காவிரி நீர் கடலில் கலப்பது வீணா? தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

காவிரி நீர் கடலில் கலப்பது வீணா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
காவிரி நீர் வீணாகக் கடலில் போய் கலக்கிறது. இதைத் தடுக்கத் தமிழ்நாட்டிலோ அல்லது கர்நாடகத்திலோ அணை கட்ட வேண்டாமா என்று சிலர் கேட்கிறார்கள்.

ஆற்றுநீர் கடலில் கலப்பதை “வீணாகக் கலக்கிறது” என்று முடிவு செய்வது ஒரு மூடத்தனம்! ஆற்று நீர் ஆண்டுதோறும் கடலில் கலந்தால்தான், கடல் உப்பு நீர் நிலத்தடியில் மேலும் மேலும் முன்னேறி உட்புகாமல் தடுக்கும்!

காவிரிச் சமவெளியில் கடல் உப்பு நீர் மேலும் மேலும் ஏறி வருகிறது. நிலத்தடி நீர் பாசனத்திற்கும் குடிக்கவும் பயன்படாமல் மாறிப் போகிறது. காரணம், ஐந்தாண்டு அல்லது எட்டாண்டுக்கு ஒருமுறைதான் மேட்டூர் அணை நிரம்பி காவிரி நீர் சிறிதளவு கடலுக்குப் போகிறது.

அடுத்து, உலகெங்கும் ஆற்று நீர் கடலுக்கு செல்வது தடுக்கப்பட்டால், கடல் நீரின் உப்புத் தன்மை அதிகமாகி மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும்; கடல் நீர் ஆவியாகி மேகமாகும் அளவும் குறைந்து, நிலக் கோளத்தில் மழைப் பொழிவு குறையும்! அதனால் வரும் பாதிப்புகள் பல!

கடலோரத்தில் ஆற்று நீர் கலக்கும் இடத்திற்கும் ஆழ்கடலுக்கும் இடையே அச்சூழலுக்கேற்ப ஒருவகை மீன்கள் உற்பத்தியாகும். ஆற்று நீர் கடலில் கலக்க வில்லையென்றால், அந்த மீன்வளம் அழியும்.

கேரளத்தில் ஓர் ஆண்டில் 2,000 ஆ.மி.க. (1 ஆ.மி.க. - 100 கோடி கன அடி) ஆற்று நீர் - அரபிக் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் ஓர் ஆண்டில் 1,000 ஆ.மி.க. நீர் அரபிக் கடலில் கலக்கிறது. ஆந்திராவில் கோதாவரி ஆற்று நீர் மட்டும் ஓர் ஆண்டில், 2,000 முதல் 3,000 ஆ.மி.க. வரை வங்கக் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு, தென்பெண்ணை ஆறுகளின் நீர் கடலில் கலப்பதில்லை. எப்போதாவது பெரும் புயல் ஏற்பட்டால் உலக அதிசயமாக அவற்றின் நீர் கடலில் கலக்கும்! வைகை ஆறு கடலில் போய்ச் சேர வழியே இல்லை. தாமிரபரணி, பெரும்பாலும் கடலில் கலப்பதில்லை.

காவிரி ஆற்றிலிருந்து தவிர்க்க முடியாமல் தப்பிச் செல்லும் நீர் ஆண்டுச் சராசரியாக 10 ஆ.மி.க.தான் எனக் காவிரித் தீர்ப்பாயம் கணித்துள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஆண்டுதோறும் தவிக்கும் தமிழ்நாடு, காவிரி ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் தடுப்பணைகள் (அதன் உயரம் சற்றொப்ப 6 அடி அளவில்) கட்டி, தண்ணீரை அங்கங்கே தேக்கி நிறுத்தலாம். இதனால் அதன் அருகே உள்ள கிளை வாய்க்கால்களில் முழு அளவில் தண்ணீரைத் திருப்பி விட முடியும். அத்துடன் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஊற்று அதிகரிக்கும். அதேபோல் ஆறுகள், வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரி கரைகளை உயர்த்த வேண்டும்.

மற்றபடி காவிரியில் தமிழ்நாட்டில் புதிய நீர்த்தேக்கம் கட்டத் தேவை இல்லை. கர்நாடகம் மேக்கேத்தாட்டில், இராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. கர்நாடகம் புதிய அணை கட்டினால் எந்தப் பெரிய வெள்ள காலத்திலும் தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மாட்டார்கள்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Related

பெ. மணியரசன் 2135111034530232797

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item