”வெளி மாநிலத் தொழிலாளர்களை வெளியேற்றுவது சரியா ?” தமிழ்த்தேசியப் பேரியக்கத் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக்கட்டுரை!
”வெளி மாநிலத் தொழிலாளர்களை வெளியேற்றுவது சரியா ?” தமிழ்த்தேசியப் பேரியக்கத் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக்கட்டுரை!
1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாளுக்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குள் வந்தவர்கள் அனைவரும் “வெளியார்” என வரையறுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், தமிழ்நாட்டுத் தொழில் - வணிகம் - வேலை - கல்வி ஆகிய அனைத்து வாழ்வுரிமைகளும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடந்த கால் நூற்றாண்டாக கொள்கை வழிப்பட்டக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகிறது.
தமிழ்நாட்டுத் தொழில் - வணிகம் அனைத்தும் மார்வாடிகள் மற்றும் மலையாளிகள் ஆதிக்கத்திற்கு உட்பட்டு வருவதை சுட்டிக்காட்டியபோது, இந்தியத் தேசியவாதிகள் மட்டுமின்றி, தமிழின உரிமையில் அக்கறையுள்ள “முற்போக்காளர்கள்”கூட முதலில் எதிர்த்தார்கள்.
“மார்வாடிகள் மட்டுமா சுரண்டுகிறார்கள்? தமிழ் முதலாளிகள் சுரண்டவில்லையா?” என “வர்க்கக் குதர்க்கம்” பேசினார்கள். அதன் வழியாக அனைத்திந்தியப் பெருமுதலாளிகளில் மிகப்பெரும்பாலோர் அயல் இனத்தவராக இருப்பதை குறிப்பாக மார்வாடி - குசராத்தி சேட்டுகளாக இருப்பதை மறைத்தார்கள்.
நமது இயக்கத்தின் தொடர் விவாதங்கள் - போராட்டங்கள் மற்றும் புறநிலை மெய்மைகள் வலுவந்தமாக அவர்களின் கண்களைத் திறந்தன. மார்வாடி முதலாளிகளை எதிர்க்கலாம் என்று ஒருபடி இறங்கிப் பேசத் தொடங்கினார்கள். ஆயினும் அவர்கள் யாரும் மார்வாடி முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து, இன உரிமைப் போராட்டம் எதையும் சொந்தமுறையில் நடத்தவில்லை.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு, தொடர்ந்து எடுத்துக்காட்டி வருவதுபோல், வெளியார் சிக்கல் என்பது, ஒருபுறம் தமிழர் வாழ்வுரிமைச் சிக்கல், மறுபுறம் தமிழர் தாயக உரிமைச் சிக்கல் ஆகும்!
இவை இரண்டு வழிகளில் நிகழ்கின்றன. ஒன்று, தமிழ்நாட்டுத் தொழில் - வணிகம் ஆகியவற்றை கைப்பற்றும் வேற்று இன முதலாளிகள், தொழில் வணிகத்தோடு தமிழர் நிலங்களையும், மனைகளையும் வாங்கிக் குவிக்கிறார்கள். நிலத்தை இழக்கும் உரிமையாளருக்கு அது நில இழப்பு, ஆனால், ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கு அது தாயக இழப்பு!
தமிழர் வாழ்வுரிமைக்கும், தமிழர் தாயகத்திற்கும் இந்த வழியில் ஆபத்து வருவதை மேற்சொன்ன “முற்போக்காளர்”களும் ஒருகட்டத்தில் ஏற்றுக் கொண்டார்கள்.
வெளியார் ஆக்கிரமிப்பின் இன்னொரு வடிவம், தமிழ்நாட்டில் வெளி மாநில மக்கள் தொகைப் பெருக்கம் ஆகும்! இந்த வழியிலும் தமிழர் வாழ்வுரிமையும், தமிழர் தாயகமும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1956 நவம்பர் 1க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்த வெளி மாநில முதலாளிகள் மட்டுமின்றி, வெளி மாநில மக்களும் - அவர்கள் உழைப்பாளர்களாக இருந்தாலும் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
வெளி மாநில முதலாளிகளை வெளியேற்றலாம் என்று ஏற்றுக் கொண்ட “முற்போக்காளர்கள்”, வெளி மாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்களை வெளி யேற்றக் கூடாது -_ அவர்களைத் தடுக்கக் கூடாது என்று வாதிட்டார்கள். இது “இனவெறி” என்றும் பட்டம் சூட்ட அவர்கள் தவறவில்லை! “பாசிசத்தின் கரு இதில் இருக்கிறது” என்று திறனாய்வு செய்த “முற்போக்கு” அறிவாளர்கள் இங்கு உண்டு!
சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில், வடநாட்டிலிருந்து வரும் ஒவ்வொரு தொடர் வண்டியிலும் நாள்தோறும் தொகை தொகையாக வந்திறங்கும் வெளி மாநிலத் தொழிலாளிகளைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ள யாருக்குமே நெஞ்சம் பதறும்! ஆனால், இந்த “முற்போக்காளர்கள்” இவ்வாறு “உணர்ச்சிவசப் படாமல்” நிதானமாக சிந்தித்து, “வர்க்கத்” தீர்ப்பு எழுதி வருகிறார்கள்.
பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத் தொழி லாளர்கள் வந்து குவிவது, இரண்டு வகையில் தமிழ்நாட்டுக்கு ஆபத்தானது! ஒன்று, இவ்வாறு வந்து குவியும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறை கூலிக்கு எந்த சட்ட வரைமுறையும் இல்லாத வகையில் வேலை செய்வதற்கு அணியமாக வருபவர்கள் ஆவர். இவர்கள் மிகை எண்ணிக்கையில் உழைப்புச் சந்தையில் குவிவது, தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும் வேலை நிலைமையையும் ஊதியத்தையும் மிகக்கடுமையாக பாதிக்கும்! அவ்வாறு பாதித்து வருவது, அன்றாடம் நாம் சந்திக்கும் பட்டறிவு உண்மை!
மேற்குலக நாடுகளில் பின்தங்கிய நாடுகளிலிருந்து, காலனிய நாடுகளிலிருந்து குவிக்கப்பட்ட தொழி லாளர்கள், உபரி உழைப்பாளர்களாக (Surplus Laborers) இருந்து, அந்தந்த மண்ணின் தொழிலாளர்களின் ஊதியத்திற்கும், வேலை நிலைமை மேம்பாட்டிற்கும் பெரும் சவாலாக இருந்ததை கடந்த நூற்றாண் டிலேயே மார்க்சிய மூலவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக, “உலகமயம்” என்ற பெயரால் பன்னாட்டு முதலாளிய வேட்டை கோலோச்சத் தொடங்கியதற்குப் பிறகு, இந்தச் சிக்கல் தீவிரம் பெற்றது. இது பற்றி உலகமய வேட்டையை எதிர்த்த போராட்டங்களுக்குத் துணை நிற்கும் இடதுசாரி அறிவாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, நவோமி கிளின் அம்மையார் (Naomi Klein) “மண்ணில் வேர் கொண்ட மக்கள் புதிய தாராளமய முதலாளியத்திற்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறார்கள். ஏனென்றால், இவர்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. தங்கள் மண்ணைப் பற்றிய கனவு இருக்கிறது. எனவே, உலகமயப் பெரு முதலாளிகள் மண் கடந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களை அதிகம் அமர்த்திக் கொள்கிறார்கள். உழைப்புக்கான கூலியை மிகமிகக் கீழாக வைப்பதற்கு, புலம் பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பயன்படுகிறார்கள்’’ என்று கூறுவது கவனம் கொள்ளத்தக்கது. (நவோமி கிளின், 2010). நவோமி கிளின் அம்மையாரை “இனவெறியர்” என்றோ, “இனவாதி’’ என்றோ யாரும் சொல்வதில்லை!
இன்று வாழும் மார்க்சியர்களில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒருவரான டேவிட் ஹார்வி (David Harvey), புலம் பெயர் தொழிலாளர்கள் சிக்கல் பற்றி கூறுவது இன்னொரு சான்றாகும்.
“முதலாளிய அமைப்பிற்குப் புலம் பெயர் தொழி லாளர்களின் பயன்பாடு என்பது முகாமையாக தொழிலாளர்களின் கூட்டுபேர மேலாண்மையை உடைத்து நொறுக்குவதில் இருக்கிறது. தொழிலாளர் களின் கூட்டுபேர ஆற்றலை புலம் பெயர் தொழி லாளர்கள் பெருமளவுக்கு சிதைக்கிறார்கள்” என்கிறார் டேவிட் ஹார்வி. (Seventeen Contradictions and the End of Capitalism, 2014).
தமிழ்நாட்டில் இதைக் கண் முன்னாலேயே பார்த்து வருகிறோம். இருப்பவர்களிலேயே வெளி மாநிலத் தொழிலாளர்கள்தான், அதிகளவு சுரண்டப்படு கிறார்கள், மிகக்குறை கூலித் தொழிலாளர்களாக அவர்கள் கிடைக்கிறார்கள் என்பதனால், அவர்கள் மீது இரக்கம் கொள்வது வேறு! அச்சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிமுறை என்பது வேறு!
எடுத்துக்காட்டாக, நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யக்கூடிய பணிகளையெல்லாம் குறைகூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து செய்யும் “காண்ட்டிராக்ட் மயம்” தமிழ்நாட்டிலும் பெருகி வருகிறது. இதுவும் நிரந்தரத் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தை மேலெழும்ப விடாமல், பார்த்துக் கொள்ளும் காரணியாக இருக்கிறது. தொழிற் சங்கங்களின் கூட்டுபேர ஆற்றலை காண்ட்டிராக்ட் மயமும் பாதிக்கிறது.
இதனை வைத்து, இவற்றைத் தீர்ப்பதற்கு ஒரே வித அணுகுமுறையை மேற்கொள்ள முடியாது! காண்ட் டிராக்ட் மயமும் வெளியார் மயமும் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற காரணிகள் என்றபோதிலும், காண்ட்டிராக்ட் மயத்தை ஒழிப்ப தற்கும், வெளியார் மயத்தை ஒழிப்பதற்கும் ஒரே அணுகு முறையை மேற்கொள்ள முடியாது.
வெளி மாநிலத் தொழிலாளர்களை அமர்த்துவதில், தனியார் முதலாளிகளோடு இந்திய அரசும் போட்டி போடுகிறது. தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை வாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், 10 விழுக்காட்டிற்கு மேல் அந்நிறுவனங்களில் பணி யிலுள்ள வெளி மாநிலத்தவர் வெளியேற்றப்பட வேண் டும் என்றும் கோரி தொடர்ந்து போராடி வருகிறது.
மிக நீண்ட தாமதத்திற்குப் பிறகு, மேற்சொன்ன இரண்டு கோரிக்கைகளில் முதல் கோரிக்கையை மட்டும், அதாவது 90 விழுக்காடு வேலை வாய்ப்பு கோருவதில் மட்டும் ஒன்றுபடுவதாக இந்த “முற்போக்காளர்”களில் சிலர் இப்போது கூறுகிறார்கள். இப்போதும்கூட, 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று கோருவதில் அவர்கள் உடன்படுவ தில்லை!
வெளி மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் குவிவதில் உள்ள சிக்கலின் ஆழத்தை, இன்னும் இவர்கள் உரியவாறு புரிந்து கொள்ளவில்லை.
காண்ட்டிராக்ட் மயத்திலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு, வெளி மாநிலத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம்.
வெளியார் மயம் என்பது வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தையும், வேலை நிலைமையையும் கடுமையாகப் பாதிக்கிறது. இது மண்ணின் தொழிலாளர்களின் வாழ்வுரிமைச் சிக்கலாகும்! அதற்கு மேல் தொகை தொகையாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் வந்து குவிவது, தமிழர் தாயகத்தின் மக்கள் தொகை சமநிலையை (Demographic Balance) கடுமையாகக் குலைத்து, தமிழ்நாடு தமிழர் தாயகமாக நீடிக்குமா என்ற முதன்மையான சவாலை முன்னிறுத்துகிறது.
வெளியார் மயம் என்பது, பெரிதும் புதிய தொழில் வளர்ச்சி அடையும் பகுதிகளில்தான் நடக்கிறது என்பதை இந்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இந்திய அரசின் 2001 -2011ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கூடியுள்ள மக்கள் தொகையான 97 இலட்சத்து 46 ஆயிரம் பேரில், சற்றொப்ப 43 இலட்சம் பேர் வெளியார் ஆவர். சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்கள், திருப்பூர், கிருட்டி ணகிரி, கோவை, கடலூர், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய தொழில் வளர்ச்சி மாவட்டங்களில்தான் இந்த மக்கள் தொகை விகிதம் கூடுதலாகியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்தது. (விரிவிற்குக் காண்க : “தமிழர் தாயகமா வெளியார் வேட்டைக் காடா?’’, கி. வெங்கட்ராமன், பன்மைவெளி வெளியீடு).
இவ்வாறு குவியும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் மக்கள் தொகை வலிமையின் காரணமாக, தமிழ்நாட்டின் அடிப்படை உரிமை அரசியலிலும், அன்றாட அரசியலிலும் மிகப்பெரும் சிக்கலாக அமைவார்கள்.
வெளி மாநிலத் தொழிலாளர்களைத் தடுக்கக் கூடாது என்று பேசும் “முற்போக்காளர்கள்’’, இதே சிக்கல் பாலத்தீனத்தில் வரும்போதோ - தமிழீழத்தில் வரும் போதோ வேறு நிலை எடுக்கிறார்கள். பாலத்தீனத் தாயகத்தின் குறுக்கே இசுரேலிய அரசு, யூதக் குடியிருப்புகளை யூத உழைப்பாளிகளைக் கொண்டு உருவாக்கினாலும், தமிழீழத் தாயகத்தில் சிங்கள உழைப்பாளிகளைக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை நிறுவினாலும் சரியாகவே எதிர்க் கிறார்கள். அங்கு தடுக்கப்பட வேண்டியவர்கள் உழைப் பாளர்கள் என்றாலும்கூட, அவர்கள் குடியேறுவதைத் தடுக்க வேண்டும் என்பதில், சரியான நிலைபாட்டை மேற்கொள்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் வேறு மாநிலத் தொழி லாளர்கள் குவிவதைப் பொறுத்து, மாறான நிலைபாட்டை மேற்கொள்கிறார்கள். இது, மறைமுக மான ஏக இந்தியப் பார்வையே அன்றி, வேறல்ல!
கூர்ந்து நோக்கினால், தமிழ்நாட்டு மக்கள் தொகைச் சமநிலையைப் பாதுகாப்பதற்கு வெளி மாநிலத்தவருக்கு வரம்புகட்டுவது “மொழிவழி மாநில உருவாக்கச் சட்டத்திற்கு இசைவானதுதான்!
இந்தியாவில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது மனம்போன போக்கில் நிர்வாக வசதிக்காக அல்ல, பெரிதும் மொழிவழித் தாயகங்கள்தான் மாநிலங்களாக 1956 சட்டத்தின்படி வரையறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்மொழியைத் தேசிய மொழியாகக் கொண்ட மக்களுக்கு உரிய தாயகமாக - ஏற்கப்பட்டதன் அடையாளம்தான், மொழிவழியாகத் “தமிழ்நாடு” உருவானதாகும்.
வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிலை பெற்றால், மீண்டும் தமிழ்நாட்டு அரசியலில் அனைத் திந்தியக் கட்சிகள்தான் வலுப்பெறும்! அரைகுறையாக தமிழ்நாட்டு உரிமை பேசுவதற்குக்கூட தேர்தல் அரசியலில் வாய்ப்பிருக்காது.
வெளியார் தொகை அதிகரித்துவிட்டதால்தான், புதுச்சேரி ஒன்றியப் பகுதி மீண்டும் மீண்டும் அனைத்திந்தியக் கட்சியின் வசமே இருப்பதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டு அரசியல், “பதவி அரசியல்” வடிவத்தில்கூட, அங்கு உள்ளே நுழைய முடியாமல் தடுக்கும் தடையாக - அங்கு “வெளியார்மயம்” இருக் கிறது.
தாராளமயம் - உலகமய முதலாளிய வேட்டை ஆகியவற்றால் பெருகி வரும் காண்ட்டிராக்ட் மயத்தையும், வெளியார் மயத்தையும் ஒரே அணுகு முறையில் எதிர்கொள்ளக் கூடாது என்று நாம் சொல்வதற்கான காரணம் இதுதான்!
முதலாளியம், குறிப்பாகத் தாராளமய முதலாளியம் தான் இச்சிக்கல்கள் தீவிரப்படுவதற்கு முதன்மைக் காரணம் என்பதற்காக, தாராளமய முதலாளியம் ஒழியும் வரை கைகட்டிக் கொண்டிருப்போம் என்று யாரும் சும்மா இருப்பதில்லை. அப்படி பொத்தாம் பொதுவாக முதலாளியத்துக்கு எதிராக காற்றில் கத்தி சுழற்றும் வேலையை செய்துவிட முடியாது!
ஒவ்வொரு காலத்திலும் அன்றாட சிக்கல்களின் வழியாக தாராளமய முதலாளியத்தை எதிர்த்துப் போராடுவதின் வழியாகத்தான், உரிமைப் போராட் டத்தை நோக்கி மக்களைத் திரட்ட முடியும்.
காண்ட்டிராக்ட் முறையை ஒழித்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரத் தொழி லாளர்களாக நிலைப்படுத்துவதுதான், காண்ட்டிராக்ட் மயத்தை ஒழிப்பதற்கான வழி!
ஆனால், வெளியார் மயத்தை ஒழிப்பதற்கு, வரையறுக்கப்பட்ட வெளியார் அனைவரையும் அவர்கள் முதலாளிகளாக இருந்தாலும், தொழிலாளி களாக இருந்தாலும் வெளியேற்றுவதுதான் ஒரே வழி!
தமிழக மக்களின் உரிமையை மீட்பதற்கான திறவு கோல், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதில் இருக்கிறது! வெளியார்மயம் என்பது, தமிழ்த்தேசம் படைப்பதற்கான போராட்டப் பயணத்தில் மிகப்பெரும் தடைக்கல்லாக அமைந் துள்ளது.
தமிழர் தாயகமாக தமிழ்நாட்டைத் தக்கவைத்துக் கொள்ளாத நிலையில், தமிழர் உரிமையை உறுதிப் படுத்த எந்த வகையிலும் போராட முடியாது. சமத்துவ சமூகம் அமைப்பதற்கு, தேசம் அமைப்பது தவிர்க்க முடியாத தேவையாகும். தமிழர் தாயகமாக தமிழ்நாடு இல்லாமல், கலப்பின மாநிலமாகப் போனதற்குப் பிறகு “தமிழ்த்தேசம்” படைப்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகி விடும்!
எனவே, தமிழின உரிமையில் அக்கறையுள்ள “முற் போக்காளர்கள்” வெறும் தொழிற்சங்கவாதப் பார்வையில் தாழ்ந்துவிடாமல், தொழிலாளி வர்க்கப் பார்வைக்கும் அதற்குத் தேவையான தமிழ்த்தேசியப் பார்வைக்கும் உண்மையான தெளிவோடு முன்வர வேண்டும்.
இல்லையென்றால், ஒற்றை இந்தியத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்குமிடையில் குழம்பிக் கொண்டே இருக்க நேரிடும்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2017 திசம்பர் 1-15 இதழில் இக்கட்டுரை வெளியானது).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9841949462, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment