பல்களும் படகுகளும் 50 கடல் மைல்களுக்கு அப்பால் செல்லவில்லை என்றார்கள். மிகப்பெரிய அளவில் அயல்செலாவணியை ஈட்டித்தரும் ஆழ்கடல் மீன் பிடிப்போர் குமரி மாவட்ட மீனவர்கள் என்றும் கூறினார்கள். ஆனால், காணாமல் போனவர்களை மீட்பதற்கு ஆற்றல்மிகுக் கப்பல்களையும், படகுகளையும் இந்திய அரசு அனுப்பவில்லை. தமிழ்நாடு அரசும் அவற்றைக் கோரவில்லை!
அடுத்து, காணாமல் போன மீனவர்கள் ஏழு ஆண்டுகள் வரை காணாமல் இருந்தால்தான் அவர் இறந்ததாகத் தீர்மானிக்க முடியும். அதன்பிறகுதான் அவர்களுக்கு இழப்பீடு அரசு வழங்கும் என்று அதிகாரிகள் அம்மக்களிடம் கூறியுள்ளார்கள். இதைக் கேட்டு மிகவும் ஆத்திரப்படுகிறார்கள் அம்மக்கள். குற்றவியல் சட்டத்தில் சாதாரண காலங்களில் தனிமனிதர் காணாமல் போனால் ஏழு ஆண்டுகள் வரை வரவில்லை என்றால் அவர் இறந்துவிட்டதாக Man Missing (ஆளைக் காணவில்லை) என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்வார்கள். அதை கொடிய புயலில் மீன்பிடிக்கச் சென்று கடலில் காணாப் பிணமாய் மாறியவர்களுக்கு எப்படிப் பொருத்த முடியும்? எந்தப் பெண்ணும் இழப்பீடு பெறுவதற்காகத் தன் கணவர் அல்லது மகன் இறந்து விட்டதாகப் பொய் கூற மாட்டாள். பேரழிவுக் காலங்களில் விதிமுறைகளையும் பாராமல் உதவி செய்ய வேண்டிய நேரங்களில் ஏட்டுச் சுரைக்காய் சட்டம் பேசுவது எரிச்சலைத்தான் உண்டாக்கும்!
போராட்டத் திடலிலேயே நம்மை சந்தித்த, இனயம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர், தனது அண்ணன் மரியஜான் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போய் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்னமும் எங்களுக்கு துயர் துடைப்பு நிதியோ, காணாமல் போனதற்கான ஆவணமோ அளிக்கப்படவில்லை என்று கூறியது, நம்மை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது.
இறந்துவிட்டதாக அம்மக்கள் கூறும் 84 பேர்களுக்கான முறையான இறுதிச் சடங்குகளையும் தேவாலயங்களில் செய்துவிட்டார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு அதையெல்லாம் ஏற்கவில்லை.
இலட்சத்தீவு, மகாராட்டிரம், குசராத் போன்ற பகுதிகளில் கரை ஒதுங்கி உயிர் பிழைத்த மீனவர்களை மீட்டுக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் அம்மக்கள்.
கடலில் படகுகள் சேதமடைந்தது மட்டுமின்றி மூழ்கிப் போயும் உள்ளன. இவற்றையெல்லாம் கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அம்மக்கள், இந்தியத் தலைமை அமைச்சர் அவரது டிவிட்டரில்கூட எங்கள் மக்களின் உயிரிழப்பிற்கு ஓர் ஆறுதல் கூறவில்லையே என்கிறார்கள்.
பா.ச.க. ஆட்சியாளர்கள் பாகுபாடு காட்டும் அரசியல் நடத்தி வருகிறார்கள். எனவே தமிழர்களாகவும் கிறித்தவர்களாகவும் உள்ள அம்மீனவ மக்களின் துயர் துடைப்புப் பணிகளில் பேரார்வம் காட்டாதது புரிகிறது. ஆனால் நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான பொன். இராதாகிருட்டிணன் அவர்கள் மீனவக் கிராமங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
பா.ச.க.வின் பாகுபாட்டு அரசியலுடன் மேலும் நடுவண் ஆட்சியாளர்களை ஆத்திரப்படுத்தியிருப்பது அம்மீனவ மக்கள் இனையம் துறைமுகத்திட்டத்தை எதிர்த்துப் போராடியது என்பதும் புரிகிறது.
ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் பேரழிவு நடந்த பன்னிரெண்டாம் நாள்தான் - அதுவும் பலரும் விமர்சித்த பின்தான் குமரி மாவட்டம் போயுள்ளார். அப்போதும் மீனவ மக்களின் கிராமம் ஒன்றுக்குச் சென்று இயல்பாக அம்மக்களைச் சந்திக்காமல் ஏற்பாடு செய்த பிரதிநிதிகள் சந்திப்பை ஒரு கல்லூரி வளாகத்திற்குள் நடத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளான தி.மு.க. – காங்கிரசுத் தலைவர்கள் இதுவரை மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் ஆறுதல் கூறாதது சரியல்ல!
மாறாகக் கேரள முதலமைச்சர் பினராயி விசயன் ஒக்கி புயலில் உறவுகளை இழந்து கதறிய கேரள மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் களத்தில் நின்று துயர் துடைப்புப் பணிகளை மீட்புப் பணிகளைப் புயல் வேகத்தில் முடுக்கிவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கேரளாவில் சேர்க்கப்பட்டிருந்து மொழிவழி மாநில அமைப்பின் போது ஐயா நேசமணி உள்ளிட்ட தலைவர்களும் தொண்டர்களும் போராடி 11 உயிர்களைப் பலிகொடுத்து நூற்றுக்கணக்கானோர் சிறை சென்று தாய்த்தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட மாவட்டம்!
ஆனால் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தொடர்ந்து தங்களைப் புறக்கணித்து வருகிறார்கள். எனவே எங்களை மீண்டும் கேரளாவுடன் இணையுங்கள் என்று சில இடங்களில் மீனவர்கள் குரலெழுப்பினர்.
நாங்கள் அவர்களிடம் உரையாற்றும்போது, தமிழ்நாடு ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்களோடு உள்ளார்கள். நாங்கள் உங்களோடு உள்ளோம். தமிழ்நாட்டு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உங்களுடன் உள்ளன. தமிழ்நாடு அரசையும் இந்திய அரசையும் மீட்புப் பணிகளில் விரைந்து செயல்பட வைப்போம். இழப்பீடும் கேரளத்தைப் போல் கிடைக்கச் செய்வோம். எனவே கேரளத்துடன் இணைவோம் என்ற குரலை எழுப்பாதீர்கள். அங்கு சமத்துவமும் சமநீதியும் கிடைக்காமல் இனப்பாகுபாடு காட்டப்பட்டதால்தான் போராடித் தாய்த் தமிழ்நாட்டுடன் உங்கள் முன்னோர்கள் இணைந்தார்கள் என்பதை நினைவூட்டினோம்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு குமரி மாவட்ட மக்களுக்கான புயல் துயர் துடைப்புப் பணிகளையும் மீட்புப் பணிகளையும் விரைந்து செய்ய வேண்டும்.
புயல் பேரழிவு போன்ற காலங்களில் போர்க்கால அவசரத்துடன் மீட்புப் பணிகள் செய்வதும், இழப்பீடு வழங்குவதும் இன்றியமையாக் கடமையாகும். இருக்கிறாரா இறந்துவிட்டாரா என்பதை ஏழாண்டுக்குப் பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்பது மனிதப் பண்பன்று!
இந்திய அரசு, இப்பேரழிவை “தேசியப் பேரிடர்” என்ற வகையில் சேர்க்க முடியாது என்று கூறுகிறது. இதன் பொருள், தமிழ்நாட்டு மீனவர்களும், விவசாயிகளும் இன்னும் அதிகமான உயிரிழப்பிற்கும், பொருளிழப்பிற்கும் ஆளாகியிருக்க வேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? உடனடியாக, குமரி மாவட்ட புயல் பாதிப்பை பேரிடர் பாதிப்பாக இந்திய அரசு ஏற்கும் வகையில், தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment