ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சிவகங்கை சாதிவெறிப் படுகொலை வன்கொடுமைத் தடுப்பில் கைது செய்ய வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

சிவகங்கை சாதிவெறிப் படுகொலை வன்கொடுமைத் தடுப்பில் கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இந்திய – தமிழ்நாடு அரசுகளின் துணையோடு கொண்டு வரப்பட்ட ஆபத்தான திட்டங்களை எதிர்த்து சாதி – மதங்களைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதி ஆதிக்கவாதிகளின் கொடுஞ்செயல்கள், நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன.
 
சிவகங்கை மாவட்டம் – திருப்பாச்சேத்தி அருகிலுள்ள கச்சநத்தம் கிராமத்தில், கடந்த மே 25-ஆம் நாள், பட்டியல் வகுப்பு மக்கள் கருப்பணசாமி கோயில் திருவிழாவை நடத்தியுள்ளனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் வந்தபோது, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்ததாகவும், தங்கள் முன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கால் மேல் கால் போட்டு அமர்வதா என சந்திரகுமாரின் மகன்கள் அதைத் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, சந்திரகுமார் மீது திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் கச்சநத்தம் ஆறுமுகம், சண்முகநாதன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். சந்திரகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, சந்திரகுமார் மகன் சுமன் கஞ்சா விற்பதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த புதிய வழக்கு அவர்களை மேலும் ஆத்திரப்படுத்தலாம் என உணர்ந்த கச்சநத்தம் ஒடுக்கப்பட்ட மக்கள் பழையனூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல் துறையோ மெத்தனமாக இருந்துள்ளது.
 
இந்நிலையில், கச்சநத்தம் மக்கள் அச்சப்பட்டதைப் போலவே சந்திரகுமாரின் மகன்கள் சுமன், அருண் ஆகியோர் ஆவரங்காட்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை ஒன்றுதிரட்டிக் கொண்டு, கடந்த 27.05.2018 அன்றிரவு, ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்குள் கத்தி – அரிவாள் உள்ளிட்ட கொடூரக் கருவிகளுடன் நுழைந்தனர்.
 
இக்கொடூர நிகழ்வில் அரிவாளால் வெட்டப்பட்டு எட்டு பேர் அங்கேயே படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் ஆறுமுகம் (அகவை 65), மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அறிவழகன் மகன் சண்முகநாதன் (அகவை 31), சந்திரசேகர் (அகவை 35) ஆகியோர் உயிரிழந்தனர். கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குவதற்கு முன்பாக அவர்கள் அப்பகுதியின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர்.
 
சந்திரகுமார் மீது புகார் அளித்தோர் அவ்விடத்தில் இல்லாத நிலையில்கூட, கண்மூடித்தனமாக எல்லோர் மீதும் சாதி ஆதிக்க வெறியுடன் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள செயல், தமிழ்ச்சமூகத்தின் இளையோரில் ஒரு பிரிவினரிடம் எந்தளவிற்கு சாதிய நச்சு விதைக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
 
மறுநாள் (28.05.2018) மதுரை குற்றவியல் நீதிமன்றம் 4-இல், கச்சநத்தத்தைச் சேர்ந்த சுமன், அருண், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசேசுவரன், அக்னிராஜ், அஜய்தேவன் ஆகிய ஐந்து பேர் இவ்வழக்கில் சரணடைந்தபோது, இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என வெளிப்பட்டது.
 
இப்பகுதியில் இவ்விரு சமூகங்களிடையே கடந்த மூன்றாண்டுகளாகவே மோதல்கள் நடந்து வந்துள்ளன. இந்நிலையில், உரிய நேரத்தில் செயல்பட்டு – கொலைகளைத் தடுக்கத் தவறிய காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். கச்சநத்தம் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணடைந்துள்ள சுமன் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், அவருக்கும் பிறருக்கும் பிணை வழங்காமல் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும். கொலையுண்டோர் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
 
மாவட்ட நிர்வாகம் குற்றவாளிகள் மீது பக்கச்சாய்வு இல்லாமல் நடவடிக்கை எடுப்பதோடு, இரு தரப்புக்குமிடையே பதட்டத்தைத் தணித்து, இணக்கச் சூழலை ஏற்படுத்த உடனடியாக செயல்பட வேண்டும்.
 
ஒட்டுமொத்தத் தமிழ்நாடே ஓரணியில் நின்று தற்காப்புப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில், இந்தத் தமிழின ஓர்மையை வீழ்த்த ஆரிய ஆதிக்கவாதிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு பக்கம். இன்னொருபக்கம், சாதிவெறி நஞ்சை நம் மனத்திலிருந்து அப்புறப்படுத்தி, மனத்தூய்மை பெற வேண்டும். தமிழர்கள் நாம் ஒரு தாய் மக்கள் என்ற உறவுக்கு இருதரப்பு இளையோரும் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதேவேளை சாதிவெறிக் கொலையில் ஈடுபட்டோர், அதற்குத் தூண்டியோர், துணை நின்றோர் அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.