தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
அனைத்திந்திய அளவில் நடைபெறும் வேலை வாய்ப்புத் தேர்வுகளில் வடநாட்டை மையப்படுத்தி வினாக்கள் இருக்கும். அவற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படும். ஆனால் தமிழ்நாடு அரசு நடத்திய 4ஆம் பிரிவுக்கான 9,351 பணி இடங்களுக்கான தேர்வில் தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு, மரபு, நிலம், நிகழ்ச்சி கள் புறக்கணிக்கப்பட்டு வடநாட்டை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை எழுத்தர்கள் போன்ற பணிகளில் சேர்வோர்க்கு, வடநாட்டு வரலாறு, பண்பாடு, நிலம், நிகழ்ச்சிகள் பற்றி வினாக்கள் கேட்பது எதற்காக?
“இந்தியா - மாலத்தீவு இடையிலான ஒத்திகைக்கு என்ன பெயர்?”, “இந்திய விமானப் படையிலிருந்து கழற்றி விடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன?”, “2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது?”, “மத்திய அரசு அறிவித்த பல்வேறு யோஜனாக்கள் தொடங்கப்பட்ட ஆண்டுகள் என்ன?”, “இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தேதி எது?” (இக்கேள்விக்குக் கட்டங்களில் கொடுக்கப்பட்டிருந்த விடைகள் அனைத்துமே தவறு என்பது வேறு செய்தி!).
தமிழ்நாடு அரசு, விடைத்தாள்கள் அணியம் செய்யும் பொறுப்பை யாரிடம் விட்டது? அதற்கு என்ன வழி காட்டியது? தமிழ்நாட்டுத் தேர்வர்களின் எதிர்காலத்தையே சிக்கலாக்கிவிட்ட இந்தக் கேள்வித்தாள்கள் தயாரிப்புக்கான பொறுப்பானவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.
அடுத்து, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த மையத்தில் எவ்வளவு பேர் தேர்வு எழுதினார்கள் என்ற செய்தி மர்மமாக இருக்கிறது. இராமேசுவரம் தங்கச்சிமடம் தேர்வு மையத்தில் மட்டும் மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் தேர்வெழுதியதாகத் தமிழ் நாட்டுத் தேர்வர்கள் கூறுகிறார்கள். கோவை உள்ளிட்ட பல இடங்களில் மலையாளிகள் தேர்வெழுதியதாகக் கூறுகிறார்கள். மொத்த மையங்களில் வெளி மாநிலத்தவர் தேர்வெழுதிய விவரத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.
மராட்டியம், கர்நாடகம், குசராத் மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும், மாநில அரசுப் பணி களில் 100 விகிதம் தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதவும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காடு பேர் தமிழர்களாக இருக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும், மக்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 03.02.2018 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment