ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களை ஊக்கப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களை ஊக்கப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம், நேற்று (09.04.2018) காவிரி வழக்கில் கூறிய முடிவுகள் நீதித்துறையின் மாண்புக்கு இழுக்கு உண்டாக்குவதாக உள்ளன.

கடந்த 16.02.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் வழங்கிய காவிரித் தீர்ப்பில் கர்நாடகம் மாதவாரியாகத் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரைக் கர்நாடக அணைகளில் திறந்துவிட்டு மூடும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று கூறாமல், “ஒரு செயல்திட்டத்தை” அமைக்க வேண்டுமென்று கூறியது. அச்செயல்திட்டத்தை தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அதாவது 29.03.2018க்குள் நிறுவ வேண்டுமென்று கூறியிருந்தது.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, அந்த “ஒரு செயல்திட்டத்தை”யும் அமைக்காமல் “செயல்திட்டம்” (Scheme) என்பதற்கு விளக்கம் கேட்டும், அதை அமைப்பதற்கு மேலும் 3 மாதம் கால நீட்டிப்பு கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை 31.03.2018 அன்று தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று கூறி, அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யுமாறு தமிழ்நாடு அரசு மனு போட்டது.

இவற்றையெல்லாம் ஒன்றாக்கி நேற்று (09.04.2018) தீபக் மிஸ்ரா ஆயம் விசாரணை நடத்தியது. தான் விதித்த காலக்கெடுவுக்குள் “செயல்திட்டம்” ஒன்றை ஏன் அமைக்கவில்லை என்று கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றம், இந்திய அரசின் இச்செயல் தனக்கு வியப்பளிப்பதாகக் கூறியது. ஆனால் அதற்காக இந்திய அரசைக் கண்டிக்கவில்லை. ஆனால், நடுவணரசு கேட்ட கால நீட்டிப்பை மறைமுகமாக அதே தீபக் மிஸ்ரா ஆயம் வழங்கியுள்ளது.

அதாவது, 2018 மே 3ஆம் நாளுக்குள் காவிரி செயல்திட்டம் பற்றிய வரைவை உச்ச நீதிமன்றத்தில் நடுவணரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த வரைவை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து தகுந்த ஆணையிடும் என்றும் கூறியுள்ளது. இதன் பொருள், மே 3ஆம் நாள் – செயல்திட்டம் குறித்த வரைவை இந்திய அரசு அளித்தாலும், அன்றே அதன் மீது தீர்ப்பு வராது! அதை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து முடிவெடுக்க பிறகொரு நாளில் வாய்தா போடும் என்பது உறுதியாகிறது. அதாவது, மே 12இல் நடைபெற வேண்டிய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அதற்குள் முடிந்து விடும்! எவ்வளவு தந்திரமான தீர்ப்பு இது !

அடுத்து, தங்களது 16.02.2018 தீர்ப்பில், “காவிரி மேலாண்மை வாரியம்” என்ற சொற்றொடரை பயன்படுத்தவில்லை என்று நேற்றைய (09.04.2018) விசாரணையில் தீபக் மிஸ்ரா கூறினார்.

அடுத்து, மிக முக்கியமான ஒரு கருத்தை தீபக் மிஸ்ரா மேற்படி விசாரணையின் போது கூறினார். 2007இல் வழங்கப்பட்ட காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு பற்றி நடுவணரசு கவலைப்பட வேண்டியதில்லை, அந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்போடு பிணைக்கப்பட்டு விட்டது என்றார். 16.02.2018 தீர்ப்பில், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரின் அளவைக் குறைத்ததைத் தவிர, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் நாங்கள் கைவைக்கவில்லை என்று கூறிய தீபக் மிஸ்ரா ஆயம், காவிரி மேலாண்மை வாரியம் என்பதை நாங்கள் கூறவே இல்லை என்று கூறுகிறது. காவிரித் தீர்ப்பாயத்தின் அதிகாரம், அதன் கட்டமைப்பு அனைத்தையும் தீர்ப்பாயம் துல்லியமாக வரையறுத்துள்ளது.

அதாவது தீர்பாயத்தின் தீர்ப்பை தீபக் மிஸ்ரா ஆயம் விழுங்கிவிட்டது என்பதை மறைமுகமாகக் குறிக்கத்தான், அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்களோ?

தமிழ்நாடு அரசு, நடுவணரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கதி என்ன? ஏன் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை?

கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் விசாரணையும் அமைந்துள்ளன. இந்த விசாரணை (09.04.2018) மேலும் கால நீட்டிப்பு வழங்கியதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதில்லை, “ஏதோவொரு செயல்திட்டம்” இந்திய அரசு அமைத்தால் போதும் என்று நேற்று (09.04.2018) கூறியதால் உற்சாகமடைந்த கர்நாடகத் தரப்பினர் 12.04.2018 அன்று நடத்தவிருந்த கர்நாடக முழு அடைப்பைக் கைவிட்டனர். உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஒளிவு மறைவின்றி கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் மோகன் காதர்க்கி 09.04.2018 அன்று கூறியுள்ளார்.

நீதிமன்றக் கட்டளையை செயல்படுத்த மறுத்த நடுவண் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது!

இவ்வளவு பாதகங்கள் இருந்தும், உச்ச நீதிமன்றத்தின் இந்த விசாரணை முடிவுகள் தமிழ்நாடு அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது இனத்துரோகச் செயலாகும்!

மே மாதம் 3-க்குப் பிறகும் கர்நாடக அணைகளைத் திறந்து மூடும் அதிகாரம் படைத்த “ஒரு செயல் திட்டத்தை” இந்திய அரசு உருவாக்காது என்பது வெள்ளிடைமலை!

இந்திய அரசமைப்புச் சட்டம், எல்சிங்கி பன்னாட்டு விதிகள், தீர்ப்பாயத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை செயல்படுத்த மறுக்கும் இந்திய அரசுக்கு எதிராக முழுமையான ஒத்துழையாமை இயக்கத்தை தமிழர்கள் கடைபிடிக்க வேண்டும். இந்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்காமல் முடக்க வேண்டும். இப்பொழுது எழுந்துள்ள தமிழர்களின் அறச்சீற்றம் சரியான திசை நோக்கி ஒருங்கிணைய வேண்டும்.

இந்தியாவில் தமிழர்கள் உரிமைப் பறிக்கப்பட்ட இனமாக – ஓர் ஒதுக்கப்பட்ட இனமாக (Apartheid) வைக்கப்பட்டுள்ளோம் என்ற உண்மையை உணர்ந்து, தமிழ்த்தேசிய உரிமைக்கு தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும்!

காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றம் நடுநிலை தவறியதுடன், இவ்வழக்கிற்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரான - பாதகமான முடிவுகளையும் 16.02.2018 தீர்ப்பில் வழங்கியுள்ளது. இதனால் அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வழக்கிற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் நிறுவ வேண்டுமென்ற இலக்கினை வரையறுத்துக் கொண்டு, இடைக்காலமாக தீர்ப்பாயம் கூறியுள்ள கட்டமைப்புடன் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மேலும் ஆவேசத்துடன் போராட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.