விசால் வேட்பு மனு: திரைப்படக் கவர்ச்சியால் முதலமைச்சர் திராவிடத் தலைவர்கள் விதைத்த சீரழிவு. தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
விசால் வேட்பு மனு: திரைப்படக் கவர்ச்சியால் முதலமைச்சர் திராவிடத் தலைவர்கள் விதைத்த சீரழிவு. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் விசால் சென்னை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
விசால் தேர்தலில் போட்டியிடுவதால் ஆட்சியை எதிர்க்கும் நிலை வரும், அதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று வலியுறுத்தி, அச்சங்கத்தினர் சங்க அலுவலகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் நடிகர் சங்கத்திற்கு “தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம்” என பெயர் மாற்றம் செய்ய முடியாது, அது “தென்னிந்திய நடிகர் சங்க”மாகவே தொடரும் என்று அறிவித்த விசால், நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிட ஆசைப்பட்டு, அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆவது, ஆட்சியைப் பிடிப்பது என்ற தொடர் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டும் அரங்கேறுவது ஏன்? இப்போது விசயகாந்து, இரசினிகாந்து, கமல், விசய், விசால் என நடிகர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவிக்கு வரிசை கட்டி நிற்கிறார்களே, அது எப்படி?
கேரளத்தைச் சேர்ந்த எம்ஜியார் தொழில் முறை நடிகர் என்ற வகையில், தமிழ்ப் படங்களில் நடித்து இந்தியாவிலேயே முதலமைச்சரான முதல் நடிகர் ஆவார். அடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் என்.டி. இராமாராவ் முதலமைச்சர் ஆனார்.
புராணக் கடவுளர்களின் வேடங்களில் நடித்து வந்த இராமாராவைத் தெலுங்கு மக்கள் “தேவுடு” – தெய்வம் என்றே வணங்கி வந்தனர். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசியலுக்கு வந்தார் அவர். ஆனால் அதே தெலுங்கு மக்கள் இராமாராவின் அரசியல் நிர்வாகம், தனிப்பட்ட ஒழுக்கம் ஆகியவற்றில் குறை கண்டு அவரைத் தோற்கடித்தனர். அவர் மீண்டும் எழவே இல்லை!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிரஞ்சீவி என்ற தெலுங்கு நடிகர், ஆந்திரத்தில் கட்சி தொடங்கினார். தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக அவரும், அவர் அக்கட்சியைச் சேர்ந்த சிலரும் வெற்றி பெற்றார்கள். ஆனால் கட்சி வளர்வதற்கான வாய்ப்புகள் அருகி வந்ததால், கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார் சிரஞ்சீவி.
தமிழ்நாட்டின் திரை – அரசியல் தாக்கத்தால் ஆந்திராவில் அரசியலில் இறங்கினார் நடிகை ரோசா! அங்கு அவர் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கிறார்.
எம்ஜியார் அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்ததைப் பார்த்த மலையாள நடிகர் பிரேம் நசீர் பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் கட்சி தொடங்கினார். அவர் அப்போது மலையாளத் திரை உலகின் “உச்ச விண்மீண்” – ஆம் “சூப்பர் ஸ்டார்”! அந்தத் திரைச் செல்வாக்கு அரசியல் செல்வாக்காக வளரவில்லை. கேரளத்தின் தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலர், கட்சியைக் கலைத்துவிட்டு மலையாளிகள் அனைவர்க்குமான பொது புகழ் மனிதராக நீடிக்குமாறு அவருக்கு வேண்டுகோள் விட்டனர். அவர்களின் அறிவுரையை ஏற்றுக் கட்சியைக் கலைத்து, அரசியலிலிருந்து வெளியேறினார் பிரேம் நசீர்.
கர்நாடகத்தில் கன்னட நடிகர் இராசுகுமார் (ராஜ்குமார்) மிகப்பெரும் செல்வாக்குப் பெற்றவர். கிட்டத்தட்ட எல்லாக் கட்சித் தலைவர்களும், கர்நாடக முதல்வர்களும் இராசுகுமாரிடம் வாழ்த்துப் பெறுவதைப் பேறாக (பாக்கியமாகக்) கருதுவார்கள். ஆனால் அவர் கடைசி வரைக் கன்னடர்களின் பொது முகமாக வாழ்ந்தார்; கட்சி அரசியலில் இறங்கவில்லை.
ஒரு வேளை, இராசுகுமார் கட்சி அரசியலில் இறங்கியிருந்தால் கன்னடர்களிடையே அவரின் செல்வாக்கு சரிந்திருக்கும்.
அனைத்திந்திய அளவில் திரைத்துறையின் உச்ச விண் மீனாக விளங்கியவர் இந்தி நடிகர் அமிதாப்பச்சன். அவர் காங்கிரசில் சேர்ந்து மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இடையில் அரசியலைவிட்டு விலகி விட்டார்.
தமிழ்நாட்டில் விதிவிலக்காக நடிகர் எம்ஜியார் தமது தனிப்பட்ட சில குணங்களால் தலைவராகி முதலமைச்சராகிவிட்டார் என்று வரையறுக்கவும் முடியவில்லை. கர்நாடகத்திலிருந்து தமிழ்த் திரைப்படத்துறைக்கு வந்த செயலலிதா, தனிப்பண்புச் சிறப்பு எதுவுமில்லாமல் - “புரட்சித்தலைவி” ஆகி, “நிரந்தர முதலமைச்சர்” என்று, இலட்சோபஇலட்சம் தமிழர்களால் புகழப்பட்டார்; வணங்கப்பட்டார்! அது எப்படி? எம்ஜியாருடன் நாயகியாக நடித்த ஒரே பின்புலம்தான் செயலலிதாவின் அரசியல் நுழைவுக்கு அடித்தளம்!
அதன்பிறகு நடிகர் விசயகாந்து, கட்சி தொடங்கிடத் துணிச்சல் கொடுத்தது எது? அவருடைய இலட்சியங்கள் என்ன? சிறந்த கொள்கைகள் என்ன? அவரைத் தலையில் தூக்கி வைத்துத் தமிழர்கள் கூத்தாடினார்களே அது எப்படி?
கர்நாடகத்திலிருந்து வந்து தமிழ் நடிகரான இரசினிகாந்தைக் கட்சி தொடங்கும்படி, தமிழர்களில் ஒரு சாரார் கெஞ்சிக்கிடக்கிறார்களே, அது எப்படி? காந்தியவாதியான(!) தமிழருவிமணியன் இரசினிகாந்து, தமிழ்நாட்டின் அரசியல் தலைமை ஏற்க வேண்டும், முதலமைச்சராக வேண்டும் என்று அழைப்பதற்காகவே திருச்சியில் ஒரு மாநாடு போட்டாரே, அது எப்படி?
அடுத்து, கமலகாசன், விசய், விசால் என நடிகர்கள் தமிழ்நாட்டில் மட்டும் அரசியல் கட்சி தொடங்க வரிசை கட்டி நிற்கிறார்களே, அது எப்படி? இந்தியாவின் வேறு மாநிலங்களில் இப்படி இல்லையே !
நடிகர்கள் தங்களின் திரைப்படக் கவர்ச்சியை மூலதனமாக வைத்து அரசியல் கட்சி தொடங்கக்கூடிய அளவிற்குத் தமிழர்களின் உளவியலை முதலில் ஊனப்படுத்தியது தி.மு.க.தான்!
தமிழ்நாட்டு விடுதலை உள்ளிட்ட திராவிட நாட்டு விடுதலையை முதன்மைப்படுத்தி 1950களில் தமிழ்நாட்டில் சூறாவளிப் பரப்புரையும், போராட்டங்களும் நடத்தித் தமிழர்களிடையே வளர்ந்த கட்சி தி.மு.க. அக்கழகத்தின் தலைவர் அறிஞர் அண்ணா. அவர் திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதிக் கொண்டே அரசியல் கட்டுரைகளையும் எழுதி வந்தார். அவர் தம் கொள்கைகளை மக்களிடம் பரப்பத் திரைப்படங்களையும், நடிகர்களையும் பயன்படுத்தினார். இவையெல்லாம் தவறல்ல!
மக்களைத் தம்பக்கம் ஈர்க்க மாயத் திரைக் கவர்ச்சியைப் பயன்படுத்தத் தொடங்கினார் அண்ணா! இதன் உட்பொருள் மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான்!
தணிக்கை இன்றி மூன்று திரைப்படங்கள் வெளியிட எனக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தால், தனித்திராவிட நாடு வாங்கி விடுவேன் என்றார் அண்ணா. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 1962இல் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடுமாறு எம்ஜியாரை அண்ணா கேட்டார். அவர் தமது திரைப்பட நடிப்பு வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறி தேர்தலில், போட்டியிட மறுத்துவிட்டார். பிறகு, நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரனைத் தேனியில் போட்டியிடச் செய்தார்கள். அவர் வென்றார்.
தலைவர்கள், பேச்சாளர்கள் பெரும்பாலோர்க்குப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளப் பட்டம் கொடுத்து, கவர்ச்சி காட்டும் உத்தியைத் தி.மு.க. கையாண்டது. அறிஞர், கலைஞர், நாவலர், நடமாடும் பல்கலைக்கழகம், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி போன்றவை அவர்கள் கொடுத்த பட்டங்களுள் சிலவாகும். சிறப்புப் பட்டங்கள் வழங்க முடியவில்லை அல்லது பொருத்தமாக அமையவில்லை என்றால், அவர்களின் ஊர்ப் பெயரை பெயருக்கு முன்னால் சேர்த்து விடுவார்கள். மற்றவர்களைவிட இவர்கள் சிறப்பானவர்கள் என்று காட்டுவதற்கான உளவியல் இது!
இந்தக் கவர்ச்சி உளவியல் உத்தியின் வழயில் எம்ஜியாருக்கு “புரட்சி நடிகர்” என்றும், எஸ்.எஸ்.ஆருக்கு “இலட்சிய நடிகர்” என்றும் பட்டம் கொடுத்தார்கள். என்ன புரட்சி, என்ன இலட்சியம்? எல்லாம் ஒரு கவர்ச்சிதான்!
1967-ஆம் ஆண்டு, பொதுத்தேர்தலுக்கு முன், 1966இல் சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க. தேர்தல் மாநாடு நடத்தியது. அதில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது. பொருளாளராக கலைஞர் கருணாநிதி இருந்தார். அப்போது தேர்தல் நிதி குறியீடு மொத்தமே பத்து இலட்ச ரூபாய்தான். ஆனால் பொருளாளர் கலைஞர் கருணாநிதி தன் கூடுதல் உழைப்பால் 12 இலட்ச ரூபாய் திரட்டி அளித்தார். நிறைவாக அண்ணா பேசும்போது, கலைஞரைப் பாராட்டிவிட்டு, எம்ஜியாரைப் பாராட்டினார்.
“தம்பி இராமச்சந்திரன், நான் எவ்வளவு தேர்தல் நிதி தர வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம், நீங்கள் தேர்தல் நிதி தர வேண்டாம். உங்கள் முகத்தைப் பார்த்தால் முப்பதாயிரம் ஓட்டு கூடுதலாகக் கிடைக்கும். உங்கள் பேச்சைக் கேட்டால் பத்தாயிரம் ஓட்டு கூடுதலாகக் கிடைக்கும். அதற்காகத் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்கு போக வேண்டும் என்றேன்” என்று பேசினார்.
1967, 1971 தேர்தல்களில் தி.மு.க.வின் வேட்பாளராக நின்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் எம்ஜியார். தி.மு.க.வின் பொருளாளரும் ஆனார். எம்ஜியார் இரசிகர் மன்றங்கள், தி.மு.க.வின் அமைப்பு நிர்வாகத்தில் முக்கிய இடம் பெற்றன. 1972இல் தனிக்கட்சி தொடங்கினார்.
தி.மு.க. நடத்திய எந்தப் போராட்டத்திலும் எம்ஜியார் கலந்து கொண்டதிலலை; சிறைக்குப் போனதில்லை!
1967இல் தி.மு.க.விடம் காங்கிரசு தோற்றுப்போன பின்னர், காமராசர் நடிகர் சிவாஜி கணேசனைக் காங்கிரசுக் கூட்டங்களில் முதன்மைப்படுத்தினார்; நடிகைப் பத்மினியை சிறப்புப் பேச்சாளராக வலம் வரச் செய்தார். மாநாடுகளில் பத்மினிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. சிவாஜி இரசிகர் மன்றங்கள் காங்கிரசு நிர்வாகத்தில் முக்கிய இடம் பெற்றன. பிறகு சிவாஜி கணேசன் தனிக்கட்சி தொடங்கினார்.
இந்தப் பின்னணியில் நடிகர் விசயகாந்து, தம் இரசிகர் மன்றங்களைத் திட்டமிட்டு கட்சி அமைப்புப் போல் நிர்வாகம் செய்து, பின்னர் கட்சி தொடங்கினார். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று விசயகாந்து கட்சி என்ற அளவில் பேசப்பட்ட அவர் கட்சி, தேர்தலில் 10 விழுக்காடு வரை வாக்கு வாங்கியது. இப்பொழுது அக்கட்சியின் செல்வாக்குக் குறைந்துவிட்டது என்பது வேறு செய்தி!
இந்தத் திரைக்கவர்ச்சி அரசியலின் தொடர்கதைப் பின்னணியில் – செயலலிதா காலமாகி, கருணாநிதி செயலிழந்துவிட்ட நிலையில், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் பெருச்சாளிகளின் கூடாரம், அவற்றிற்கு கொள்கையோ கோட்பாடோ இல்லை, பதவிவெறி - பணவெறி பிடித்தவை என்று அம்பலமாகிவிட்ட பின்னணியில் புதிய திரைக்கவர்ச்சி காட்டி அரசியல் தலைமை பிடிக்க, வரிசை கட்டி நிற்கிறார்கள் நடிகர்கள்.
இரசினிகாந்து, கமல், விசால், விசய் போன்ற நடிகர்களின் அரசியல் நுழைவை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் மட்டும் போதாது. தமிழ்நாட்டைத் தமிழ் மக்களைக் காக்க வேண்டுமெனில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தமிழர்களிடையே வளர்த்துள்ள திரைக்கவர்ச்சி அரசியலை – தனிநபர் பகை அரசியலை – ஊழல் அரசியலை – குடும்ப அரசியலைப் புரிந்து அருவருத்து ஒதுக்கும் உளவியல் இளைஞர்களிடையே வளர வேண்டும்.
அப்போதுதான் திரைக்கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து அரசியலில் மூடிசூட்டிக் கொள்ள முனையும் “நடிகர்”கள் ஓரங்கட்டப்படுவார்கள். நடிப்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்த இரசினிகாந்து, விசால் போன்ற அயல் இனத்தார் தமிழர்கள் மீது குதிரையேறத் துடிக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும். விருந்தாளியாய் வந்தவன் வீட்டுக்காரனாக மாறும் திருட்டுத் தனத்தைத் தடுக்க முடியும்.
தமிழ்நாட்டைப் போல் இந்தியாவில் வேறெங்கும் அயல் இனத்தார் போய் அரசியல் தலைமை தாங்குவதும் ஆட்சியைப் பிடிப்பதும் நடைபெறவில்லை!
தமிழ் இனத்தில் பிறந்த நடிகர் ஆனாலும், திரைக் கவர்ச்சி காட்டி அரசியல் தலைவராகிட முன் வந்தால், மலையாளிகள் பிரேம் நசீருக்குக் கொடுத்த நெருக்கடியைத் தமிழர்கள் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் அறிவுத்துறையினர், பொது நலனில் அக்கறையுள்ள அரசியலார், சிந்திக்கும் அறிவுள்ள பெரியவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் இந்தக் கடமை உண்டு! அதே வேளை மக்கள் உளவியலில் உள்ள பலவீனங்களைக் களைய வேண்டும்.
இலட்சியங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை வைத்து, அரசியல் தலைமையை ஆதரிக்கும் மனநிலையைத் தமிழர்களிடம் வளர்க்க வேண்டும். அதற்கு முதலில் தமிழர் உரிமையில் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவரும், தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொண்டாட்டத்தில் நாட்டம் கொள்வதும், கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கொள்வதும், பொதுவான மனித உளவியல். இந்த உளவியல் பலவீனத்தைத் தங்கள் பதவி ஆசைக்குப் பயன்படுத்திக் கொண்டன தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்! தமிழ்நாட்டில் பின்னர் தோன்றியப் பல கட்சிகளுக்கும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் பதவி அரசியலுக்கான வழிகாட்டிகள்!
மனித பலவீனத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பிடிக்கும் உளவியல் உத்தியும், பதவி ஆசையும் கொண்ட எல்லா கட்சிகளிடமும் இயக்கங்களிடமும் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் இது! இந்தத் தொற்று நோய் தமிழ்த்தேசிய அரசியலிலும் தொற்றிக் கொள்ளும்! எப்போதும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது தமிழ் இன உணர்வாளர்களின் கட்டாயக் கடமையாகும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment