தேனி தீ விபத்து சாகசமா? சதியா? - தோழர் தமிழ்ச்செல்வன்!
தேனி தீ விபத்து சாகசமா? சதியா? - தோழர் தமிழ்ச்செல்வன்!
கடந்த 11.03.2018 அன்று தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 12 பேர் காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவ்விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், தேனி மற்றும் மதுரை அரசுப் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க பேரிடர் மேலாண்மை துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் “சென்னை டிரக்கிங்க கிளப்” என்ற மலையேற்றப் பயிற்சி தனியார் தன்னார்வ நிறுவனம் தான் தேனி மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் 8 - அனைத்துலக மகளிர் நாளையொட்டி, பெண்களை மட்டுமே கொண்ட 27 பேர் குழுவினர் இம்மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அருண் மற்றும் விபின் ஆகிய மலையேற்றப் பயிற்சியாளர்கள் உடன் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தீ விபத்து தொடர்பாக, சென்னை பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரெக்கிங் கிளப் அலுவலகத்தை தேனி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன் நிறுவனரான பெல்ஜியத்தைச் சேர்ந்த பீட்டர் வேன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், ஈரோட்டை சேர்ந்த மலையேற்றப் பயிற்சியாளர் பிரபு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
“சென்னை டிரக்கிங்க கிளப்” இது குறித்து தங்கள் இணையப் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறையினரிடம் சோதனைச் சாவடியில், மலையேற்றத்துக்கு ஒரு நபருக்கு ரூ 200 வீதம் கட்டணம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசோ இவர்கள் அனுமதியின்றி மலையேறியதாகக் குற்றம்சாட்டுகின்றது!
“சென்னை டிரக்கிங்க கிளப்” நிறுவனர் பீட்டர் வேன் என்ற பெல்ஜியம் நாட்டுக்காரர், கடந்த 2015இல் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின்போது சாக்கடை அடைப்புகளையும், கழிவு நீர் பாதைகளையும் தானே நேரில் இறங்கி சுத்தம் செய்ததற்காக ஊடகங்களில் பாராட்டப்பட்டவர். “இயற்கையை நேசிக்க வேண்டும்” என்ற நோக்கில் “சென்னை டிரக்கிங் கிளப்” என்ற இலாப நோக்கற்ற மலையேற்றப் பயிற்சி தன்னார்வக் குழுவை உருவாக்கி இருந்தார்.
“சென்னை டிரக்கிங் கிளப்” போன்ற அமைப்புகள் திடீரென முளைத்தவை அல்ல! சென்னையில் இது போன்று பல மலையேற்றக் குழுக்கள் இருகின்றன. பெரு நகரங்களில் மிகுந்த மன அழுத்தத்துடன் பெருங்குழும தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஐ.டி. பணியாளர்கள் பலரும் இக்குழுவில் இணைந்து, அவ்வப்போது மலையேற்றப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்ப்பரேட்டுகளால் மலைகளும் காடுகளும் அழிக்கப்படுவது குறித்த அழுத்தமான பார்வை ஏதுமின்றி, காடுகளுக்காகவும், மலைகளுக்காகவும், அங்கு வாழும் பழங்குடி மக்களுக்காகவும் இரக்கப்படும் “கருணை”ப் பார்வையே இவர்களிடம் இருக்கிறது. எனவே, காட்டை ஓர் பொழுதுபோக்கிடமாகவும், பயன்படுத்தித் தூக்கியெறியும் நுகர் பொருளாகவும் கருதும் இளைஞர்களும் தமது சாகச உணர்வுகளுக்கு தீனிபோடும் வகையில், அவ்வப்போது இக்குழுக்களில் மலையேற்றப் பயிற்சிகளுக்கு சென்று வந்தனர். வனப்பகுதிகளில் காணப்படும் பாலீத்தீன் பைகளும், மது பாட்டில்களும் இவர்களால் வந்தவையே!
சென்னை போன்ற மாநகரங்களிலிருந்து பயிற்சிக் குழுக்களின் வழியாக, மலையேற்றப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் தேனி போன்ற காடுகளின் முழுமையான சூழலை உள்வாங்கியிருக்க வாய்ப்பில்லை. காடுகளிலேயே வாழும் பழங்குடியின மக்கள், அங்கு எந்தப் பகுதியில் தீ பிடிக்கும், எந்த திசையில் காற்றடிக்கும், எந்த பகுதியில் யானை வரும் என அந்தப் பகுதியை முழுவதுமாக அறிந்து வைத்திருப்பர்.
ஆனால், வெளியிலிருந்து செல்லும் வழிகாட்டிகளைக் கொண்டு, “சென்னை டிரக்கிங் கிளப்” இப்பயணத்தை மேற்கொண்டிருந்ததால், காட்டுத் தீ குறித்து உடனடியாக அறிந்த கொள்ள வாய்ப்பின்றி, அதில் சிக்கியுள்ளனர். இப்பயணத்திற்கு அனுமதி அளித்த தமிழ்நாடு வனத்துறை அலுவலர்கள், இதனை சரிபார்த்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயைக் கண்காணிப்பதற்காக “தற்காலிக தீ கண் காணிப்பாளர்” (Temporary Fire Watchers) என்றொரு தனி பணியாளர்களையே வனத்துறை கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக இப்பணிகளில் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்று குற்றம்சாட்டு கிறார் “பூவுலகின் நண்பர்கள்” ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ. சுந்தர்ராசன்.
தேனி காடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே வறட்சி காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ள நிலையில், வனத்துறையினர் இக்குழுவினரை தடுத்திருக்க வேண்டும். அதையும் வனத்துறை செய்யவில்லை! அதுவும் 30 பேர் கொண்ட குழுவினர் வனப்பகுதிக்குள் ஒன்றாக நுழைவதை, வனத்துறை “அனுமதிச் சீட்டு” கொடுத்து வேடிக்கை மட்டுமே பார்த்துள்ள செயல் அதிர்ச்சியளிக்கிறது.
இப்போது, தீ விபத்து ஏற்பட்டவுடன் அதற்கு முழுப் பொறுப்பையும் “சென்னை டிரக்கிங் கிளப்” குழுவினர் மீது போட்டுவிட்டு, அதன் உரிமையாளரை “கொலைகாரர்” என்று சித்தரித்துவிட்டு, தமிழ்நாடு வனத்துறையினர் தப்பித்துக் கொள்ளும் முயற்சியே நடந்து கொண்டிருக்கிறது! இதன்பின்பு விழித்துக் கொண்ட தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முழுவதும் மலையேற்றப் பயிற்சிகளுக்கு மே 31ஆம் நாள் வரை தடைவிதித்துள்ளது.
இத்தடை ஒருபுறம் சரி என்றாலும், இத்தடையைக் காரணம் காட்டி பழங்குடியின மக்களையும், மலை - காடுகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் கிராம மக்களையும் வனத்தைவிட்டுப் பிரிக்கும் முயற்சியாக இத்தடை நீண்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் நமக்கு வேண்டும். ஏற்கெனவே, இந்திய அரசு கொண்டு வந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி, பல்வேறு வனப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் நுழைவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் வாழ்விழந்து நிற்கும் சூழல் உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்னொருபுறம், காடுகளை அழித்து கபளீகரத் திட்டங்களைக் கொண்டு வரத் துடிக்கும் இந்திய அரசுக்கு, இதுபோன்ற தடைகள் உதவி செய்வதும் மறுப்பதற்கில்லை! தேனி மாவட்டத்தின் - பொட்டி புரத்தில் அம்பரப்பர் மலையைக் குடைந்து அமைக்கப் படவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்காக, மக்களை வனப்பகுதியைவிட்டு வெளியேற்றும் ஒரு சதிச் செயலாக இத் தீ விபத்து “நிகழ்த்தப்”பட்டிருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகள், இந்திய அரசின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ள அவநம்பிக்கையையே பறைசாற்றுகிறது. இதைக் கடந்து செல்லவும் முடியவில்லை!
எனவே, தமிழ்நாடு அரசு இத் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.
காலங்காலமாக பழங்குடி மக்கள் காட்டில் வாழ்ந்து வருகின்றனர். அப்போதெல்லாம், விலங்குகளால் அவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை, அவர்களாலும் விலங்குகளுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஆனால், பழங்குடி அல்லாத மக்கள் வனத்தோடு நெருங்கும் போது, வனத்தை நெருக்கடிக்குள்ளாக்கும்போது வனத்தின் பன்மைச் சூழல் அழிகின்றது.
ஊட்டி, வால்பாறை போன்ற பல வனப்பகுதிகளில் இருந்த அடர்ந்த காடுகளை, இலாபநோக்கு காபி பயிர்களுக்காகவும், சுற்றுலாவுக்காகவும் எப்போது அழிக்கப்பட்டதோ, அப்போதிருந்து, அப்பகுதிகளில் மழை வளம் குறைந்ததை நாம் எண்ணி பார்க்க வேண்டும். இந்த காடுகள் அழிப்பால், ஊட்டி, வால்பாறை, திம்பம் பகுதிகளில் பெய்த மழை, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா எல்லையில் பெய்து வருகிறது.
எனவே, மலையேற்றப் பயிற்சிகள் மலையையும், காட்டையும் நேசிக்கும் மனப்பான்மையை இளையோரிடையே உருவாக்கப்பட பயன்பட வேண்டும். பார்த்துக் களிக்கும் இடமாக மட்டுமே இவற்றைக் கருதக் கூடாது! நாம் இருக்கும் சூழலைக் கெடுக்காத வாழ்முறையை மேற்கொள்வதும், வனங்களை நேரடியாக அழிக்கும் பெருங்குழும ஆதிக்கத்திற்கெதிராகப் போராடுவதும்தான் வனங்களைப் பாதுகாக்கும் என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 16 - 31, 2018
கண்ணோட்டம் இணைய இதழ்
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
பேச: 7667077075, 98408 48594
Leave a Comment