இந்தியத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியம் இருக்கிறதா? அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழி. தோழர் பெ. மணியரசன்.
இந்தியத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியம் இருக்கிறதா? அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழி. தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
“தினமணி” நாளிதழில் 01.08.2018 அன்று திரு. அர்ஜூன் சம்பத் எழுதிய “தமிழ்த்தேசியமும் இந்தியத்தேசியமும்” கட்டுரையில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் “தமிழ்நாடு” என மொழியின் பெயரால் “ஒரு தனிநாடு ஒரு தனித்தேசிய இனம் இருந்ததாகக் குறிப்பு இல்லை” என்று கூறியுள்ளார். “வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் எந்தத் தேசிய இனமும் அடையாளம் காணப்படுவதில்லை” என்றும் எழுதியுள்ளார்.
அர்ஜூன் சம்பத் தாம் கூறும் இந்துத்தேசியம் அல்லது இந்தியத்தேசியம் இரண்டிற்கும் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் தரவில்லையே ஏன்? ஏனெனில், இந்து என்பதும், இந்தியா என்பதும் மிகவும் பிற்காலத்தில் மேற்கத்தியர் சூட்டிய பெயர்கள்! தமிழ், சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற மதப்பெயரும், இந்தியா என்ற நாட்டுப் பெயரும் கூறப்படவில்லை. கூறப்படாததற்குக் காரணம் இந்து என்ற பெயரில் மதமோ, இந்தியா என்ற பெயரில் நாடோ, இந்தியர் என்ற பெயரில் இனமோ 200 ஆண்டுகளுக்கு முன் இல்லாததுதான்!
இதோ காலஞ்சென்ற பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் கூறுகிறார் :
“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது”.
- தெய்வத்தின் குரல், பாகம் – 1, பக்கம் 267.
மேலும் சொல்கிறார் :
“எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாகிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியதேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையைச் செய்திருக்கிறான்”. - அதே நூல், அதே பக்கம்.
பழங்காலத்தில் “பாரததேசம்” என்ற பெயரில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரு தேசமாக இருந்ததாக ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதற்கான இதிகாசச்சான்று, புராணச்சான்று, வரலாற்றுச் சான்று எதுவுமில்லை!
இன்று இந்தியா என்று சொல்லப்படும் நிலப்பகுதியில் பழங்காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாக “மகாபாராதம்” கூறுகின்றது.
1918இல் வெளிவந்த, “புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்” என்ற நூலில் அதன் ஆசிரியர் பி.வி. ஜகதீச ஐயர், 56 தேசங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், குருதேசம், சூரசேனதேசம் என்று தொடங்கி 56 ஆவது தேசமாக கர்னாடக தேசம் குறிப்பிடப்படுகிறது. அந்த 56இல் சீனதேசம், பாஞ்சாலதேசம், பாரசீக தேசம், காந்தார தேசம், காம்போஜ தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம் போன்றவை இருக்கின்றன. ஆனால், பாரததேசம் என்பது இல்லை!
வெள்ளைக்காரக் கிழக்கிந்திய கம்பெனி – தான் கைப்பற்றிய தனித்தனி நாடுகளை ஒற்றை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முதல் முதலாக 1773-இல் இந்தியா ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act of 1773) இயற்றியது. அதற்கு முன் இந்தியா என்ற பெயரிலோ அல்லது பாரதம் என்ற பெயரிலோ இந்த நிலப்பகுதி ஒரே நாடாக – ஒரே தேசமாக இருந்ததே இல்லை! வெள்ளைக்காரர் உள்ளிட்ட மேற்கத்தியர் சிந்து ஆற்றின் பெயரை அடையாளமாகக் கொண்டுதான் இந்தியா, இந்து என்ற பெயர்களை உருவாக்கினார்கள்.
இலக்கியங்களில் தமிழ்நாடு
தமிழ்நாடு என மொழியின் பெயரில் ஒரு நாடு, ஒரு தேசிய இனம் இருந்ததாக இலக்கியக் குறிப்பு இல்லை என்கிறார் அர்ஜூன் சம்பத். இதோ இருந்ததற்கான சான்றுகள் :
“வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்…” – புறநானூறு, 168.
“தமிழகப் படுத்த விமிழிசை முரசின்..” – அகநானூறு, 227.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்..” – பரிபாடல், 410.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய..” – சிலப்பதிகாரம், காட்சிக்காதை, 165.
“தென் தமிழ்நாட்டு அதன் பொதியில்..” – கம்பராமாயணம், சுக்ரீவன் கூற்று.
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவர்” – சேக்கிழார், பெரிய புராணம், 21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 289.
“அரும்பெறல் தமிழ்நாடுற்ற தீங்கினுக்கு” – பெரிய புராணம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 604.
தொல்காப்பியத்தில் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது 496ஆம் நூற்பா. வினாவும் அதற்கான விடையும் தவறில்லாமல் – குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்பமில்லாத வினாவுக்கும் விடைக்கும் ஓர் எடுத்துக்காட்டு கூறினார்.
“எடுத்துக்காட்டாக, நும்நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்று கூறினார்.
உன் நாடு எது என்றால் சோழ நாடு, பாண்டிய நாடு என்று சொல்வது குழப்பமானது. அப்பெயர்கள் அரச பரம்பரை சார்ந்த ஆட்சிப் பகுதிகள். அவை நாடன்று; தமிழ்நாட்டில் பல்வேறு அரசர்களின் ஆட்சி இருக்கிறது என்ற பொருளில்தான் இந்த எடுத்துக்காட்டை இளம்பூரணர் கூறுகிறார்.
தமிழர் என்ற இனப்பெயர் சங்க இலக்கியம் தொட்டு, பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகிறது.
“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து” – புறம், 19.
தலையாலங்கானம் என்ற இடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ – தமிழ்ப் படைகளை வென்றான். இரு தரப்பிலும் தமிழர்கள் போரிட்டனர். எனவே யார் எந்தப் பக்கம் போரிடுகின்றனர் என்பது குழப்பமாயிருந்தது. இங்கு தமிழ் என்றது தமிழரைக் குறித்தது.
“செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னர்” என்று “தமிழ்” என்பதைத் தமிழர் என்ற பொருளில் கூறினார் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்.
அதன்பிறகு – வந்த அப்பர் (திருநாவுக்கரசர்) “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று ஆரியரும், தமிழரும் வெவ்வேறு இரு இனத்தார் என்பதைத் தெளிவாகக் கூறினார். பூதத்தாழ்வார் “இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது” என்று தன்னைப் பெருந்தமிழனாகக் கூறி பெருமைப் பட்டார்.
எனவே இலக்கியங்களில் தமிழர் என்ற இனம் குறிக்கப்படவில்லை என்று அர்ஜூன் சம்பத் கூறுவது சரியன்று!
தேசிய இன வரையறை
“வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் தேசிய இனம் அமையாது” என்கிறார் அர்ஜூன் சம்பத். ஆனால், இவர் சார்ந்துள்ள இந்துத்துவா அமைப்பு இல்லாத இந்தியத்தேசிய இனத்திற்கு இந்தி மற்றும் சமற்கிருதம் இரண்டையும் ஏற்றாக வேண்டும் என்று நிபந்தனை போடுகிறது. இனம் (Race), தேசிய இனம் (Nationality) ஆகியவை உருவாவதற்கான முதன்மைக் கூறு தாய்மொழி! கிரேக்கர், ஆங்கிலேயர், பிரஞ்சியர், சப்பானியர் போன்ற தேசிய இனங்கள் அவரவர் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகின. அர்ஜூன் சம்பத் சொல்வதுபோல், மொழி வெறும் கருவியன்று!
தாய்மொழி, தாயகம், பண்பாடு, பொருளியல் வாழ்வு ஆகியவற்றில் பொதுத்தன்மை கொண்டு, வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் “நாம் ஓரினம்” என்ற மனப்பாங்கு வளரப் பெறுகின்றனர். இதற்கு முன் நிபந்தனையாக இனக்குழு (Ethinicity) மரபு உருவாகிறது. இனக்குழு மரபிலிருந்து ஒரு மூல மொழி தொடர்கிறது. தமிழர்களுக்கு மூலமொழியாகவும் (Dialect) வளர்ச்சியடைந்த பொது மொழியாகவும் (Standard Language) இருப்பது தமிழே!
தேசிய இன அடிப்படையில் இறையாண்மையுடன் தனித்தனி தேசங்கள் அமைவது 18 – 19ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதனால், தேசிய இன உணர்வே அதன்பிறகுதான் உருவானது என்று கொள்ளக் கூடாது. யூதர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்தது. தமிழர்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்ததால்தான், இன அடிப்படையிலான தாயக எல்லையாக வடவேங்கடம் குமரிமுனை இடையிலுள்ள தமிழ் பேசும் பகுதியை தொல்காப்பியம் பாயிரத்தில் பணம்பாரனார் கூறினார். அதேபோல், தமிழகம் – தமிழ்நாடு – தமிழர் என்ற இன உணர்வு வெளிப்பாடுகள் சங்க இலக்கியத்திலிருந்து தமிழர்களுக்குத் தொடர்கிறது.
மதம் ஒரு தேசியத்திற்கோ அல்லது தேசிய இனத்திற்கோ அடிப்படைக் கூறாக அமைவதில்லை. மதம் – ஒரு மெய்யியல் என்ற அளவில் இனம் கடந்து, மொழி கடந்து பரவும். ஐரோப்பா ஒரே கிறித்துவ தேசமாக அமையவில்லை. அரபு நாடுகள் ஒரே இசுலாமிய தேசமாக அமையவில்லை. மதம் ஒன்றாக இருந்தாலும், மொழி இன அடிப்படையில் அவை தனித்தனி நாடுகளாக இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்திலேயே இந்து மதத்திற்கு முதன்மை கொடுத்த இந்து நாடு - நேப்பாளம்! இப்போது புதிதாக வந்துள்ள அரசமைப்புச் சட்டத்தில்தான் அப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், “இந்துதேசம்” என்று இந்தியாவை அழைக்க விரும்புவோர் நேப்பாளமும் இந்தியாவும் தனித்தனி நாடாக இருப்பதை உணர வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறவில்லை. அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் குறிப்பிடுகிறது (உறுப்பு – 1). ‘இந்தியன்’ (Indian) என்ற பெயரில் ஒரு தேசிய இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. இந்தியக் குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே அது வரையறை செய்கிறது.
இல்லாத இந்திய தேசியத்தை – இந்து தேசியமாக மாற்றிக் கொண்டு, தமிழ்த்தேசிய இனம் போன்ற இயற்கையான இனங்களின் மொழி, பண்பாடு, அரசுரிமைகள் முதலியவற்றை மறுக்கக் கூடாது. இந்தியா ஒரு நிர்வாகக் கட்டமைப்பு; அதில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன.
(பின்குறிப்பு : அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழியாக, அக்கட்டுரை வந்த மறுநாளே (02.08.2018) இக்கட்டுரை தினமணிக்கு அனுப்பப்பட்டது. “தினமணி” இதழ் இக்கட்டுரையை வெளியிடாததால், இன்று (09.08.2018) இங்கு வெளியிடப்படுகிறது).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment