ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்! தோழர் பெ. மணியரசன்

தமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்! தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
தமிழ்த்தேசியம் - தனிக் கவனத்தைப் பெற்றுவரும் காலம் இது. அதை முன்வைத்து, தனித் தன்மையும் துல்லியமும் கொண்ட தத்துவமாக தமிழ்த்தேசியத்தை வளர்த்து வருகிறோம். அதன் கீழ் நாம் நடத்தும் போராட்டங்கள் - நம் கோரிக்கைகள் - நம் கருத்தியல்கள் - தனித் தன்மையாகவும் உண்மையாகவும் இருப்பதால், நம்மை மக்கள் மதிக்கிறார்கள். புதிய தோழர்களும் - புதிய ஆதரவாளர்களும் நம்முடன் சேர்கிறார்கள்.

ஏற்கெனவே செயற்களத்தில் உள்ள தமிழ்த் தேசியர்கள், மேலிருந்து கீழ் வரை - நாம் அனைவரும் - நம்மிடம் உள்ள குறைகளைக் களைந்து கொள்ள வேண்டிய நேரமும் இதுவே!

தமிழ்த்தேசியம் என்ற உயர்ந்த இலட்சியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் களப்போராளிகளாக இருக்கிறோம். கருத்தியல்களை உருவாக்குவோராக இருக்கிறோம் என்பதால் நம்மிடம் குறைகளே இல்லையென்றோ குறைகளே அண்டாது என்றோ முடிவுகட்டக் கூடாது.

தமிழ்த்தேசியர்களாகிய நாம் நம் தமிழ்ச் சமூகத்தை மறுவார்ப்பு செய்ய வேண்டும். நம்மையும் நாம் மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டும்.

தன்னை அறிதல் - தன் பணி அறிதல் இரண்டும் ஒரு சமூக இலட்சியரின் அடிப்படை! தன் மன வலிமை, தன் மனத்தூய்மை, தன் ஆற்றல், தன் குறைகள் முதலியவற்றை அறிந்து கொள்ளல் அதற்கு முதல் தேவை! இவற்றை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளும் மன ஆளுமை வேண்டும்.

தன் தகுதிகளை மிகைப்படுத்திக் கொள்ளவும் கூடாது; தன்னடக்கம் என்ற பெயரில் தாழ்த்திக் கொள்ளவும் கூடாது. உள்ளதை உள்ளபடி அறிந்து ஆற்றல்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறைகளைக்களைந்து கொள்ள வேண்டும்.

இதில் மிக மிக அடிப்படையானது மனத்தூய்மை! மனம் அழுக்குப்பட்டால் - பல கெட்ட குணங்கள் வந்து சேரும்.

மன அழுக்கை மனத்தால்தான் போக்க முடியும் - மற்றவற்றால் அல்ல! எல்லா அறத்திற்கும் மேலான அறம் - மனத்தூய்மை என்றார் திருவள்ளுவப் பெருந்தகை! அடுத்து, நமது மன உறுதிக்கேற்பதான் நமது செயல் உறுதி இருக்கும் என்றார் அவர்!

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற” - (குறள் - 661)

இத்தாலியக் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் அந்தோணியோ கிராம்சி, “ஒருவன் மனத்திலிருந்து புறப்படுகிறது புரட்சி” என்றார்.

தமிழ்த்தேசியர்கள், சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபட்டவர்களாக இருக்க வேண்டும். சாதாரண மனிதர்களிடமுள்ள பலவீனங்கள் நமக்கு இருக்கக் கூடாது என்பதே இதன் பொருள்! அதே வேளை சாதாரண மனிதர்களைத் துச்சமாகவோ, கீழானவர்களாகவோ நாம் கருதக்கூடாது. அவர்களின் உரிமைகளுக்காவும் நலன்களுக்காகவும் நாம் போராடக் கடமைப்பட்டவர்கள்.

உயர்ந்த இலட்சியங்களைப் போலியாகப் பேசுவது, அதிகார மிகை நாட்டம், குழுச் சேர்த்தல், பிரபலத்தில் மோகம் போன்ற குறைபாடுகள் பதவி அரசியல்வாதிகளிடம் இருக்கும். அவை, இலட்சிய அரசியலை முன்வைக்கும் தமிழ்த்தேசியர்களிடம் இருக்கக் கூடாது!

மக்கள் பணி ஆற்றும் அரசுக்கும், அரசியலார்க்கும் இருக்க வேண்டிய அடிப்படையாக நான்கைச் சொல்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.

1. மக்களிடமும் சக செயல்பாட்டாளர்களிடமும் அன்பு செலுத்துதல்,

2. செய்திகளைத் துல்லியமாக தெரிந்து கொள்ளுதல் மற்றும் எடுத்துச் சொல்லுதல் ஆகிய அறிவு,

3. பின்னர் நடப்பதை முன்னரே உணரும் ஆற்றல்,

4. பேராசை இல்லாமை

ஆகிய நான்கு பண்புகளையும் கொண்டவரே தெளிவானவர்!

கடமைகள்

1. தன் மனச்சான்றுக்கேற்ப தன்னால் இயன்ற தமிழ்த்தேசியப் பணிகளைச் செய்தல் வேண்டும். நடைமுறை அரசியலில் அவ்வப்போது நடைபெறும் சீரழிவுகளைக் கண்டு மனச்சோர்வு அடையக் கூடாது. அதன் காரணமாக, அக்கறைக் குறைவு ஏற்பட்டு தமிழ்த்தேசியப் பணிகளில் ஈடுபாடு குறைந்து, வேலை செய்தலைத் தவிர்த்தலும் ஒதுங்கிக் கொள்ளுதலும் கூடாது.

சமூகத்தைத் திருத்த வந்தவர்கள், சமூகத்தை மாற்ற வந்தவர்கள், தங்களால் நேரம் ஒதுக்க முடிந்தும் - தங்களால் பணியாற்ற முடிந்தும் - சாக்குப் போக்குச் சொல்லி - வேலை செய்வதிலிருந்து விடுபட்டுக் கொள்ளுதல் கூடாது. நடைபெற்றுக் கொண்டுள்ள எல்லா அரசியல் சீரழிவுகளையும் தெரிந்துகொண்டு, அதை மாற்றுவதற்கான தமிழ்த்தேசியப் பணிகளில் இறங்காமல் ஒதுங்கிக் கொள்ளுவதற்குப் பெயர் சண்டித்தனம்!

2. கூட்டாகப் பணியாற்றும் குணம்

தமிழ்த்தேசியப் பணிகளில் இறங்கும் தோழர்களுக்கு, சகதோழர்களுடன் கூட்டாக பணியாற்றும் பண்பு மிக மிக இன்றியமையாதது. தனித்திறமை இருந்தாலும் அதற்குச் சமமான திறமை இல்லாத தோழர்களுடனும் கூட்டாகச் செயல்பட வேண்டியிருக்கும். மாறுபட்ட தன்மை உடையவர்களுடன் பணியாற்றும் போது அவர்களுக்கு ஊக்கமளித்தல், மிகமிகத் தேவையான பண்பு!

தனித்திறமை இருந்தாலும் தலைக்கனம் இல்லாத அணுகுமுறையே கூட்டுச் செயல்பாட்டுக்கு வித்தாகும். சரியாக வேலை செய்யாதவர்களையும் வேலை செய்ய வைக்கும் பண்பு வேண்டும்.

நகைச்சுவைக்காக - விளையாட்டிற்காக என்று மற்றவர்களைத் தாழ்த்திக் கூறும் நகைச்சுவைகளைப் பயன்படுத்தக் கூடாது. சக தோழர்களைக் கேலி செய்யும் பகடிகளைத் தவிர்க்க வேண்டும். தன் நகைச்சுவைப் பேச்சால் பிறர் மனம் புண்படுகிறது என்று தெரிந்தால் - அவ்வாறான நகைச்சுவை பாணிகளைக் கைவிட வேண்டும்.

தமிழ்த்தேசியப் பணிகளில் ஈடுபட்டுவரும் சக தோழர்கள் மீது பொறாமை கொள்ளக் கூடாது. சக தோழர்களில் ஒருவர் தமது பங்களிப்பு காரணமாக அமைப்பில் மேல் குழுவிற்குப் போகிறார் எனில், தான் அதற்காக வருந்துதல் கூடாது. அவ்வருத்தம் பொறாமையாக மாறும்!

தான் உழைத்தும் தனக்குரிய உயர்வோ அல்லது முக்கியத்துவமோ தனது அமைப்பு தரவில்லை என்று கருதினால் கூச்சப்படாமல், தான் உறுப்பு வகிக்கும் அமைப்பில் அக்குறையைத் தெரிவிக்க வேண்டும். அமைப்பில் அக்குறையைத் தெரிவிக்காமல், அதையே காரணமாக வைத்துக் கொண்டு மன உற்சாகம் இழந்து, தமிழ்த் தேசியப் பணிகளைக் குறைத்துக் கொள்ளக் கூடாது.

பொதுவாக மனத்தில் அனைவர்க்கும் பொறாமை உணர்ச்சி இருக்கிறது. இயல்பூக்கமாய் மனிதர்களிடமுள்ள தற்காப்புணர்ச்சியில் ஒரு திரிபே பொறாமை. பண்பாளர்கள் பொறாமைக் குணத்தை விலக்கிவிடும் பக்குவம் பெற்றிருப்பார்கள்.

3. தற்செருக்கு கூடவே கூடாது. தனக்கு ஒரு சில தனித்திறமை இருக்கின்றன; மற்றவர்கள் அத்திறமைகளைப் பாராட்டுகின்றனர். அப்பாராட்டுதல்களைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை நினைத்தே மனம் உப்பி உப்பி - அது தற்செருக்காய் மாறிவிட அனுமதிக்கக் கூடாது.

“நான் தவறாகச் சிந்திக்கவே மாட்டேன், நான் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும்; என்னிடமா குறை கண்டாய்?” என்று மனக்காயம் அடையும் அள விற்கு ஆணவம் உளவியலில் உருவாகக் கூடாது.

4. அமைப்புகளின் பொறுப்புகளில் இருப்போர்க்கு அதிகாரப் போக்கு கூடாது. பொறுப்பில் இருக்கிறோம்; மேல் குழுவில் இருக்கிறோம் என்பதற்காக ஒரு தோழருக்கு அதிகார ஆணவம் வந்துவிடக் கூடாது. அதே வேளை தன் பொறுப்பில் உள்ள தோழர்களை வழி நடத்தும் அன்பும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும். அரவணைப்பும் வேண்டும்; அமைப்பு சார்பில் ஒரு சில வேளைகளில் இயக்கப் பணிகளுக்காக ஆணை இடவும் வேண்டும். இது ஒரு உளவியல் கலை!

5. தோழர்கள் அனைவரும் சமம் என்னும் போது, மேல் அமைப்புக்கு அதற்குக் கீழ் உள்ள அமைப்பு கட்டுப்பட வேண்டியது சரியா, அமைப்பு பொறுப்பா ளர்களுக்கு உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டியது சரியா என்ற வினாக்கள் எழலாம். அதிகாரமற்ற சனநாயகம் எங்கும் கிடையாது! அதுவும் உரிமை பறிக்கப்பட்ட இன மக்களின் சார்பில் அவர்களின் இறையாண்மைக்காகப் போராடும் அமைப்பு, கட்டுக் கோப்புடன் செயல்பட வேண்டியது மிக மிக இன்றியமையாத் தேவையாகும்.

அமைப்பு வழிப்பட்ட இந்தக் கட்டுப்பாட்டை தனி நபர் அதிகாரமாக - தன்னடித்த மூப்பாக ஒருவர் செயல்படுத்தக் கூடாது. அதற்கு அனுமதி இல்லை!

தோழர்களிடையே பணிகளைப் பகிரும்போது கனிவாகப் பேச வேண்டும். அதிகார தொனி கூடாது. ஒரு தோழர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர் திருத்திக் கொள்ளாவிட்டால் அமைப்பில் வைத்து திறனாய்வு செய்ய வேண்டும்.

6. அவரவர் செயல்பட்டுவரும் அமைப்புக்குள், தங்களுக்கெனத் தனிக்குழு சேர்த்துக் கொள்ளக் கூடாது. தன்னல நோக்கில் அமைப்புக்குள், தனக்கு ஆதரவான குழுவை உருவாக்கும் பணியில் யாரும் ஈடுபடக் கூடாது. உடம்பை அரிக்கும் நோய்போல் குழுச் சேர்க்கை என்பது அமைப்பை அரித்துவிடும்.

7. தொடர்ந்து கற்றல் தேவை. கேட்டல், பார்த்தல், படித்தல் எனப் பல வடிவங்களில் கற்றல் இருக்கிறது.

அன்றாடம் செய்தித்தாள் படிக்க வேண்டும். நூல்கள் படிக்க வேண்டும். புதிதாக ஒரு விவாதம் நடக்கிறது; ஒரு சிக்கல் தோன்றியுள்ளது. எனில் அதுபற்றி நூல் வந்தால் உடனடியாக அதை வாங்கிப் படிக்க வேண்டும்.

தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், இதழை தொடர்ந்து முழுமையாக படிக்க வேண்டும். தமிழர் கண்ணோட்டம் இதழின் வாசகர் கூட்டங்களை நடத்தி, தமிழ்த் தேசியக் கருத்துகளைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்கள் எனப் பல முனைகளிலிருந்து கேட்டல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தெளிவாகப் புரிந்து கொண்டால் தான், மற்றவர்களுக்கு செய்திகளைக் கூற முடியும். முதலில் கொள்முதல் அதன்பிறகுதான் வழங்குதல்!

செய்தியை - முழுமையாக - சரியாக - குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளும் கவனம் தேவை. அரை குறை கவனம் இருந்தால், அரைகுறை புரிதல் வரும். அச்செய்தியைப் பிறரிடம் சொல்லும் போதும் அரை குறையாகச் சொல்வார்கள்.

“செப்பும் வினாவும் வழாஆல் ஓம்பல்” என்கிறது தொல்காப்பியம்! ஒவ்வொரு சொல்லையும் கவனிக்க வேண்டும். கவனமாகக் கையாள வேண்டும்.

செய்தித் தொடர்பை ஆள்வோர் உலகை ஆள்வோராக உள்ளார்கள். மெய்யைப் பொய்யாக்குகிறார்கள்; பொய்யை மெய்யாக்குகிறார்கள். ஆனால் உண்மை சொல்வார்க்கு சொல்வன்மை இல்லாததால் - ஒதுக்கப்படுகிறார்கள்.

ஒரு செய்தி - ஒரு கருத்துருவாக்கம் ஆகிறது! எடுத்துக் காட்டாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விசயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்பது செய்தி! அவர் சன கன மன பாடலுக்கு எழுந்தார் - இதுவும் ஒரு செய்தி! இதில் கருத்துருவாக்கம் என்ன? தமிழ்த்தாய் வியேசந்திரருக்கு கீழானவள்! பாரதமாதா வணங்கத் தக்கவள்; வங்கமொழி போற்றத்தக்கது. அது சமற்கிருத்திலிருந்து பிறந்தது. இதுதான் சங்கரமடத்தின் கருத்து! இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் வேண்டும்!

ஆதிக்கவாதிகள் முதலில் சொல்லாயுதம் தான் ஏந்துவார்கள். ஆரியம் கட்டவிழ்த்துவிட்ட இதிகாசங்கள், புராணங்கள், கட்டுக்கதைகள் - அனைத்தும் ஆரியத்தின் மேன்மையைப் பேசுபவை.

செய்தியை - கருத்தாக்கி, கதையாக்கி, கலையாக்கி, மந்திரமாக்கி, கடவுளாக்கி, புனிதமாக்கி நம்மை வென்றார்கள்.

நம் பெயர்களை மாற்றினார்கள் - ஊர்ப் பெயர்களை மாற்றினார்கள் - கடவுள் பெயர்களை மாற்றினார்கள் - தமிழினத்தின் மீது ஆரியத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள்.

இன்று மேலை ஆரியத்தின் தலைமைப் பீடமான அமெரிக்கா மற்றும் பிரித்தானியா - பிரான்சு - செர்மனி போன்ற வல்லாதிக்க நாடுகள், உலக நாடுகளை வேட்டையாடும் - “உலக வேட்டைமயம்” செயல் திட்டத்திற்கு “உலக மயம்” என்ற கவர்ச்சிகரமான பெயர் சூட்டியுள்ளனர். எனவே, சொற்களைக் கையாளுதல் மிக முகாமையானது!

ஆரியத்துவா - “இந்துத்துவா” என்ற ஒப்பனையோடு ஏன் வருகிறது? இந்துக்கள் அனைவருக்குமான உரிமையைப் பேசுவதுபோல் ஆரியத்துவாவாதிகள் நடிக்கின்றனர். ஆனால், ஆரிய மேலாதிக்கம் மட்டுமே அவர்களின் நோக்கம்! எனவே, அவர்கள் முன்வைக்கும் ஆரிய மேலாதிக்க செயல்திட்டங்களை நாம் “இந்துத்துவா” என்று கூறாமல், “ஆரியத்துவா” என்று துல்லியப்படுத்தி கூற வேண்டும். எல்லாம் சொல்லாயுதம்!

நாம் நமக்கான சொல்லாயுதங்களை உருவாக்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும்! நம் சொல்லாயுதம் - உண்மையை உணர்த்திட - உரிமையை மீட்டிட - பொய்மையை விரட்டிட - தமிழ்த் தேசியம் மலர்ந்திடப் பயன்பட வேண்டும்.

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற இசங்கள் குறித்தப் புரிதலும் நமக்குத் தேவை! அவற்றில் நமக்கு பொருந்தாதவை எவை, பொருந்துபவை எவை என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் முதல் தேவை!

அடுத்து, ஒரு தத்துவம் என்பது வழிகாட்டவும் செய்யும் வழி மறிக்கவும் செய்யவும்! நாம் தமிழர் அறத்தின் மீது உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியத்தை முதன்மைத் தத்துவமாக கொண்டுள்ளோம்.

சாதி ஆதிக்கத்திற்கு எதிரான - ஆணாதிக்கத்திற்கு எதிரான மன நிலையைப் பெற வேண்டும். சாதிச் சிக்கல்களில், எந்தப் பக்கச்சார்பும் இன்றி, உள்ளதை உள்ளபடி கண்டுணர்ந்து, ஞாயத்தின் பக்கம் நிற்கும் அறமும், துணிவும் வேண்டும்.

தமிழ்த்தேசிய இலட்சியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ளும் மகளிர் செயல்பாட்டாளர்களை வளர்த் தெடுக்க வேண்டும். ஆணாதிக்கத்திற்கு எதிரான போக்கை, செயல்பாடுகளை ஆண் தோழர்கள் முன்னின்று கடைபிடிக்க வேண்டும்.

பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத மனநிலை உண்மையாய் வேண்டும்!

பொது இடங்களில் தன்னடக்கத்தோடும், கனிவுடனும், தமிழ்த்தேசிய இலட்சியத்தின்பால் பிறரை ஈர்க்கும் வகையிலும் நாம் பேச வேண்டும். தனிநபர் தாக்குதல்களை முன்வைக்காமல், கொள்கைகளை முன்வைத்து - செயல்பாடுகளை முன்வைத்துதான் பிறரைத் திறனாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு பேசும்போது, சிடு சிடுவென்றும் இருக்கக் கூடாது. அதே வேளை களிப்பு மனநிலையாகவே எல்லாவற்றையும் அணுகவும் கூடாது!

மாறுபட்ட கருத்தோ - செய்தியோ ஒருவர் சொன்னால் உடனே ஆத்திரப்படுவது - சினத்துடன் எதிர்வினையாற்றுவது - பதற்றப்படுவது கூடாது! அதே வேளை சரியான கருத்தை நிதானமாக - விடையாகக் கூறி, அவர்களையும் நம் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற வேண்டும்.

“போருக்கு நின்றிடும் போதும் உள்ளம் - பொங்குதல் இல்லாத அமைதி மெய்ஞானம்” என்கிறார் பாரதியார்.

தன்மதிப்பு என்ற பெயரால், தன்மானம் என்ற பெயரால் “ஈகோ” என்ற தற்செருக்கு படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல! எனவே, தமிழ்த்தேசியர்கள் தற்செருக்குக் கொள்ளக் கூடாது!

தனிநபர் தன்மானம் முக்கியம் தான் - இன உரிமை மீட்பில் - தனி நபர் தன்மானத்தைக் கூட சிறிது விட்டுக் கொடுத்து - சகிப்புத் தன்மையுடன் செயல்பட வேண்டியிருக்கும். ஆனால் தமிழின மானம் - தமிழின உரிமை ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது!

தமிழ்த்தேசிய இலட்சியத்துக்கான பயணத்தில் முன் வரிசையில் நிற்கும் தமிழ்த்தேசியர்கள், இந்தப் பண்புகளைத் தங்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசியம் என்பது வெறும் அரசியல் விடுதலை முழக்கம் மட்டுமல்ல - தமிழர்கள் தங்களை மறுவார்ப்பு செய்து கொள்ளும் இலட்சிய முழக்கமும் அதுவே!

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 1 - 15, 2018

கண்ணோட்டம் இணைய இதழ்

பேச: 7667077075, 9443918095, 98408 48594
முகநூல் : fb.com/tkannottam
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.