ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அசாமில் வெளியார் கணக்கெடுப்பு தமிழ்நாட்டிலும் வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன்.

அசாமில் வெளியார் கணக்கெடுப்பு தமிழ்நாட்டிலும் வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன்  பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
அசாமில் வெளியாரை அடையாளம் கண்டு வெளியேற்றும் நடவடிக்கைக்காக அணியப்படுத்தப்பட்ட “தேசிய குடிமக்கள் பதிவேடு” (National Rigister of Citizens) இறுதி வரைவு நேற்று (30.07.2018) வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வரைவின்படி, ஏறத்தாழ 40 இலட்சம் பேர் “வெளியார்” என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் தவறு இருப்பதாகவோ, தவறாக விடுபட்டுள்ளதாகவோ கருதுபவர்கள் உரிய ஆவணங்களுடன் 2018 செப்டம்பர் 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா “சுதந்திரம்” அடைந்தபோது, 1948 சூலை 19 அன்றும், அதற்கு முன்பும் இந்தியாவில் இருந்தவர்கள் “இந்தியக் குடிமக்கள்” (Citizens of India) என வரையறுக்கப்பட்டு, 1951ஆம் ஆண்டு முதல் “தேசிய குடிமக்கள் பதிவேடு” வெளியிடப்பட்டது. 

ஆயினும், அசாமில் மண்ணின் மக்களான அசாமியர்களைவிட வெளி மாநிலத்தவர் மற்றும் வங்காளதேச மக்கள் குறிப்பாக வங்காளிகள் மிகை எண்ணிக்கையினராக மாறிவிடும் ஆபத்து நேர்ந்தபோது, அசாம் மாணவர்களின் வெளியார் எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது. 

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் முன்முயற்சியில், 1979ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம் மிகப்பெரும் மக்கள் கிளர்ச்சியாக வளர்ந்தது. இந்திய அரசு படை கொண்டு தாக்கியும், இடைவிடாத அடக்குமுறைகளை ஏவியும்கூட அப்போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. 

வேறு வழியின்றி, அன்றைய இராசீவ்காந்தி அரசாங்கம் போராடிய மாணவர் அமைப்பினருடன் 1985 ஆகத்து 15 அன்று உடன்பாடு கண்டது. இந்த “அசாம் உடன்பாடு” 1971 மார்ச் 24 – நள்ளிரவுக்குப் பிறகு அசாமுக்குள் குடியேறியோர் “வெளியார்” என வரையறுத்தது. 

இந்த “வெளியாரை” அடையாளம் காண அசாம் முழுவதும் 100 “வெளியார் தீர்ப்பாயங்கள்” (Foreigners Tribunal) நிறுவப்பட்டு, பணி தொடங்கப்பட்டது. ஆனால், விரைவிலேயே இந்திய அரசு அப்பணிகளை கிடப்பில் போட்டது. காரணம் – வங்காளிகள் காங்கிரசுக் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்கு வங்கிகளாக இருந்தனர். 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன்பேரில் மார்ச் 2015இல் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இப்பணிகள் தொடர்ந்தன. பல்வேறு கால நீட்டிப்புகளுக்குப் பிறகு 2018 சூலை 30 – என்பதை இறுதிக் கெடுவாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த இறுதிக் கெடு நாளான சூலை 30இல்தான், இந்த இறுதி வரைவு அளிக்கப்பட்டுள்ளது. 

“வெளியார்” என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் மோடி அரசும், அசாம் மாநில பா.ச.க. அரசும் “வெளியார்” என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அவர்களை “அசாமியர்களாக” சட்ட விரோதமாக அடையாளப்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை! 

அதேநேரம், “வெளியார்” என அடையாளம் காணப்பட்டுள்ள 40 இலட்சம் பேரை அவர்களது சொந்தப் பகுதியான வங்காளதேசத்திற்கோ, மேற்கு வங்காளத்திற்கோ உரிய முறையில் அனுப்பி வைப்பது இந்திய அரசின் கடமையாகும்!

அசாம் ஒப்பந்தம் நடந்து, அதனை உடனே நிறைவேற்றாமல் 43 ஆண்டுகள் கடத்தியது இந்திய அரசின் குற்றம்! 40 ஆண்டுகளாக இருந்துவிட்டார்கள், இப்போது அவர்களை வெளியேற்றச் சொல்வது ஞாயமா என்று கேட்பது ஒட்டுமொத்த அசாமியருக்கு எதிரானது; அயலாருக்குத் துணை போவது! 

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு 2018 இறுதியில் அணியப்படும்போது, அதில் அடையாளம் காணப்படும் “வெளியாரை” அசாமிலிருந்து வெளியேற்றி அவரவர் பகுதியில் குடியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த காலத்தாமதமும் இன்றி இந்திய அரசு செயல்பட வேண்டும்! 

இதே வெளியார் சிக்கல், தமிழ்நாட்டையும் கடுமையாக பாதித்து வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். கடந்த 2011ஆம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், அதன் பிறகான நடப்புகளும் தமிழ்நாடு – அசாமைவிட மிகப்பெரும் வெளியார் ஆபத்தில் சிக்கியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. (காண்க : தமிழர் கண்ணோட்டம் 2018 சூலை 1-15 ஆசிரியவுரை).

தமிழ்நாட்டில் வெளியார் குடியேற்றம் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் திருவள்ளூர், காஞ்சி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மிகையாக அதிகரித்து வருவதை பல்வேறு ஆவணங்களின் வழியாகத் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறோம். 

எடுத்துக்காட்டாக, 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையில் 86,500 பேர் இந்தி மாநிலத்தவர் இருந்திருக்கிறார்கள். 2011 கணக்கில், இவர்களது மக்கள் தொகை 3,93,380 ஆக உயர்ந்திருக்கிறது. கோவையில், இந்திக்காரர்களின் எண்ணிக்கை 7,308லிருந்து 28,049 ஆகியிருக்கிறது. மதுரையில், 1766லிருந்து 9,443 ஆக உயர்ந்திருக்கிறது. வங்காளிகள் எண்ணிக்கையும் இவர்களைவிட உயர்ந்திருக்கிறது. 

இவ்வாறு தமிழ்நாட்டில், 2001-க்கும் 2011-க்கும் இடையில் வங்காளிகளின் எண்ணிக்கை 160 விழுக்காடும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 107 விழுக்காடும் உயர்ந்திருக்கிறது. 

இது தமிழர் தாயகத்தை கலப்பின மக்கள் வாழிடமாக மாற்றிவிடும்! தமிழர்களின் வேலை வாய்ப்பை – தொழில் வாய்ப்பை – மொழி வாய்ப்பைப் பறித்துவிடும்! தமிழ்நாட்டு அரசியலில் பா.ச.க.வும் அதற்கு அடுத்தநிலையில், பிற அனைத்திந்தியக் கட்சிகளும் கோலோச்சி தமிழையும், தமிழர்களையும் அவர்களுக்கான அரசியலையும் கீழ்ப்படுத்திவிடும்! 

எனவேதான், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் வருவதை வரம்பு கட்டும் வகையில், “உள் அனுமதிச் சீட்டு முறை” (Inner Line Permit System) கொண்டு வர வேண்டும் என்றும், மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவான 1956 நவம்பர் 1–க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்தோரை “வெளியார்” என வரையறுத்து, அவர்களது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டு, அவ்வாறு “வெளியார்” என்று அடையாளப்படுத்துவோரை படிப்படியாக வெளியேற்ற சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.