சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி! தோழர் பெ. மணியரசன்.
சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி! தோழர் பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
முன்னேறிய வகுப்பில் பிறந்து, பொருளியல் வகையில் பின்தங்கியுள்ளோருக்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசின் கல்வி - வேலை வாய்ப்புகளில் தனியே 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நரேந்திர மோடி அரசு அவசர அவசரமாக இராகுல் காங்கிரசின் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது. சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்து விளைவிக்கும் நுட்பமான சதிவேலையே இந்தச் சட்டம்!
தற்போது, முன்னேறிய வகுப்பினரின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப, அவர்களுக்குக் கல்வி - வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்று மோடி அரசுக்கு யார் சொன்னது? அவர்களுக்கு இப்போது இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டிய அளவுக்கு, அப்படி என்ன அவசரமும், அவசியமும் ஏற்பட்டது?
ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள், அவர்களது மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடம் பெறவில்லை என்பதை ஆராய்ந்து, அதற்குரிய கணக்கீடு களின்படியே அப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முன்னேறிய வகுப்பினரின் இட ஒதுக்கீட்டுக்கு அப்படி ஏதேனும் ஆணையம் அமைத்து ஆய்வு செய்யப் பட்டதா? இல்லை!
ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள் ஏன் பின்தங்கிப் போனார்கள்?
ஆரிய வைதீக வர்ணாசிரம தர்மம் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, மக்களிடையே சாதிப் பிளவு களை உண்டாக்கியது. உழைக்கும் மக்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்தது. அவர்களது தொழில் நுட்ப அறிவையும், உழைப்பையும் சுரண்டியது. எனவேதான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர் களது மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.
ஏன் வந்தது இடஒதுக்கீடு?
முன்னேறிய வகுப்பினரே கல்வி - வேலை வாய்ப்புகளில் நிறைந்திருந்தனர். இதன் காரணமாகவே, மற்ற வகுப்பினர் முன்னேறி வருவதற்கான ஏற்பாடாக இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15 - 16களில் இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டு, சமூக வகையிலும், கல்வியிலும் பின் தங்கியவர்களை கை தூக்கி விடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்போது, தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பாக பிராமணர்கள்தான் கோலோச்சுகின்றனர். தமிழ்நாட்டில் முன்னேறியோர் பட்டியலில் பிராமணர் அல்லாதவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலோர் இட ஒதுக்கீட்டுப் பட்டியலுக்குள் வந்துவிடுகின்றனர். மக்கள் தொகையில் பிராமணர்கள் 3 விழுக்காட்டினராக உள்ளனர். அவர் களில் பொருளியல் வகையில் பின்தங்கியவர்களுக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என சட்டம் இயற்றியுள்ளது எந்த வகையில் ஞாயம்? அவர்கள் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப கல்வியும், வேலை வாய்ப்பும் பெறவில்லை என்று இந்திய அரசு எதன் அடிப்படையில் கணக்கிட்டது?
இன்றைக்கு பிராமணரல்லாத உயர் வகுப்பினர்கூட பிராமணர்களின் அளவுக்கு பிரதிநிதித்துவம் பெறவில்லை. இந்த முன்னேறிய வகுப்பினர், எந்தக் காலத்திலாவது பிறப்பு அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்களா? கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா? பின்னர், இவர்களுக்கு ஏன் இந்த சிறப்புரிமை? இதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - இந்துத்துவா - பிராமணத்துவா!
பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தை காங்கிரசுக் கட்சி ஆதரித்து வாக்களித்தது. சி.பி.எம். - சி.பி.ஐ. கட்சிகளும் ஆதரித்துள்ளன. தேர்தலை மனத்தில் வைத்து பா.ச.க. இச்சட்டத்தைக் கொண்டு வருவதையும், அவசர அவசரமாகக் கொண்டு வருவதையும்தான் இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றனவே தவிர, இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை!
“பிராமணத்துவா” கட்சிகள்
காங்கிரசுக் கட்சி கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் எனத் தேர்தல் வாக்குறுதியே அளித்திருந்தது. அண்மையில் இராகுல்காந்தி, தன் பூணூலைக் காட்டி தான் தத்தாத்ரிய கோத்திர பிராமணன் என்று கூறி தன்னை உலகுக்கு அடையாளப் படுத்திக் கொண்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த 08.01.2019 அன்று அறிக்கை வெளியிட்ட சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு இந்தச் சட்டம் சமூகநீதிக்கு எதிரானது என்றெல்லாம் குரல் எழுப்பவில்லை. தங்கள் கட்சி முன்னேறிய வகுப்பாருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கு வதை ஆதரிக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. அவசரமாக ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று மட்டும் கேட்கிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய சி.பி.எம். கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராசன், சி.பி.ஐ. கட்சி உறுப்பினர் டி. ராஜா ஆகியோர், மாற்றுத் திட்டம் என்ற பெயரில், வெளித் தோற்றத்துக்கு எதிர்ப்பு என்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக தனியார் துறையிலும் இதே இட ஒதுக்கீடு வேண்டுமென பேசியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் “நான் முன்னேறிய வகுப்பாருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தேன்” என்று டி.கே. ரங்கராசன் கூறினார்.
இவ்வாறு, பிராமணர்களுக்காக ஒரே அணிவகுப்பில் நின்று இக்கட்சிகள் குரல் கொடுப்பதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - அதன் இன்னெரு பெயர்தான் இந்துத்துவா - அதன் அசல் பெயர்தான் பிராமணத்துவா!
இச்சிக்கலில் மட்டுமின்றி, இந்தியத்தேசியத்திற்கு முன்னுரிமை தரும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் பல்வேறு அடிப்படைச் சிக்கல்களில் காங்கிரசு - பா.ச.க. நிலை பாட்டையே கொண்டுள்ளன. பல எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. சான்றுக்கு ஒன்றே ஒன்று, இந்தியாவின் ஆட்சிமொழி இந்திதான் என்று சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளின் கொள்கை அறிக்கை கூறுகிறது.
முன்னேறிய வகுப்பில் பிறந்து பொருளியல் வகையில் பின்தங்கியவர்களைக் கணக்கிட, ‘ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள்’ என மோடி பிறப்பித்த இச்சட்டம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் என்றால், அவர்களது மாத ஊதியம் 66 ஆயிரம் ரூபாய்! ஒரு நாள் ஊதியம் 2,191 ரூபாய்! இந்த வருமானம் பெறுபவர்கள் பின்தங்கியவர்களா? அவர்களுக்கு ஏன் தனி இட ஒதுக்கீடு?
சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் வெளியிடவில்லை?
இச்சட்டம் செயலுக்கு வந்த பின், தமிழ்நாட்டில் நடைமுறையிலிருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் பிறந்தவர்கள் மதிப்பெண் அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பளித்த 31 விழுக்காட்டுப் பொதுப் பட்டியல் 21 விழுக்காடாக சுருங்கிவிட்டது!
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் மொத்த மக்கள் தொகை விகிதத்திற்குச் சமமாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சற்றொப்ப 70 விழுக்காடு வரை உள்ள பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடுதான் இட ஒதுக்கீடு உள்ளது.
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகை 56 விழுக்காடு என மண்டல் குழு கணக்கிட் டுள்ளது. அந்த 56 விழுக்காட்டினருக்கு இந்திய அரசுப் பணிகளில் 27.5 விழுக்காடுதான் ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது அளிக்கப் பட்டுள்ள 10 விழுக்காட்டை, வெறும் 3 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட பிராமணர்கள் தான் மிகப்பெரும்பான்மையாக எடுத்துக் கொள்வார்கள். அதே பிராமணர்கள், மதிப்பெண் அடிப்படையில் பெறுவதற்கு 21 விழுக்காடு பொதுப்பட்டியலும் இருக்கிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரசு ஆட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாதி வாரியாகக் கணக்கிட்டார்கள். இப்போது வரை, அந்த சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியல் வெளியிடப்படவில்லை! காங்கிரசு ஆட்சியும் வெளியிடவில்லை; பின்னர் வந்த பா.ச.க. ஆட்சியும் அதை வெளியிட வில்லை. வெளியிட்டுவிட்டால், மக்கள் தொகையில் மிகவும் குறைவாக உள்ள பிராமணர்களின் எண்ணிக்கையும் - முன்னேறிய வகுப்பார் எண்ணிக்கையும் தெரிந்துவிடும், அதேபோல் மக்கள் தொகையில் மிகப்பெரும் பான்மையான வகுப்பினர், ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொகை ஆகியோர் எண்ணிக்கை யும் தெரிந்துவிடும் என்று இக்கட்சிகள் அஞ்சுகின்றன. எனவே, இந்த இரட்டையர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத்தேசியம் அளிக்கும் சமூகநீதி பழைய “மனுநீதி”தான்!
திராவிடக் கட்சிகளின் நாடகங்கள்
தங்களை “சமூகநீதிக் காவலர்கள்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகள், சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியலை வெளியிடச் சொல்லி ஏன் போராடவில்லை?
தி.மு.க., அதிமுக. கட்சிகள் இச்சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. வரவேற்கிறோம்! ஆனால், வெறும் குரல் எழுப்பிவிட்டு அவர்கள் யாரோடு இருக் கின்றனர்? அச்சட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துள்ள காங்கிரசுடன் தி.மு.க. இருக்கிறது. இச் சட்டம் நிறைவேற பா.ச.க.வுக்கு உதவும் வகையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல், தந்திரமாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்து பா.ச.க.வுடன் நிற்கிறது.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வு, வரி வசூல் உரிமையைப் பறிக்கும் ஜி.எஸ்.டி., உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வருவது, எட்டுவழிச் சாலை அமைப்பது, காவிரிப் படுகையை நாசமாக்கி வேதி மண்டலமாக்க பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, ஏழு தமிழர் விடு தலையை எதிர்ப்பது முதலியவற்றில் எல்லா வகையிலும் எதிராக நிற்கும் காங்கிரசுடன் தி.மு.க. எதற்காக கூட்டணி சேர்ந்து நிற்கிறது? பதவிக்காக! பதவிக்காக தமிழரைக் காட்டிக் கொடுத்து, இனத்துரோகம் செய்ய இவர் களுக்குத் தயக்கமில்லை! காங்கிரசுக் கட்சியை வெளிப்படையாகக் கண்டித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையேல் காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும்! செய்வார்களா?
அ.தி.மு.க.வோ, பா.ச.க.வின் எடுபிடியாக அவர்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பதுபோல் நாடகமாடிக் கொண்டுள்ளது.
ஆக, இக்கட்சிகள் வெறும் கணக்குக் காட்டத்தான் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கை சமூகநீதி எனக் கூறிக் கொள்ளும் இக்கட்சிகள், இந்தச் சட்டத்தின் வழியே சமூகநீதிக் கோட்பாட்டையே காலி செய்துள்ள இந்தியத் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து குலாவிக் கொண்டுள்ளன.
இவற்றையெல்லாம் எதிர்க்க ஒரு மாற்று சிந்தனை - புதிய சிந்தனை தேவை! சிந்திக்கும் ஆற்றல், உண்மை களைக் கண்டறியக் கூடிய உளப்பாங்கு ஆகியவற்றோடு தமிழ் மக்கள் இதனை எதிர் கொள்ள வேண்டும். அதற்கான தத்துவமே “தமிழ்த்தேசியம்”! பிற்போக்குச் சட்டங்களை தூக்கி எரியும் ஆற்றல் நமக்கிருக்கிறது!
இந்திய அரசே! சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் இச்சட்டத் திருத்தத்தைக் கைவிடு! திரும்பப் பெறு என்று முழங்குவோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment