பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு ! அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு ! அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
திருப்பூர் ஐயா க.இரா. முத்துச்சாமி அவர்கள் பேசி ஓராண்டு ஆகப் போகிறது. கடந்த 24.03.2018 அன்று திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி அணைப்புதூர் அழகாபுரி நகரில் உள்ள திருமுருகநாத சுவாமி திருமடத்தில் பனை மரத்தின் முன்னிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்று மொழி ஆக்கும் வரை பேசா நோன்பு (மௌன விரதம்) இருக்கப் போவதாக உறுதிமொழி ஏற்றார் திருப்பூர் இயற்கை வாழ்கம் க.இரா. முத்துச்சாமி அவர்கள்! அவர்களின் எண்பதாம் அகவையின் தொடக்கம் அப்போது!
எத்தனையோ அமைப்புகள், தலைவர்கள், கலை இலக்கியப் படைப்பாளிகள், தமிழினப் போராளிகள், தாய் மொழிப் பற்றாளர்கள், ஊடகத்தார் ஐயா அவர்களைச் சந்தித்துப் பாராட்டி வருகின்றனர். அவர்களில் பலர் பேசா நோன்பைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர். ஆனால், ஐயா அவர்கள் கோரிக்கை நிறைவேறாமல் பேசா நோன்பைக் கைவிட மறுத்து விட்டார்.
நான் கடந்த 23.12.2018 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன், தோழர்கள் குமார், சிவக்குமார் ஆகி யோருடன் ஐயா முத்துச்சாமி அவர்களையும், ஐயாவின் அன்புத் துணைவியார் அம்மா சுப்புலட்சுமி அவர்களையும் திருப்பூரில் அவர்கள் இல்லத்தில் சந்தித்து நலம் கேட்டறிந்தேன்.
ஐயா அவர்கள் பேசா நோன்பைக் கைவிட்டு, இயன்றளவு வழக்கம் போல் தமிழ் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் என்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன்.
ஐயா அவர்கள் ஒரு தாளில் எழுதி எனக்கு விடையளித்தார். “நான் ஏற்கெனவே கால வரம்பற்ற உண்ணாப்போராட்டம் தொடங்கினேன். நீங்கள் உண்ணாப்போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினீர்கள். அதனால் நான் அதைக் கைவிட்டேன். இப்போதும் அப்படி வலியுறுத்தாதீர்கள். கோரிக்கை நிறைவேறாமல் பேசா நோன்பைக் கைவிட மாட்டேன்” என்று அதில் எழுதியிருந்தது. அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை!
பெரியவர் முத்துச்சாமி உள்ளாடை உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தவர். வசதி வாய்ப்புகள் உள்ளவர். அந்தத் தொழில் நிறுவனத்தை மகளிடம் ஒப்படைத்துவிட்டு, முழுநேரமும் தமிழ்ச் சமூகப் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். இளைஞரைப் போல் தமிழ்நாட்டின் பல போராட்டங்களிலும் கலந்து கொள்வார். ஓராண்டாக வீட்டில் தமிழுக்காகத் தவமிருப்பது போல் பேசா நோன்பிருக்கிறார். பேசாமல் ஓராண்டு தொடர்வது எளிய செயல் அல்ல. பெருந்துன்பம்!
தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் ஐயா அவர்களைச் சந்தித்து தமிழ்வழிக் கல்விக்கு உறுதி அளிக்க வேண்டும். குறிப்பாக, குறைகளைச் செவி கொடுத்துக் கேட்டு இயன்றதைச் செய்து வரும் தமிழ் மொழி அமைச்சர் திரு. மஃபா. பாண்டியராசன் அவர்கள் க.இரா.மு. ஐயா அவர்களைச் சந்தித்து உறுதி அளித்து அவரது பேசா நோன்பை முடித்து வைத்தால் சிறப்பாக இருக்கும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment